சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் 'கிப்லி' என்றால் என்ன? அது முதலில் எப்படி உருவானது?
BBC Tamil April 01, 2025 07:48 AM
OpenAI

கடந்த சில நாட்களாக நீங்கள் சமூக ஊடகங்களில், மேலுள்ள படத்தைப் போன்ற நூற்றுக்கணக்கான கார்ட்டூன் படங்களை பார்த்திருப்பீர்கள்.

சமூக ஊடக பயனர்கள், தங்களது புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சாட்பாட்களைக் கொண்டு இது போன்ற கார்ட்டூன் வடிவத்திற்கு மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.

இது சமூக ஊடகங்களில் 'கிப்லி ஆர்ட்' என்ற பெயரில் டிரெண்டாக மாறியது.

கிப்லி என்றால் என்ன? இதனை உருவாக்கியவர் யார்? இது ஏன் திடீரென இணையத்தில் பிரபலமானது?

X/@sama கிப்லி என்றால் என்ன?

1985 ஆம் ஆண்டு ஹயாவ் மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா ஆகியோரால் ஜப்பான் நாட்டில் 'ஸ்டூடியோ கிப்லி' என்ற பெயரில் ஒரு அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் தனித்துவமான கலைப் படைப்பே இந்த 'கிப்லி' படங்கள் ஆகும்.

ஜப்பான் மக்களின் இயல்பான தினசரி வாழ்க்கை முறையை மிகவும் நுணுக்கமாக, கையால் வரையப்பட்ட கிப்லி படங்கள் காட்டின. இந்த படங்கள் திரைப்படங்களுக்கு ஒரு புதுவிதமான அழகைத் தந்தது.

மேலும் இந்த படங்களில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் கதையின் உணர்வை வெளிப்படுத்தவும், கதாப்பாத்திரங்களின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கவும் உதவியதால் பெருவாரியான மக்களுக்கு இந்த கிப்லி படங்கள் சென்றடைந்தது.

மை நெய்பர் டோடோரோ, பிரின்சஸ் மோனோனோகே, ஸ்பிரிட்டட் அவே ஆகியவை 'ஸ்டூடியோ கிப்லி' யின் பிரபலமான அனிமேஷன் திரைப்படங்கள் ஆகும்.

இந்த கிப்லி முறையானது அனிமேஷன் திரைப்பட துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல அனிமேஷன் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் கிப்லி முறையை தங்களது படைப்புகளில் பயன்படுத்தியுள்ளனர்.

திரைப்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவை கிப்லி முறையில் உருவாக்கப்பட்டன.

X/@EPSTamilNadu எடப்பாடி பழனிசாமி பகிர்ந்த கிப்லி படம் தற்போது ஏன் பிரபலமானது?

சுமார் 40 ஆண்டு காலமாக இருந்து வரும் இந்த கிப்லி முறை தற்போது திடீரென ஏன் பிரபலமானது என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கு காரணம் சாட் ஜிபிடிதான் (Chat GPT).

சாட் ஜிபிடி சாட்பாட்டில் புதிதாக ஒரு அப்டேட் (gpt-4o) கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் ஒரு பயனர் புகைப்படங்களை அதில் பதிவேற்றம் செய்து அதனை அனிமேஷன் பாணியில் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

தனிநபர் சமூக ஊடக பயனார்களைத் தாண்டி, எடப்பாடி பழனிசாமி முதல் சச்சின் டெண்டுல்கர் வரையிலான பிரபலங்களும் தங்களது கிப்லி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் சில நிறுவனங்களும் இந்த முறையை தங்களது விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருகின்றன.

இந்த புது அப்டேட்டின் செயல்பாட்டில் உள்ள எளிமையும், பயனர்களுக்கு வசதியான அணுகல்தன்மையும் இது இவ்வளவு விரைவாக பிரபலமாவதற்கான காரணம் ஆகும்.

X/@sama ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மன் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன?

கிப்லி வேகமாக மக்கள் மத்தியில் சென்றடைந்ததால், அதிக அளவில் மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சாட் ஜிபிடி-யின் பணிச்சுமை அதிகமாகியுள்ளது என அதனை உருவாக்கியுள்ள ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள கணக்கின் முகப்பு படத்தில் கூட கிப்லி படத்தையே வைத்துள்ளார்

"சாட் ஜிபிடி மூலம் மக்கள் இதுபோன்ற படங்களை உருவாக்குவதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் GPU-க்கள் (கிராஃபிக்ஸ் கார்டுகள்) அதிக சூடாகி உருகும் நிலையில் உள்ளன. எனவே இந்த செயல்பாட்டை இன்னும் மேம்பட்ட முறையில் மாற்றும் வரை சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த உள்ளோம்", என்று சாம் ஆல்ட்மன் மார்ச் 27 ஆம் தேதி அன்று எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிறகு சாட் ஜிபிடி-யானது, அதன் இலவச பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 3 கிப்லி படங்களை உருவாக்கவே அனுமதியளிக்கிறது.

ஆனாலும் மக்கள் அதிக அளவில் இதனை பயன்படுத்தி வந்ததால் சாம் ஆல்ட்மன், "தயவுசெய்து, படங்கள் உருவாக்குவதை கொஞ்சம் குறைக்கவும். இது மிகவும் அதிக அளவில் இருக்கிறது", என்று நேற்று (மார்ச் 30) எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

தனிநபர் உரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை விதிகளை இது மீறுகிறதா?

செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ) பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த கலைப்படைப்புகள், உண்மையாக கலைஞர்களின் படைப்புகளுக்கு போட்டியாக இருக்கும் என்று ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மன் கருதுகிறார். மேலும் ஏஐ கருவிகள் மூலம் உருவாக்கப்பட்ட படைப்புகள், யாருக்கு சொந்தம் என்பது குறித்து தெளிவான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் தேவை என்று அவர் 2023 ஆம் ஆண்டில் இருந்து வலியுறுத்தி வருகிறார்.

அவரது ஓப்பன் ஏஐ நிறுவனம், பல நாடுகளில் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. சில நிறுவனங்களும் கலைஞர்களும், ஓப்பன் ஏஐ நிறுவனம் அவர்களின் பதிப்புரிமை பெற்ற படங்கள், எழுத்துக்கள், மற்றும் பிற படைப்புகளை அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மார்ச் மாத தொடக்கத்தில், அமெரிக்காவின் ஹாலிவுட்டை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் பிற படைப்பாளர்கள் செயற்கை நுண்ணறிவுக்குப் பொருந்தும் பதிப்புரிமைச் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவருமாறு அமெரிக்க அரசாங்கத்திற்கு கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதினர்.

இந்நிலையில் 'ஸ்டூடியோ கிப்லி' நிறுவனத்தின் நிறுவனரான ஹயாவ் மியாசாகியின் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலானது.

அதில், "மனிதர்களின் உண்மையான உணர்வுகளை செயற்கை நுண்ணறிவால் புரிந்துகொள்ள முடியாது. இந்த தொழில்நுட்பத்தை என்னுடைய பணியில் ஒருபோதும் நான் பயன்படுத்த விரும்பமாட்டேன். அது மனித வாழ்க்கைக்கே அவமானமானது", என்று கூறியிருந்தார்.

BBC ஹயாவ் மியாசாகி யார் இந்த ஹயாவ் மியாசாகி?

ஹயோ மியாசாகி ஜப்பானின் அனிமேஷன் துறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் உருவாக்கிய பல அனிமேஷன் திரைப்படங்கள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அவரது திரைப்படங்களில் பெரும்பாலும் இயற்கையின் முக்கியத்துவம், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு, மற்றும் போரின் அபாயங்கள் போன்றவை கருப்பொருள்களாக இருக்கும்.

அவர் 2003 ஆம் ஆண்டு ஸ்பிரிட்டட் அவே திரைப்படத்திற்காக சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான அகாடமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருதையும் வென்றார். மேலும் 2015 ஆம் ஆண்டில் வாழ்நாள் சாதனைக்கான அகாடமி விருதையும் அவர் வென்றுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.