சபரிமலை பகுதியில் மழை; பம்பை நதியில் நீர்! பக்தர்கள் இதமான குளியலுடன் ஸ்வாமி தரிசனம்!
Dhinasari Tamil April 04, 2025 02:48 PM

#featured_image %name%

சபரிமலையில் 10 நாள் நடக்கும் பங்குனி உத்திர திருவிழா செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று முதல் ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் உற்சவபலி பூஜை துவங்கியுள்ளது.

திடிரென பெய்துவரும் மழையால் பம்பை நதியில் தண்ணீர் அதிகம் வருவதால் பக்தர்கள் கோடை வெயில் காலத்தில் இதமான குளியல் போட்டு மலையேற்றம் செல்கின்றனர்.

பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை திங்கட்கிழமை மாலை திறக்கப்பட்டது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. செவ்வாய் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் வழக்கமான பூஜைகள் தொடங்கியது.

காலை 9:00 மணிக்கு பிம்ப சுத்தி பூஜைகளை தொடர்ந்து கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கொடி பட்டத்திற்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்தினார்.

தொடர்ந்து கொடி பட்டம் கோயிலை சுற்றி வலம் வந்து கொடிமரம் அருகே கொண்டுவரப்பட்டது. அங்கு பூஜைகளுக்கு பின்னர் 10:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர்.

இன்று முதல் ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக உற்சவபலி நடைபெறுகிறது. ஏப். 10- இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்தியில் எழுந்தருளுவார்.

ஏப். 11 காலை நடை திறந்த பின்னர் உஷ பூஜை நிறைவு பெற்றதும் யானை மீது சுவாமி பம்பைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மதியம் ஒரு மணிக்கு இங்கு சுவாமிக்கு ஆராட்டு நடைபெறும்.அதன் பின்னர் மதியம் 2:00 மணிக்கு பம்பை கணபதி கோயில் வளாகத்தில் ஆராட்டு தரிசனம் முடித்து சுவாமி சன்னிதானத்துக்கு திரும்பவந்ததும் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.

தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் ஏப்.14 சித்திரை விஷு பூஜைகளுக்காக நடை திறந்திருக்கும். ஏப்.18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலை வனப்பகுதியில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக திடிரென பெய்துவரும் மழையால் பம்பை நதியில் தண்ணீர் அதிகம் வருவதால் பக்தர்கள் கோடை வெயில் காலத்தில் இதமான குளியல் போட்டு மலையேற்றம் செல்கின்றனர். வடசேரிக்கரை நதி மற்றும் எருமேலி மணிமாலா நதியிலும் தண்ணீர் வருகிறது.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.