அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கி சூடு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஹூஸ்டன் நகரில் வசித்து வந்த டிவினா என்ற பெண் தனது 3 குழந்தைகளுடன் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்த போது, அந்தப் பெண்ணின் 7 வயதுடைய மகனும், அவரது சகோதரரும் பிரபல சிக்கன் கடையில் சிக்கன் நகெட்ஸை சாப்பிடுவதற்கு வேகமாக மேல்மாடிக்கு சென்றுள்ளனர்.
அப்போது அந்தப் பகுதியின் அருகே நடந்து கொண்டிருந்த துப்பாக்கிச் சண்டையின்போது வந்த புல்லட் ஒன்று மாடி கண்ணாடி கதவை உடைத்துக் கொண்டு 7 வயது சிறுவனின் தலையில் பாய்ந்தது.
உடனே சிறுவனின் சகோதரர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவனும் கத்தி கூச்சலிட்டதால் பதறி அடித்த டிவினா தனது மகனை ரத்த வெள்ளத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அருகில் உள்ள மெமோரியல் ஹெர்மன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிறுவனின் தலையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவன் இருப்பதாகவும், ஆனால் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூடு குறைந்தது 2 தரப்பினருக்கு இடையே நடைபெற்றிருக்கலாம்.
ஏனெனில் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள், வேலிகளில் பலவிதமான துப்பாக்கித் துளைகள் ஏற்பட்டுள்ளன என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். ஆனால் சம்பவத்தை நேரடியாக பார்த்தவர்கள் யாரும் இல்லை என்பதால் குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.