தெலங்கானா மாநிலத்தில் சந்திரயாங் பேட்டையில் வசித்து வருபவர் அமீன் அகமது அன்சாரி . இவரது தந்தை 2021ல் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கருணை அடிப்படையில் போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் பணியிடத்தைப் பெற்றிருந்தார். ஆனால், அவர் 7 அடி உயரம் கொண்டவர் என்பதாலே, 6 அடி உயரமே உள்ள பேருந்தில் பணிபுரியும் போது தொடர்ந்து தலை குனிந்து வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தினமும் தொடர்ந்து 10 மணி நேரம் அமீன் அகமது பேருந்தில் தனது தலைகுனிந்து வேலை செய்ய வேண்டிய அவஸ்தையில் உள்ளார். இதனால், கழுத்து வலி, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை போன்ற உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு, அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலைமை அவரது வேலைக்கு பெரும் இடையூறாக மாறி வருகிறது.
அமீனின் நிலையை பார்த்த பயணிகள் பரிதாபம் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல்நிலை மேலும் மோசமாகாமல் இருக்க, அவருக்கு ஏற்ற வேறு பணியை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் அவருக்கு ஏற்ப வேறு பணி வழங்கும் ஆழமான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.