மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?
BBC Tamil April 06, 2025 11:48 PM
Alamy

டோனகல் கடற்கரையில் அமைந்துள்ளது கார்களே இல்லாத இந்தத் தீவு. இங்கு கடைசியாக 1970களில்தான் மக்கள் நிரந்தரமாக ஆண்டு முழுக்க வசித்தனர்.

இப்போது தொலைந்துபோன இந்தத் தீவின் வாழ்க்கை முறையை மீண்டும் உயிர்ப்பிக்க மக்கள் முயல்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக சாகசத்தை விரும்பும் பயணிகளும் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்.

வெள்ளிக்கிழமை இரவு, இந்த ஓயி (Owey) தீவில் தங்கியபோது, கடந்த கால அயர்லாந்தில் வாழ்வது போன்ற உணர்வு ஏற்பட்டது.

இந்தத் தீவில் சிறிய குழுவாக வசிக்கும் மக்கள் அன்று பிடித்த மீன்களைப் பரிமாறிக் கொண்டும், சிறிய வேலைகளைச் செய்துகொண்டும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.

வளர்ப்பு நாய்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. கோழிகளும் மேய்ந்து கொண்டிருந்தன. கடலின் இரைச்சலும் நாணல்களின் சலசலப்பும் மக்களின் அமைதியான உரையாடலுடன் கலந்து கரைகிறது.

- Julie Diamond கடந்த 1970களில் கைவிடப்பட்ட இந்த ஓயி தீவு, இப்போது சுமார் 20-30 பேரின் தாயகமாக உள்ளது

அட்லான்டிக் பெருங்கடலில், மேற்கு டோனகல் கடற்கரையில் அமைந்துள்ள, தொலைதூரத் தீவான ஓயி ஒரு குறுகிய பாலம் வழியாக பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள க்ரூட் தீவிலிருந்து, படகு மூலம் சுமார் 15 நிமிடங்களில் செல்லக்கூடிய தொலைவில் உள்ளது.

ஓயி தீவுக்கு பொதுப் போக்குவரத்து சேவை இல்லை, மக்கள் தனியார் படகு மூலம் மட்டுமே தீவை அடைய முடியும். அங்கு மின்சாரம் அல்லது பாய்ந்தோடும் நீர் அமைப்பும் இல்லை. எனவே பிரதான நிலப்பகுதியில் இருந்து மின்னும் விளக்குகள் மட்டுமே நாகரிகத்தையும், நவீன கால சமூக அழுத்தங்களையும் குறிக்கின்றன.

இந்தத் தீவில் கடைசியாக 1970களில் மக்கள் நிரந்தரமாக வசித்து வந்தபோது, சுமார் 100 குடியிருப்பாளர்களும், 30 குடும்பங்களும் வசித்து வந்தன.

ஆனால், பிரதான நிலப்பரப்பில் அல்லது நகரங்களில் கிடைத்த நவீன வசதிகள் தீவின் மக்கள்தொகை குறைவதற்கு வழிவகுத்தது.

கடைசியாக மீதமிருந்த தீவுவாசிகளும் 1977இல் வெளியேறினர். அதனால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தத் தீவு கைவிடப்பட்ட ஓர் இடமாக இருந்தது.

'தீவை அடைவது கடினம்'

நான் ஓயி தீவில், 'வைல்ட் வுமன் ஆஃப் தி வுட்ஸ்' (வடக்கு அயர்லாந்து) என்ற அமைப்புடன் விடுமுறை நாட்களைக் கழித்தேன். இது 4,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு.

இது அயர்லாந்து முழுவதிலும் இருந்து வரும், சாகசப் பயணங்களை விரும்பும் பெண்களை ஒன்றிணைக்கும் அமைப்பு.

காடுகள், ஆளில்லா தீவுகள் போன்ற சூழல்களில் இயற்கையையும் சாகசத்தையும் ஒன்றாக அனுபவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அமைப்பு. இந்த அமைப்பை நிறுவிய இயற்கை ஆர்வலர் ரேச்சல் பெடர், 'ஒரு வழக்கமான பகுதியாக இல்லாமல், பெரும்பாலான மக்கள் அணுக முடியாத இடத்திற்கு உறுப்பினர்களை அழைத்துச் செல்ல' விரும்பினார்.

"இந்தத் தீவுக்குச் செல்வது கடினம். வேறு தீவுகளுக்கு என்றால் நீங்கள் ஒரு படகில் ஏறிச் சென்று, அங்கு சுற்றித் திரிந்து தங்கலாம். ஆனால் ஓயி தீவு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தது. இது அவர்களின் தீவு என்பதை உணர்ந்து, நீங்கள் அதை மிகவும் மதிக்க வேண்டும். அவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்பவர்கள் அங்கு வரவேற்கப்படுகிறார்கள்" என்று விளக்கினார் ரேச்சல்.

Getty Images இந்தத் தீவு 25 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்ட ஓர் இடமாக இருந்தது

ஓயி தீவின் மறுமலர்ச்சிக்கு முன்னோடியாக இருந்தவர்களில் ஒருவரான பால் கோவன், தனது டீனேஜ் பருவத்தை ஓயி தீவில் கழித்தார். 1970களின் முற்பகுதியில் பெல்ஃபாஸ்டின் தெருக்களில் ஏற்பட்ட அமைதியின்மையில் இருந்து தப்பிக்க தனது குடும்பத்தினருடன் இங்கு குடிபெயர்ந்தார்.

"என் அம்மா ரட்லேண்ட் தீவைச் சேர்ந்தவர், அது இதற்கு அடுத்துள்ள ஒரு தீவு," என்று கோவன் கூறினார்.

"நகரத்தில் சிக்கல்கள் மிகவும் மோசமானபோது, என் தந்தை ஒரு தீவில் ஒரு வீட்டை வாங்குவதே சிறந்த வழி என்று நினைத்தார். அவ்வளவுதான், நாங்கள் அனைவரும் (ஓயி தீவுக்கு) குடிபெயர்ந்தோம்."

திருமணத்திற்குப் பிறகு, தனது குடும்பத்துடன் மீண்டும் பெல்ஃபாஸ்டுக்கு திரும்பினார் கோவன். 2000களின் முற்பகுதியில், கோவனும் அவரது சகோதரரும் தங்களது பிள்ளைகளை ஒரு சுற்றுலாவுக்காக, ஓயி தீவுக்கு படகு மூலம் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.

அட்லான்டிக் காற்றின் தாக்கத்தாலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் புறக்கணிக்கப்பட்டதாலும், தீவின் பல வீடுகள், கட்டடங்கள் பாழடைந்த நிலையில் இருந்தன. தீவு வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஆனால் இந்தத் தீவு, தனது பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து தப்பிக்க உதவும் ஓர் அமைதியான, அழகான இடம் என்பதை கோவன் கண்டுகொண்டார்.

அவர்கள் தனது சகோதரர்களுடன் (மொத்தம் 12 பேர்) சேர்ந்து, தங்களது குடும்பத்தின் பழைய வீட்டை சரிசெய்யத் தொடங்கினர். புதிய வீடுகளைக் கட்டத் தொடங்கினர்.

அந்த இடத்தில் அவர்கள் குடியேறுவதைக் கண்டு, கோவனை போலவே தங்கள் இளமைப் பருவத்தை ஓயி தீவில் செலவிட்ட பிறர், தங்களது பழைய வீடுகளை மீண்டும் சரிசெய்வதற்கு உத்வேகம் பெற்றனர்.

தீவை உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகள் - Iain Miller அட்லான்டிக் பெருங்கடலில் இருந்து வெளிப்படும் கடல் பாறைகளில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஏற, மலையேறும் பலர் இந்தத் தீவுக்கு செல்கிறார்கள்

இருப்பினும், பாழடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவது எளிதான காரியமல்ல. அனைத்துப் பொருட்களையும் படகு மூலம் கொண்டு வர வேண்டியிருந்தது.

ஆனால் இப்போது சுமார் 20 வீடுகள் உள்ளன. கோடைக்கால மாதங்களில் 20-30 பேர் கொண்ட சமூகம் இங்கு வாழ்கிறது. ஆறு பேர் வரை தங்கக்கூடிய ஒரு விடுதியும் உள்ளது, ஆனால் கடைகள் அல்லது பிற வசதிகள் இல்லை.

ஓயி தீவின் தனிமை மற்றும் அமைதி, உள்ளூர்வாசிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது. உள்ளூர் சமூகத்தினர், இன்றைய நவீன மாற்றங்கள் தீவை நெருங்காமல் இருக்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளனர். தீவுக்கு வருபவர்கள், தங்களது பரபரப்பான வாழ்க்கையில் இருந்து தப்பிக்க விரும்புகிறார்கள்.

எங்களது 14 பேர் கொண்ட குழுவில் இருந்து ஆறு பேர் ஓயி தீவில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். இந்த விடுதி கோடைக்காலத்தில் மட்டும் பயணிகளுக்குத் திறக்கப்படும். தீவுவாசியான நியால் மெக்கின்லி இதை நிர்வகிக்கிறார்.

இந்த விடுதி ஒரு காலத்தில் மெக்கின்லியின் பாட்டியின் வீடாகவும், தீவில் அவர்கள் வாழ்ந்த கடைசி வீடாகவும் இருந்தது.

அதன் அசல் பொருட்களை, தக்க வைத்துக் கொண்டு, இரண்டு படுக்கையறைகளையும் இந்த விடுதி கொண்டுள்ளது. இங்கு ஒரு எரிவாயு அடுப்பு, மேசை, நாற்காலிகள் மற்றும் மாலையில் அனைவரும் கூடுவதற்கு ஏற்ப ஒரு கேம்ப் ஃபயர் (Campfire) அமைப்பும் உள்ளது.

தீவுவாசிகளின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு, குறைவான வசதிகளே உள்ளது.

- Julie Diamond இந்தத் தீவில் மின்சாரம் இல்லை, விடுதியின் பின்புறத்தில் உள்ள ஒரு கழிப்பறை

உள்ளூர்வாசியான பிரான்கி கல்லாகர், தனது தந்தையின் பிறப்பிடம் என்பதால் இந்தத் தீவை தனது தாயகமாகக் கருதுகிறார். ஸ்காட்லாந்தில் வளர்ந்த பிறகு, அவர் இப்போது தனது நேரத்தை ஓயி (வானிலை அனுமதித்தால்) மற்றும் டோனகல் நிலப்பகுதிக்கு இடையில் பிரித்துக் கொள்கிறார்.

"நிச்சயமாக நாங்கள் ஒருபோதும் தீவுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுவதை விரும்ப மாட்டோம், ஏனென்றால் அது இல்லாமலே எங்களால் சிறப்பாகச் செயல்பட முடியும்," என்று அவர் கூறினார்.

வெப்பம், வெளிச்சம் மற்றும் ஆற்றுலுக்காக எரிவாயு மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதோடு, தீவுவாசிகள் மழைநீரைச் சேகரிக்க கூரையில் உள்ள தொட்டிகளைப் பயன்படுத்துகின்றனர்.

"ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவு நீரை மட்டுமே சேமித்து வைத்துக்கொள்ள முடியும் என்பதால், முடிந்தளவு சிக்கனமாகப் பயன்படுத்துவது சிறந்தது" என்கிறார் கல்லாகர்.

"கண்கவர் சூரிய அஸ்தமனங்கள், ஒளி மாசுபாடு இல்லாமல், வானில் தெளிவாகத் தெரியும் விண்மீன்கள் ஆகியவை தீவின் எளிமையான வாழ்க்கை முறையின் ஓர் அங்கம்" என்று விவரிக்கிறார் கல்லாகர்.

சீரற்ற பாதையில் செல்ல பயன்படுத்தப்படும் குவாட் பைக் வாகனத்தை தவிர ஒலி மாசுபாடு என்பது இங்கு கிடையாது. ஆனால், கார்ன் கிரேக் எனும் அதிக சத்தத்தை எழுப்பும் ஒரு பறவை இனம் இத்தீவில் வசிக்கிறது என்றும், அது இந்தத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு கோடைக்கால பறவை என்றும் கல்லாகர் கூறுகிறார்.

Julie Diamond தீவின் பின்புறத்தில் உள்ள பாறைகளுக்கு இடையில் மறைந்திருக்கும் ஒரு நன்னீர் ஏரி.

படகு நிறுத்தும் இடத்திலிருந்து விடுதிக்கு சுமார் 10 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இரவு தூங்குவதற்கான இடத்தைப் தேர்ந்தெடுத்த பிறகு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் குளிக்கச் சென்றேன். நீரில் மின்னிய, அஸ்தமிக்கும் சூரியனின் ஒளியைப் பார்த்தேன்.

கார்கள் இல்லாத இந்தத் தீவு மொத்தம் 300 ஏக்கருக்கும் சற்று அதிகமாகவே உள்ளது. தெற்கு முனைப் புல்வெளியாகவும், வளமாகவும் உள்ளது. படகுகள் நிறுத்துவதற்கு ஒரு சிறிய துறைமுகமும் உள்ளது.

துறைமுகத்தில் இருந்து, செங்குத்தான படிகள் மூலம் 'தீவின் மையத்தை' நோக்கிச் செல்லும் ஒரு மண் பாதையை அடையலாம். தீவின் மையத்தில், அனைத்து வீடுகளும் ஒரு நீண்ட, குறுகிய ஓடையின் இருபுறமும் கட்டப்பட்டுள்ளன. அந்த ஓடையின் பின்புறம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைத் தொடர்கள்.

பழைய வாழ்க்கையின் நினைவுகள், கட்டட இடிபாடுகளின் வடிவத்தில் உள்ளன. அவற்றில் பழைய பள்ளிக்கூடமும் (ஒரு காலத்தில் தீவில் ஒரு பள்ளிக்கூடம், ஓர் அங்காடி மற்றும் ஒரு தபால் அலுவலகம் இருந்தது) உள்ளது.

இதற்கு நேர்மாறாக, தீவின் வடக்கு முனை திறந்தவெளியாக, பாறைகள் நிறைந்ததாகவும், தரிசாகவும் உள்ளது. இங்கு வாழ்வது கடினம்.

Getty Images படகு நிறுத்தும் இடத்திலிருந்து விடுதிக்கு சுமார் 10 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது

இந்த மாசுபடா அழகை மிகவும் நிதானமாக அனுபவிக்க, ஞாயிற்றுக் கிழமை மதியம், எங்கள் குழு தீவின் பின்புறத்தில் உள்ள பாறைகளுக்கு இடையில் மறைந்திருக்கும் ஒரு ஏரியைத் தேடிச் சென்றது. அங்கிருந்து பார்த்தபோது, கடலைக் காண முடியும். தீவுவாசிகளில் ஒருவர், இந்த ஏரிக்கு அடிக்கடி நீராடச் செல்வதாக எங்களிடம் கூறினார்.

அந்த ஏரியை அடைய நாங்கள் விடுதியின் வடக்கே உள்ள காட்டுப் பாதையில் ஏறி, பிறகு ஒரு புல்வெளி மலையில் ஏறி, பின்னர் மிகக் கவனமாக மின்னும் இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல் நிற கிரானைட் பாறைகள் வழியாக இறங்கி அழகான ஏரியைக் கண்டோம்.

பாசி படர்ந்த பாறைகளால் சூழப்பட்ட, நன்னீரில் மூழ்கி, நாங்கள் நீந்தினோம். கடலை நோக்கிய ஒரு குன்றின் உச்சியில் இருக்கும் ஏரியின், அதிசய அழகில் மூழ்கித் திளைத்தோம்.

மிகச் சமீபத்தில் நான் சந்தித்த மக்களுடன் இவ்வளவு நிம்மதியாக உணர்ந்ததும், ஒருவித அமைதி உணர்வு என்னைச் சூழ்ந்ததும் என்னை ஆச்சரியப்படுத்தியது.

தீவில் செலவிட்ட நேரத்தில், நாங்கள் மகிழ்ச்சியுடன் ஒன்றாக இருந்தோம். அம்மா, பாட்டி, தொழில் முனைவோர் மற்றும் வணிகப் பங்குதாரர் போன்ற எங்களது அன்றாட வாழ்க்கையின் கதாபாத்திரங்கள் அட்லான்டிக் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இங்கே அவசரமாகச் செய்ய எதுவும் இல்லை, ஒருவித பரபரப்பும் இல்லை.

ஓயி தீவில் எங்கள் கடைசி இரவு, அதற்கு முந்தைய இரவுகளைப் போலவே சிறப்பாக இருந்தது. சூரியன் மறையும்போது விடுதிக்கு வெளியே காய்கறிகளை நறுக்கினோம், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கேஸ் அடுப்பில் சமைத்தோம்,

'கேம்ப் ஃபயர்' நெருப்பைச் சுற்றி அமர்ந்து உணவு மற்றும் மது பரிமாறினோம். அங்கு உள்ளூர்வாசிகளின் சிறிய குழு ஒன்று ஓர் உற்சாகமான பாடலுக்கு நடனமாட எங்களுடன் இணைந்தது.

வெளியே உட்கார்ந்து, காற்றில் நடனமாடும் நெருப்பின் சுடர்களைப் பார்த்து, ஓர் உற்சாகமான பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, என் புதிய தோழிகளில் ஒருவர் என்னை நோக்கி, "நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம், இல்லையா?" என்று கேட்டார்.

நான் அவளை இரண்டு நாட்களுக்கு முன்புதான் சந்தித்து இருந்தாலும், அவளது உணர்வு எனக்கு சரியாகப் புரிந்தது. சுத்தமான காற்று, பாடலின் மூலம் பரவும் தீவின் கதைகள், இரவு வானத்தில் தெளிவாகத் தெரியும் நட்சத்திரங்கள், ஓயி தீவின் அமைதி அதுவே மகிழ்ச்சி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.