மெட்டா நிறுவனம் தனது சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் மெசேஞ்சரில் 16 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள் லைவ் செய்யும் வசதி பெற்றோர் அனுமதி கிடைத்த பிறகே பயன்படுத்த முடியும் எனவும், நேரடி செய்திகளில் வரும் நிர்வாண புகைப்படங்களை அன்ஃபிளர் செய்யும் வசதியையும் பெற்றோர் அனுமதியின்றி அணுக முடியாது எனவும் மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய பாதுகாப்புகள் முதலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டு, பின்னர் உலகளாவிய அளவில் விரிவாக்கப்படும். இந்த பாதுகாப்பு அம்சங்கள் இன்ஸ்டாகிராமை தாண்டி ஃபேஸ்புக் மற்றும் மெசேஞ்சருக்கும் விரிவாக்கப்படும்.
இதில், இளம் பயனர்களின் கணக்குகள் தானாகவே தனிப்பட்ட (private) கணக்காக அமைக்கப்படும், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மெசேஜ்கள் தடுக்கப்படும், சென்சிடிவ் உள்ளடக்கங்கள் காட்டப்படுவதை கட்டுப்படுத்தும், 60 நிமிடங்கள் கழித்து பயன்பாட்டை நிறுத்த நினைவூட்டல் வரும் மற்றும் தூங்கும் நேரங்களில் அறிவிப்புகள் நிறுத்தப்படும் என்ற அம்சங்களும் அடங்கும்.
மெட்டா நிறுவனம் கூறுகையில், கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இத்திட்டத்தின் கீழ் இதுவரை 5.4 கோடி இளம் பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.