உத்தரப்பிரதேச மாநிலம் ஹரதோய் மாவட்டத்தில் பதறவைக்கும் விதமாக 15 வருஷத்திற்கு முன் கொலை ஒன்று நடந்துள்ளது. அதற்கு பழிவாங்கும் வகையில் ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் பொதுமக்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பெனிகஞ்ச் நகரில் நடந்த இந்த கொடூர சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த கொலையில் குற்றவாளியாக இருந்த 48 வயதான மஹாவத், சமீபத்தில் 15 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்த பிறகு விடுதலை செய்யப்பட்டார். அவர் மீண்டும் ஊருக்கு வந்த பிறகு கொலை செய்யப்பட்டார். மஹாவத், 2009-இல் பணம் சம்பந்தமான சிறிய தகராறில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராம்பாலை கம்பியால் அடித்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்றிருந்தார்.
அப்போது ராம்பாலின் மகன்கள் ராகுல் மற்றும் பீரு, 12 மற்றும் 10 வயதானவர்கள். தற்போது பெரியவர்களான அவர்கள், தங்களது தந்தையை கொலை செய்தவரை பழிவாங்கும் வகையில், சுமார் 30 பேர் கொண்ட ஒரு குழுவை வழிநடத்தி மஹாவத்தினை முற்றுகையிட்டு கொடூரமாக தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசார் வருவதற்குள், மஹாவத் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டபோதும் உயிரிழந்தார்.
“எங்கள் தந்தையை அவர் எப்படி கொலை செய்தாரோ, அதேபோலத்தான் நாங்களும் செய்தோம். அவர் கம்பியால் அடித்தார். நாங்களும் அதைத்தான் செய்தோம்” என இரு சகோதரர்களும் போலீசாரிடம் தயக்கம் இல்லாமல் தெரிவித்தனர். இந்த சம்பவம் சுற்றியுள்ள பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போலீசார் 18 பேரை, அதில் 7 பெண்களையும் கைது செய்துள்ளனர்.
மேலும் 12 பேர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹரதோய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீரஜ் குமார் ஜடவ், இந்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், முழுமையான விசாரணை நடைபெற்று அனைவரும் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.