நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினால் வெற்றி பெற முடியும் என, அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், நீட் விலக்கு என்ற பெயரில் தி.மு.க அரசு நாடகம் ஆடுவதாக, அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் விமர்சித்துள்ளன. முதலமைச்சர் கூட்டிய ஆலோசனை கூட்டத்தையும் இவ்விரு கட்சிகளும் புறக்கணித்தன.
நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்தால் பலன் கிடைக்க வாய்ப்புள்ளதா?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்ததைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு அதிகாரத்தின்கீழ் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 8) தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கும் உதவுமா என்பதைக் காணலாம்.
"ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.டி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு தீர்ப்பில் கூறியிருந்தது.
தீர்ப்பை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்து தனக்கு அதிகாரம் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி வந்ததாக குறிப்பிட்டார்.
ஆளுநர் நிராகரித்த மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே அங்கீகாரம் வழங்கிய நிலையில், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்தது.
தி.மு.க எம்.பி-யும் மூத்த வழக்கறிஞருமான வில்சனிடம் இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது பேசிய அவர், "நீட் தொடர்பாக தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்ததை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லலாம். இதைப் பற்றி தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
"அப்படியானால் நீட் விலக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு தமிழ்நாடு அரசு செல்லுமா?" எனக் கேட்டபோது, "அதை முதலமைச்சரே முடிவு செய்வார்" எனவும் வில்சன் குறிப்பிட்டார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான போராட்டம் முடிந்துவிடவில்லை. அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்" எனக் கூறினார்.
ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, முதலமைச்சரின் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் விவாதப் பொருளாக மாறியது.
ஆனால், சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நீட் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது கூட்டத்தைக் கூட்டி என்ன செய்ய முடியும்?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
'அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் தி.மு.க அரசு எடுக்கவில்லை' எனக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, 'மக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பை சரிசெய்வதற்காக ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டியுள்ளார்' என விமர்சித்துள்ளார்.
"இந்தக் கூட்டத்தால் எந்த தீர்வும் ஏற்படப் போவதில்லை. இது ஒரு நாடகம்" எனவும் அவர் கூறியுள்ளார். இதே கருத்தை முன்வைத்து தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் தனது எக்ஸ் பக்கத்தில் தி.மு.க அரசை விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் புதன்கிழமையன்று நடைபெற்ற சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டத்தைத் தொடர உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "நீட் விலக்கு தொடர்பான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, ஆயுஷ் துறை ஆகியவை கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது" எனக் கூறினார்.
"மத்திய அரசு நிராகரித்தாலும் நீட் தேர்வை விலக்குவதற்கான போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை" எனக் கூறிய முதலமைச்சர், சட்டப் போராட்டம் குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என சட்டமன்றத்தில் தான் கூறியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "உச்ச நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு, மாபெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. சட்டப் போராட்டத்தை தொய்வில்லாமல் நடத்தினால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" எனவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
"மாநில அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்ட நிலையில், மாநில அரசின் சட்டப் போராட்டம் பலன் தருமா?" என, விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.
"பொதுப்பட்டியலில் கல்வி உள்ளது. இதன்பேரில் சட்டம் இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், இதே விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் மூலம் இந்திய அரசு ஒரு சட்டத்தை இயற்றினால் அது செல்லுபடியாகும் என அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 254(1) கூறுகிறது" என்கிறார்.
நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றி அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தாலும், அதில் திருத்தம் செய்வதற்கோ, ரத்து செய்வதற்கோ மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசு சட்டம் இயற்றுவதற்கு வாய்ப்புள்ளதைப் பற்றி கடந்த 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பையும் ரவிக்குமார் மேற்கோள் காட்டினார்.
அந்த தீர்ப்பில், மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையில் குறைந்தபட்ச கல்வித்தர அளவுகோல்களை நிர்ணயித்தல் மற்றும் அதை ஒருங்கிணைத்தல் ஆகியவை முதல் அம்சமாக கூறப்பட்டுள்ளது. இது அதிகாரப் பட்டியல் 1 (மத்திய அரசின் அதிகாரம்), 66வது பிரிவில் கூறப்பட்டுள்ளது.
தர அளவுகோல்களை நடைமுறைப்படுத்துவதை இரண்டாவது அம்சமாக குறிப்பிட்டுள்ளனர். இது அதிகாரப் பட்டியல் 3ல் (பொதுப்பட்டியல்) 25வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தப் பிரிவின்கீழ் மாநிலங்களும் சட்டம் இயற்றலாம். ஆனால், இந்த இரண்டு பிரிவுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டால் அதிகார பட்டியல் 1, பிரிவு 66-ல் சொல்லப்பட்ட அதிகாரமே (மத்திய அரசின் அதிகாரம்) செல்லுபடியாகும் எனத் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார் ரவிக்குமார் எம்.பி.
"ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, நீட் தேர்வு தொடர்பாகவும் அப்படியொரு தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்க முடியாது. பொதுப் பட்டியலில் கல்வி இருக்கும் வரை இதை சட்டரீதியாக தடுப்பது கடினம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், "நீட் விலக்கு மசோதா இருமுறை நிராகரிக்கப்பட்டு விட்டதால் அதையே மீண்டும் அனுப்புவார்களா எனத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீட் விலக்கு மசோதாவுடன் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறுகிறார்.
"நீட் விலக்கு தொடர்பாக மத்திய அமைச்சரவை முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும்" எனக் கூறும் கே.எம்.விஜயன், "உயர்கல்வியை தரப்படுத்துதல் எனக் கூறி மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC) இதன் அடிப்படையில் செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்" என்கிறார்.
ஆளுநர், குடியரசுத் தலைவர் எதிர் (Vs) தமிழ்நாடு சட்டமன்றம் என்பதாக இந்த விவகாரத்தைப் பார்க்க முடியாது எனவும் கே.எம்.விஜயன் குறிப்பிட்டார்.
"மத்திய சட்டம் அல்லது விதிகளுக்கு முரணாக, மாநில அரசு சட்டம் அல்லது விதிமுறைகளை உருவாக்குவதற்கு அரசியல் சாசனத்தில் அனுமதி இல்லை" எனக் கூறுகிறார், சென்னை உயர் நீதிமன்றத்துக்கான மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ராமமூர்த்தி (central govt standing counsel).
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டதாகக் கருதலாம் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நீட் விலக்கு மசோதாவுக்கு சட்ட அந்தஸ்தை வழங்க முடியாது" எனவும் குறிப்பிட்டார்.
"பொதுப் பட்டியலில் கல்வி உள்ளது. ஆனால், 2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அதை மீறி மாநில சட்டமன்றம் இயற்றும் மசோதாவை அரசியலமைப்பின் வரம்புக்கு மீறிய ஒன்றாகவே பார்க்க முடியும்" எனக் கூறுகிறார் ராமமூர்த்தி.
"நீட் விலக்கு விவகாரத்தில் தி.மு.க அரசின் சட்டப் போராட்டம் பலன் அளிக்குமா?" என தி.மு.க எம்.பி-யும் மூத்த வழக்கறிஞருமான வில்சனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"எந்தப் போராட்டத்தை எடுத்தாலும் அதில் தீர்வு கிடைக்கும் என்று தான் போராடுகிறோம்" என அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய வில்சன், "தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்ததைக் குறிப்பிட்டோம். மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைப்பதும் குடியரசுத் தலைவர் நிறுத்தி வைப்பதும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி சரியானதல்ல எனத் தீர்ப்பு வெளிவந்துள்ளது" என்கிறார்.
"அமைச்சரவையின் ஆலோசனை என்பது சட்டத்துக்கு உட்பட்டது. அதை ஏற்காமல் நீதியின் பாதையில் இருந்து விலகிச் செல்ல முடியாது. இந்த விவகாரத்தில் வெளிச்சம் வராது எனக் கூற முடியாது" எனவும் வில்சன் தெரிவித்தார்.
அதேநேரம், இந்த விவகாரத்தில் மாற்று தீர்வு ஒன்றையும் ரவிக்குமார் எம்.பி முன்வைக்கிறார். நீட் தேர்வின் மூலம் சமமான வாய்ப்பு மறுக்கப்படுவது தொடர்பாக நீதிபதி பொன்.கலையரசன் ஆணையம் முன்வைத்த பரிந்துரைகளை அவர் குறிப்பிட்டார்.
"அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் கிராமப்புற பள்ளிகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு உள்பட பல அம்சங்களை ஆணையம் தெரிவித்திருந்தது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகித உள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு பொன்.கலையரசன் கமிட்டி பரிந்துரை செய்தது" எனக் கூறுகிறார் ரவிக்குமார்.
பொன்.கலையரசன் குழுவின் பரிந்துரைகளை ஏற்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
"இதை 10 சதவிகிதமாக தமிழ்நாடு அரசு உயர்த்த வேண்டும். அதற்கென தனியாக சட்டம் இயற்ற வேண்டிய தேவையில்லை, அரசாணை மூலமாகவே செய்துவிட முடியும்" எனவும் ரவிக்குமார் எம்.பி குறிப்பிட்டார்.
இந்தியாவில் மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதற்காக பொது நுழைவுத் தேர்வை நடத்துவது தொடர்பான பரிந்துரையை 2010 ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் அளித்தது.
அதன்படி, 2012 ஆம் ஆண்டு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்' (National Eligibility cum Entrance Test) நடத்தப்பட்டது.
இதனை சில மருத்துவக் கல்லூரிகள் ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தன. வழக்கின் முடிவில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் கவுன்சிலின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. வழக்கின் முடிவில் இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வை நடத்தி அதன் அடிப்படையில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை நடத்துமாறு தீர்ப்பு வெளியானது.
இதனை செயல்படுத்துவதில் தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களுக்கு ஓராண்டு விதிவிலக்கு வழங்கப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்யுமாறு 2017 ஆம் ஆண்டு அ.தி.மு.க அரசு சட்ட மசோதாவை கொண்டு வந்தது. ஆனால், அவற்றை ஏற்காமல் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார்.
தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு தோல்வி மற்றும் அச்சத்தால் தற்போது வரை சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் நீட் தேர்வு எதிர்ப்பை பிரதானமாக தி.மு.க முன்வைத்தது.
'புதிய அரசு அமைந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம்' என்ற வாக்குறுதியை தி.மு.க கொடுத்தது. அதன்படி, தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் நீட் தேர்வு தொடர்பாக ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. ஆனால், அவர் நிராகரித்துவிட்டார். மீண்டும் 2022, பிப்ரவரி 8 ஆம் தேதியன்று அதே மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில், அதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அதுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
இந்த மசோதாவை உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்திருந்த நிலையில், அதையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு