போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 3000க்கும் அதிகமானோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் இந்த பட்டியலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 247 பேர் கூடுதலாக இடம் பிடித்துள்ளனர். இந்த உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவன சிஇஒ எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 342 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 147 பில்லியன் டாலர்கள் அதிகத்திருப்பதாக போர்ப்ஸ் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனால்டு டிரம்பின் நெருங்கிய நண்பராகவும் உள்ள எலான் மஸ்க், அமெரிக்க அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளார்.
உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பர்க் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 216 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக மார்க் ஜுக்கர்பர்க் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 215 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஒராக்கில் நிறுவனத்தின் லாரி எலிசன் இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 192 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
178 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு அர்னார்டு பெர்னால்ட் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். உலகின் 3,028 பில்லியனர்களில் 406 பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. இது மொத்தத்தில் 13.4% ஆகும். கடந்த 2024 ஆண்டு இருந்ததை விட 13.3% அதிகம் ஆகும்.
உலகின் பணக்காரப் பெண்ணான வால்மார்ட் வாரிசு ஆலிஸ் வால்டன் , பிரெஞ்சு லோரியல் வாரிசு பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸை முந்தி பெண்கள் மத்தியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிக பில்லியனியர்கள் இருப்பதாகவும் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 902 பில்லியனியர்களும், சீனாவில் 516 பில்லியனியர்களும் உள்ளனர்.
இந்தியாவில் 205 பில்லியனியர்கள் இடம்பெற்றுள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு முதன்முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி பின்தங்கியுள்ளார். இப்போது உலகளவில் 18வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 92.5 பில்லியன் அமெரிக்க டலார்கள் ஆகும்.