ஜேஇஇ மதிப்பெண் மூலம் தமிழ்நாட்டில் எந்தெந்த கல்லூரிகளில் சேரலாம் தெரியுமா?
BBC Tamil April 19, 2025 05:48 PM
Getty Images

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கான ஜேஇஇ மெயின் (JEE Main) தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ஆண்டுக்கு இரு முறை நடத்துகிறது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றன.

ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 17-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் 17-ஆம் தேதி இரவில் இறுதி விடைப் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டது. அதுவும் சிறிது நேரத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இறுதியாக ஏப்ரல் 19 காலையில் JEE மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுக்குப் பின் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த தேர்வு மதிப்பெண்கள் எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

தேர்வில் தகுதி பெற்றுள்ளீர்களா என்று தெரிந்துகொள்வது எப்படி?

ஒரு மாணவர் ஜேஇஇ மெயின் தேர்வை இரண்டு முறை எழுத வேண்டுமா அல்லது ஒரு முறை எழுத வேண்டுமா என்று அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை இரண்டு முறை தேர்வை எழுதியிருந்தால், இரண்டு தேர்வு மதிப்பெண்களில் அதிகமானது எதுவோ அந்த மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை எடுத்துக் கொள்ளும்.

ஜேஇஇ மெயின் தேர்வில் தகுதி பெறுவதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் பொதுப் பிரிவினர் 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதே போன்று பிற பிரிவினருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் தீர்மானிக்கப்படும்.

கட் ஆஃப் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் தேவைகள் இரண்டையும் பூர்த்தி செய்பவர்களே தகுதிப் பெற்றவர்களாகக் கருதப்படுவர்.

ஜேஇஇ அட்வான்ஸ்ட் எழுதுவற்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை தேசிய தேர்வு முகமையும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்குத் தேவையான கட் ஆஃப் மதிப்பெண்ணை JoSAA (Joint Seat Allocation Authority) என்ற கலந்தாய்வு நடத்தும் அமைப்பும் வெளியிடும்.

JoSSA josaa.nic.in என்ற இணையத்தில் ஒவ்வொரு கல்வி நிறுவனத்துக்கும் தேவையான கட் ஆஃப் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஜேஇஇ மதிப்பெண் மூலம் எந்தெந்த கல்லூரிகளில் சேரலாம்?

ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு இந்தியாவில் சுமார் 100 அரசு கல்வி நிலையங்களில் சேர முடியும். இவை தவிர பல்வேறு தனியார் கல்லூரிகளும் ஜேஇஇ மெயின் தேர்வுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. எனினும் இந்த மதிப்பெண்களைக் கொண்டு ஐஐடி நிறுவனங்களில் சேர முடியாது.

ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு இந்தியாவில் உள்ள 30க்கும் மேற்பட்ட நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (NIT), 30க்கும் மேற்பட்ட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (IIIT), சுமார் 40 அரசு நிதி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் (GFTI) சேர முடியும்.

NITT தமிழ்நாட்டில் உள்ள ஒரே என்ஐடி கல்லூரி திருச்சியில் உள்ளது. அதில் சேர ஜேஇஇ மெயின் மதிப்பெண்கள் போதுமானது.

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே என்ஐடி கல்லூரி திருச்சியில் உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த என்ஐடி கல்லூரிகளில் ஒன்றாகக் கருதப்படும் இங்கு பி.டெக் படிப்புகளில் சேர ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்கள் போதுமானது.

இதே போன்று என்ஐடி கர்நாடகா, என்ஐடி ரூர்கேலா, என்ஐடி வாரங்கல், என்ஐடி காலிகட் உள்ளிட்ட பிற என்ஐடி கல்லூரிகளில் சேரவும் ஜேஇஇ மெயின் மதிப்பெண்கள் போதுமானது. வேறு நுழைவுத் தேர்வுகள் கிடையாது.

இதே போன்று திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (IIIT) கல்லூரியிலும் ஜேஇஇன் மெயின் தேர்வு மதிப்பெண்கள் கொண்டு சேரலாம்.

இந்தக் கல்லூரிகள் தவிர, அரசு நிதி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (GFTI) நாட்டில் பல உள்ளன. இந்த வகை கல்லூரிகளில் தமிழ்நாட்டில் பிரபலமானது காஞ்சிபுரத்தில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மேனுஃபாக்சரிங் (IITDM). இந்தக் கல்லூரியில் உள்ள பி.டெக் படிப்புகளில் சேர ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையாக உள்ளன.

மேலும் தஞ்சாவூரில் உள்ள நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபுட் டெக்னாலஜியில் (NIFTEM) உணவுத் தொழில்நுட்பத்தில் பி.டெக் படிப்பு உள்ளது.

காரைக்குடியில் சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (CECRI) என்ற கல்லூரியில் கெமிக்கல் மற்றும் எலக்ட்ரோ கெமிக்கல் படிப்புகளில் பி.டெக் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.

சேலத்தில் இந்திய கைத்தறி தொழில்நுட்பம் என்ற நிறுவனத்தில் பி.டெக் படிப்புகள் உள்ளன. ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு இந்தப் படிப்புகளிலும் சேரலாம்.

இவை உள்பட தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இந்த மதிப்பெண்களைக் கொண்டு சேரலாம்.

JoSAA கலந்தாய்வு Getty Images தஞ்சாவூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபுட் டெக்னாலஜி உள்பட தமிழ்நாட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளைக் கொண்டு சேரலாம்.

ஜேஇஇ மெயின் தேர்வு முடிகள் வந்த பிறகு, மாணவர்கள் அடுத்து கவனிக்க வேண்டியது JoSAA(Joint Seat Allocation Authority) கலந்தாய்வு. இந்தியாவில் உள்ள 31 என்.ஐ.டி, 26 ஐஐஐடி, 40 அரசு நிதி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட 121 கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான கலந்தாய்வு இது.

ஜேஇஇ மெயின் தேர்வுகளில் தகுதி பெறும் மாணவர்கள் என்ற இணையதளத்தில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம். மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். இந்தக் கலந்தாய்வு பல சுற்றுகளில் நடைபெறும்.

ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்கள் தவிர பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களும் கலந்தாய்வில் பங்குபெறுவதற்கான தகுதியாக அமையும்.

இவை மட்டுமின்றி சில தனியார் கல்லூரிகளும் ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. இவற்றில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள், ஜேஇஇ மதிப்பெண்கள் ஆகிய இரண்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

எந்தெந்த கல்லூரிகளில் எப்போது விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்று மாணவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ மெயின் மதிப்பெண்கள் அடிப்படை என்றாலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக விண்ணப்பித்தால் மட்டுமே அங்கு சேர முடியும்.

ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள்

ஜேஇஇ மெயின் தேர்வில் தகுதி பெறும் முதல் 2.5 லட்சம் பேர், ஜேஇஇ அட்வான்ஸ்ட் எழுத முடியும். அதில் தகுதி பெறுபவர்களே ஐஐடியில் சேர முடியும். 2025 ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை ஐஐடி கான்பூர் நடத்துகிறது.

இந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களின் நுழைவு அட்டைகள்(ஹால் டிக்கெட்) மே 11ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை பதிவிறக்கம் செய்வதற்கு என்ற இணையத்தில் கிடைக்கும்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.