நாடு முழுவதும் திருநங்கைகளுக்காக 18 இல்லங்கள்: மத்திய அரசு..!
Newstm Tamil April 03, 2025 11:48 AM

மக்களவையில் தூத்துக்குடி எம்.பி.கனிமொழி, திருநங்கைகளுக்கான மத்திய அரசின் இல்லங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் பி.எல்.வர்மா அளித்த பதிலின் விவரம்: ‘கரிமா கிரஹ்’ என்ற இல்லங்கள், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் ‘திருநங்கைகளின் நலனுக்கான விரிவான மறுவாழ்வுக்கான மத்திய துறை திட்டம்’ என்ற துணைத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 3, மேற்கு வங்கத்தில் 2 இல்லங்களும் மற்ற மாநிலங்களில் 1 இல்லங்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 429 திருநங்கைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் ஓர் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 20 திருநங்கைகள் தங்கியுள்ளனர். தேவைப்படும் திருநங்கைகளுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ பராமரிப்பு, யோகா, தியானம் மற்றும் விளையாட்டுகள், நூலக சேவைகள், பொழுதுபோக்குகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் இந்த இல்லங்களில் வழங்கப்படுகின்றன. இதுவரை, ‘ஸ்மைல்’ திட்டத்தின் கீழ் இந்த இல்லங்களுக்காக ரூ.6.8 கோடி விடுவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இல்லங்களில் வசிக்கும் திருநங்கைகளுக்கு மனநலம் தொடர்பான கவுன்சிலிங் கொடுப்பதற்காக ஒவ்வொரு இல்லத்துக்கும் ஒரு மனநல ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் அளிக்கும் திட்டம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மூலம் கடந்த அக்டோபர் 2022-ல் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், திருநங்கைகள் உட்பட தேவைப்படும் நபர்களுக்கு உளவியல் ஆதரவு மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்க 24 மணி நேர உதவி எண் (14416) அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, யூனியன் பிரதேச அரசுகள் மூலமாக ‘ஸ்மைல்’ திட்டம் பற்றி திருநங்கை சமூகத்தினரிடையே விளம்பரங்களும் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.