Open AI நிறுவனம் வெளியிட்ட GPT-4o மாடல், தனது வெளியீட்டின் முதல் வாரத்திலேயே 700 மில்லியனுக்கு மேற்பட்ட படங்களை உருவாக்கி சாதனை புரிந்துள்ளது. Studio Ghibli ஸ்டைலிலான உருவங்களை உருவாக்க பலரும் பயன்படுத்தியிருக்கின்றனர்.
ஆனால், இதே தொழில்நுட்பத்தை சிலர் தவறாக பயன்படுத்தி, போலி ஆதார் அட்டைகள் மற்றும் பான் கார்டுகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதைப் பார்த்து அச்சம் உருவாகியுள்ளது.
GPT-4o மூலம் உருவாக்கப்பட்ட ஆதார் அட்டைகள் மிக நுணுக்கமானவை, நிஜ அட்டையை ஒத்திருக்கின்றன என பலர் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் சிலர், Open AI CEO சாம் ஆல்ட்மன் மற்றும் டெஸ்லா CEO எலான் மஸ்க் ஆகியோரின் புகைப்படங்களை இந்திய அடையாள அட்டைகளில் பதித்து பகிர்ந்துள்ளனர். சாட்சியமாக QR குறியீடு மற்றும் ஆதார் எண்களும் சேர்க்கப்பட்டிருந்தது.
இதன் தீமைகளைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். IDfy நிறுவனத்தின் விற்பனை அதிகாரி விரிஜு ரே, ஆதார் அட்டை விவரங்கள் அரசின் பின்நிலை தரவுத்தளத்துடன் ஒப்பிட முடியும் என்பதால், ஆதாரைப் போலியாக உருவாக்கினாலும் அவற்றை சுலபமாக கண்டறிய முடியும் என்றார்.
ஆனால் பான் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் முகம் சார்ந்த தகவல்கள் அரசின் தரவுத்தளத்தில் இல்லாத காரணத்தால் அவற்றை நம்பத்தகுந்தவைதான் என உறுதி செய்வது சிரமமானது என தெரிவித்தார்.
The Quantum Hub நிறுவனத்தின் நிறுவனர் ரோகித் குமார், போலியான தகவல்களை உருவாக்க முடியாத வகையில், உருவாக்கப்படும் படங்களில் டிஜிட்டல் வாட்டர்மார்க் அல்லது சான்று தரும் மேட்டாடா போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் இது சமூக நம்பிக்கையிலும் பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.