மத்தியப் பிரதேசம் டாமோ மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மிஷனரி மருத்துவமனையில் நடந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜான் கெம்’ எனும் பிரபல பிரிட்டிஷ் இதய நிபுணராக தன்னை அடையாளப்படுத்திய நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்ற நபர், போலி ஆவணங்களை சமர்ப்பித்து மருத்துவமனையில் நியமிக்கப்பட்டு, இதய அறுவை சிகிச்சைகள் செய்து வந்துள்ளார்.
இவரால் ஒரு மாதத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. விசாரணையின் போது, போலி மருத்துவர் பயன்படுத்திய ஆவணங்கள் பிரிட்டனில் உள்ள உண்மையான மருத்துவரின் பெயரில் போலியாக இருந்தது கண்டறியப்பட்டது.
இது குறித்து டாமோ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவர் தீபக் திவாரி முதலில் புகார் அளித்ததன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மருத்துவமனையின் அனைத்து பதிவுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
மருத்துவமனையால் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவியையும் பெற்றிருப்பது வெளியாகியுள்ளது. மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது.
மாவட்ட கலெக்டர் சுதீர் கோச்சர் மற்றும் எஸ்.பி அபிஷேக் திவாரி இருவரும் விவரங்களை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த போலி மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.