தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்குச் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் சுமார் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பல சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலை இருந்தது. இதற்குத் தீர்வு காணும் வகையில், 2016-ம் ஆண்டு, FASTag நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. சுங்கச்சாவடிகளில் RFID தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கிய FASTag, சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை வெகுவாக குறைத்தது.
2014ம் ஆண்டில், சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் 734 வினாடிகளாக இருந்தது. ஆனால், 2023 ஆம் ஆண்டில், இந்த காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது. விரைவில் அதை 30 வினாடிகளாகக் குறைப்பது மத்திய அரசின் நோக்கமாக இருந்தது.
இனி ஒரு நொடி கூட காத்திருக்கத் தேவை இல்லாத வகையில், GPS மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை மத்திய அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. NavIC என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள், இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பாகும். GNSS-அடிப்படையிலான அமைப்பான இது, தரவு தேசிய எல்லைகளுக்குள் இருப்பதை உறுதிசெய்யப் பயன்படுத்துகிறது.
இந்த GNSS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலைகளில் செல்லும் வாகனங்களின் இயக்கங்களைக் கண்காணிக்க முடிகிறது. இதற்கு வாகனங்களில், ஆன்-போர்டு யூனிட்கள் (OBU) பொருத்தப்பட்டிருப்பது அவசியமாகும். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனம் நுழைந்தவுடன், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள On-Board Unit(OBU) மூலம் பயணிக்கும் தூரம் கணக்கிடப்படும்.
நெடுஞ்சாலையிலிருந்து வாகனம் வெளியேறிய உடன், எவ்வளவு தூரம் பயணம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கேற்ற கட்டணம், OBU உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு அல்லது டிஜிட்டல் வாலெட்டில் இருந்து, தானியங்கி முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.
முதற்கட்டமாக, டெல்லி-மும்பை விரைவுச்சாலை, பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலை, தங்க நாற்கர வழித்தடங்கள், டெல்லி-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு மற்றும் மேற்குப் புற விரைவுச்சாலைகள் ஆகிய 5 நெடுஞ்சாலைகளில் சோதனை அடிப்படையில் GPS மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.
முதலில், லாரிகள் மற்றும் பேருந்துகள் போன்ற வணிக வாகனங்களுக்குச் செயல்படுத்தப்படும் என்றும், அடுத்த கட்டமாக அனைத்து தனியார் வாகனங்களும் GPS முறைக்குள் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கூடுதலாக, புதிய திட்டத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், தினமும் சுமார் 20 கிலோமீட்டர் வரை கட்டணமில்லா பயணத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில் இனி, சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் ஒரு வினாடி கூட நிற்கத் தேவை இருக்காது. மக்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், சுங்கச்சாவடிகளை மேம்படுத்தும் இந்த திட்டம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.