டிரம்பின் வரி விதிப்பால் இந்தியாவில் எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது?
BBC Tamil April 03, 2025 09:48 PM
Getty Images பரஸ்பர சுங்க வரிகள் குறித்த அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது

ஒரு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி சுங்கவரி அல்லது இறக்குமதி வரி எனப்படும்.

எந்த நிறுவனம் அந்தப் பொருட்களை இறக்குமதி செய்கிறதோ, அந்த நிறுவனம் அரசுக்கு வரியைச் செலுத்துகிறது.

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குறிப்பிட்ட துறைகளைப் பாதுகாக்க நாடுகள் இத்தகைய வரிகள் விதிக்கப்படுகின்றன.

அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் அதிகமாக வரி விதித்தால், அமெரிக்காவும் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறுகிறார்.

அதன் அடிப்படையில், புதன்கிழமை இரவு அவர் பரஸ்பர சுங்க வரிகளை அறிவித்தார்.

சீனாவுடன் மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை Getty Images அமெரிக்காவின் மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் சீனாவின் பங்கு 24.7 சதவிகிதமாக உள்ளது.

அமெரிக்க அதிபர் சமமாக வரி விதிப்பது குறித்துப் பேசியதாக வர்த்தக நிபுணர் பிஸ்வஜித் தார் கூறினார். பரஸ்பர சுங்க வரிகள் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையைப் பற்றி பிஸ்வஜித் தார் குறிப்பிட்டார்.

"அமெரிக்காவால் மிகவும் சாதகமான நாடு (MFN) என்ற அந்தஸ்து வழங்கப்பட்ட நாடுகளின் விவசாயப் பொருட்களுக்கு, அமெரிக்கா சராசரியாக 5 சதவிகிதம் வரி விதிக்கிறது. ஆனால், இந்தியா, தனக்குச் சாதகமான நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் விவசாயப் பொருட்களுக்கு 39 சதவிகிதம் வரி விதிக்கிறது" என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அமெரிக்க இருசக்கர வாகனகங்களுக்கு இந்தியா 100 சதவிகிதம் வரி விதிக்கும் அதே வேளையில், அமெரிக்கா இந்திய மோட்டார் வாகனங்களுக்கு 2.4 சதவிகித வரிகளை மட்டுமே விதிக்கிறது.

அமெரிக்காவுக்கு சீனாவுடன் மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. அமெரிக்காவின் மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் சீனாவின் பங்கு 24.7 சதவிகிதமாக உள்ளது, அதே நேரத்தில் இதில் இந்தியாவின் பங்கு 3.8 சதவிகிதம் மட்டுமே.

புதிதாக அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரிகளின் ஒரு பகுதியாக, சீனா மீது 34 சதவிகிதமும், இந்தியா மீது 26 சதவிகிதமும் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதிகள் முக்கியமாக 30 துறைகளைச் சேர்ந்தவை. இதில் 6 விவசாயத் துறையைச் சேர்ந்தவை, மீதமுள்ள 24 தொழில்துறையைச் சேர்ந்தவை.

இந்தத் துறைகளில் சுங்க வரிகள் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் என்ன?

இந்தியா மீதான கடுமையான வரிகள் Getty Images இப்போது இந்தியாவில் அதிகபட்ச சுங்க வரி விகிதம் 70% ஆகும்.

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா தனது இறக்குமதிகளுக்கு சராசரியாக 17% வரி விதிக்கிறது. மறுபுறம், அமெரிக்கா 3.3% மட்டுமே வரி விதிக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள கட்டுரையின்படி, 1990-91 வரை இந்தியாவில் சராசரி வரி விகிதம் 125 சதவிகிதமாக இருந்தது.

தாராளமயமாக்கலுக்குப் பிறகு இது குறைந்து வருகிறது. 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் சராசரி வரி விகிதம் 11.66 சதவிகிதமாக இருந்தது.

இந்திய அரசு 150%, 125% மற்றும் 100% வரி விகிதங்களை ரத்து செய்துவிட்டதாக தி இந்து கட்டுரை ஒன்றை வெளியிட்டது. டிரம்ப் மீண்டும் அதிபரான பிறகு இந்திய அரசு வரி விகிதத்தை மாற்றியது.

இப்போது இந்தியாவில் அதிகபட்ச வரி விகிதம் 70%. முன்னதாக, இந்தியாவில் சொகுசு கார்களுக்கான வரி 125 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது அது 70 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் சராசரி வரி விகிதம் 2025ஆம் ஆண்டில் 10.65 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு நாடும் சுங்க வரிகளை விதிக்கிறது. இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிக வரிகளை விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

தங்கம் விலை குறையும், மொபைல் விலை அதிகரிக்கலாம் Getty Images வைரம் மற்றும் தங்கத்தின் மீது 13.32 சதவீத வரியை டிரம்ப் விதிக்கப் போகிறார்

இந்தியா 11.88 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் வைரங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தத் துறைக்கு 13.32% வரி விதிக்க உள்ளார் டிரம்ப்.

இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள், இந்தியாவில் நகைகள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களில் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு நகையின் விலை அதிகரிக்கும்.

இந்தத் துறையில் ஏற்றுமதி குறைந்தால், அதன் தாக்கம் கைவினைக் கலைஞர்களையும் வர்த்தகர்களையும் பாதிக்கலாம். இந்தியா அமெரிக்காவுக்கு 14.39 பில்லியன் டாலர் மதிப்புள்ள தொலைபேசி, தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு உபகரணங்களை விற்பனை செய்கிறது.

இதன் மீது 7.24% வரி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில் ஐபோன்கள் மற்றும் பிற மொபைல் போன்களின் விலையும் அதிகரிக்கலாம். அதேபோல், இந்தியாவிலும் பல்வேறு மொபைல் போன்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும்.

அதேநேரத்தில், இந்தியா அமெரிக்காவுக்கு 4.93 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா முதலில் அதன் மீது அதிக வரிகளை விதிக்கும். இருப்பினும், பரஸ்பர கட்டணங்கள் காரணமாக அமெரிக்காவில் துணிகளின் விலை மலிவாகின்றன. மேலும் காலணித் துறை 15.56% வரி விகித வேறுபாட்டை எதிர்கொள்ளக்கூடும்.

விவசாயத் துறையில் எத்தகைய பாதிப்பு ஏற்படும்? Getty Images உலகளவில் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா 8வது பெரிய நாடாக உள்ளது.

வேளாண் பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியா உலகில் 8வது இடத்தில் உள்ளது. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி இனிஷியேட்டிவின்படி (GTRI), அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் விவசாயப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் சராசரி வரி 37.7%.

அதே நேரத்தில் அமெரிக்கா இறக்குமதி செய்யும் விவசாயப் பொருட்களுக்கு 5.3% வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு விவசாய வர்த்தகம் ரூ.800 கோடியாக உள்ளது.

இந்தியா முக்கியமாக அரிசி, இறால், தேன், காய்கறி சார்ந்த பொருட்கள், ஆமணக்கு எண்ணெய், கருப்பு மிளகு ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா பாதாம், வால்நட், பிஸ்தா, ஆப்பிள் மற்றும் பருப்பு வகைகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இந்தியா அமெரிக்காவுக்கு 2.58 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடல் உணவுகளை ஏற்றுமதி செய்கிறது. இதற்கு அமெரிக்கா 27.83% வரை வரி விதிக்கலாம். இதனால் அமெரிக்காவில் இறால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதன் விளைவாக, ஏற்றுமதி குறையக்கூடும், மேலும் இந்தியாவில் இறால் விலை மலிவானதாக மாறக்கூடும். இதனால் இந்தத் துறையைச் சார்ந்திருப்பவர்களின் வருமானம் குறையும்.

மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கோகோ மீது 24.99% வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் அமெரிக்காவில் இந்திய இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கலாம்.

பால் பொருட்கள் மீதான 38.23% வரி வேறுபாடு, 181.49 மில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். நெய், வெண்ணெய் மற்றும் பால் பவுடரின் விலை அதிகரித்து, அவற்றின் சந்தைப் பங்கு குறைகிறது. அதனால், இவை இந்தியாவில் மலிவாகக் கிடைக்கலாம்.

சமையல் எண்ணெய் துறைக்கு 10.67% வரி விதிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால் தேங்காய் மற்றும் கடுகு எண்ணெய் விலை அதிகரிக்கும். அதன் விளைவாக, கடுகு மற்றும் தேங்காய் பயிரிடும் விவசாயிகள் பாதிக்கப்படலாம்.

இதன் காரணமாக, இந்தியாவில் கடுகு மற்றும் தேங்காய் விலை குறையக்கூடும். இது விவசாயிகளின் வருமானத்தை நேரடியாகப் பாதிக்கிறது. மறுபுறம், வரி உயர்வுகள் உற்பத்தியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், உற்பத்தி குறைந்தால் வேலைவாய்ப்பும் குறையும் என்றும் கூறப்படுகிறது.

இது ஒட்டுமொத்த பொருளாதார சுழற்சியையும் ஏதோவொரு வகையில் பாதிக்கிறது. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா பதிலளித்தால், பாதாம், வால்நட்ஸ், சோயாபீன்ஸ் போன்ற பல்வேறு பொருட்களின் விலை இந்தியாவில் உயர வாய்ப்புள்ளது.

அமெரிக்காவில் என்ன நடக்கிறது? Getty Images அடுத்த ஆண்டு சுங்க வரிகளால் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகளில் இழப்பு ஏற்படும் என்று மூடிஸ் அனலிட்டிக்ஸ் கூறுகிறது.

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள், அமெரிக்காவில் விலைகளை உயர்த்தி, நுகர்வோர் மீது சுமையை ஏற்படுத்தி, அமெரிக்க நிறுவனங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி செலவை அதிகரிக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அதற்குப் பதிலாக, மற்ற நாடுகள் விதிக்கும் வரிகள் அமெரிக்க ஏற்றுமதியாளர்களைப் பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் சுங்க வரிகளால் 0.6% சுருங்கும் என்றும், இதனால் 2.5 மில்லியன் வேலைவாய்ப்புகளில் இழப்பு ஏற்படும் என்றும் மூடிஸ் அனலிட்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கனடாவும் மெக்சிகோவும் தங்கள் இறக்குமதிகளுக்கு அமெரிக்க சந்தையை நம்பியுள்ளன என்றும், அதற்காக அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், இதனால் மந்தநிலையைத் தவிர்க்க முடியாது என்றும் மூடிஸ் அனலிட்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

அதிபர் டிரம்ப் தனது பொருளாதாரக் கொள்கைகளை வரிகளைச் சுற்றி வடிவமைத்துள்ளார். அவர் அமெரிக்காவில் வர்த்தகச் சமநிலையை ஏற்படுத்தவும், அமெரிக்க இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் விரும்புகிறார்.

கடந்த 2024ஆம் ஆண்டில் அமெரிக்கா 900 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையில் உள்ளது. மார்ச் 4ஆம் தேதியன்று அமெரிக்க காங்கிரசில் பேசிய டிரம்ப், "பூமியில் உள்ள ஒவ்வொரு நாடும் பல ஆண்டுகளாக நம்மைக் கொள்ளையடித்துள்ளது. ஆனால் இப்போது இது மீண்டும் நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நீண்ட காலத்திற்கு, சுங்க வரிகள் அமெரிக்காவின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் மற்றும் வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்கும். இது வரி வருவாயையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்று டிரம்ப் கூறினார்.

இந்த வரிகள் அமெரிக்க அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் என்றும், வரிகளின் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் பொருட்களை உற்பத்தி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் அமெரிக்காவில் 21 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் என்று மார்ச் 24 அன்று டிரம்ப் அறிவித்தார்.

மேலும், சுங்க வரிகளின் காரணமாக அவர்கள் தங்கள் செயல்பாடுகளை அமெரிக்காவுக்கு மாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.