தில்லி எயிம்ஸ் மருத்துவமனையில் உள்ள மகளிர் டாக்டர்கள் விடுதியிலிருந்து நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வில், ஒரு பெண் டாக்டர் உடையில் நடித்தவாறு விடுதி வளாகத்தில் நடமாடி திருடியது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் போலீசார் விசாரணையில், 43 வயதான மருத்துவ ஆய்வக உதவியாளராக பணியாற்றிய ஒருவரை கைது செய்தனர். அவர் ரூ.10,000க்கு மேல் மதிப்புள்ள நகைகளும் பணமும் திருடியுள்ளார்.
மார்ச் 27ஆம் தேதி, ஒரு பெண் டாக்டர் தனது அறையிலிருந்து நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணை ஆரம்பித்தனர்.
100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், டாக்டர் போல நடித்து விடுதி வளாகத்தில் சந்தேகமாக நடமாடிய பெண் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது. பல அறைகளைத் திறக்க முயற்சித்த அந்த பெண் பின்னர் ஸ்கூட்டரில் சென்று விட்டதையும் காட்சிகள் காட்டியது.
அந்த ஸ்கூட்டரின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு போலீசார் காசியாபாத்தின் ப்ரிஜ் விஹார் பகுதியில் உள்ள முகவரியைக் கண்டுபிடித்து, அந்தப் பெண்ணை கைது செய்தனர்.
விசாரணையில், அந்த பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நகைகள் மீது அதிக விருப்பம் இருந்தாலும், வாங்கக்கூடிய அளவுக்கு பணம் இல்லாததால் இத்தகைய திருட்டுகளுக்கு ஆளானதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், முன்னதாகவும் பல இடங்களில் இதுபோன்ற திருட்டுகள் செய்துள்ளதையும் போலீசார் தெரிவித்தனர்.