வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அப்போது, அடுத்த விசாரணை நடைபெறும் வரை அதிகாரப்பூர்வ பதிவு ஆவணங்கள் இல்லாமல் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் வக்ஃப் சொத்துக்கள் முதல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட, அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் வரை அனைத்து வக்ஃப் சொத்துக்களும் ரத்து செய்யப்படவோ அல்லது மாவட்ட ஆட்சியரால் மாற்றப்படவோ மாட்டாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கு விசாரணை நடைபெறும் காலக்கட்டத்தில் மத்திய வக்ஃப் கவுன்சில்கள் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்கள் ஆகியவற்றில் முஸ்லிம் அல்லாதோர் நியமிக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசு கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்றும் (ஏப். 17) விசாரணை நடைபெற்றது.
அப்போது, மேற்கண்ட வாக்குறுதிகளை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது.
இதையடுத்து, மத்திய அரசின் வாதங்களை பதிவு செய்துகொள்வதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.
"இந்த வழக்கின் மீதான தங்கள் கருத்தை மத்திய அரசு ஏழு நாட்களில் தெரிவிப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வாக்குறுதிகளை நாங்கள் பதிவு செய்துகொள்கிறோம்," என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இவ்வழக்கு வரும் மே 5 அன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
நேற்று, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் . ஆனால், சொலிசிட்டர் ஜெனரலின் தொடர் வேண்டுகோளுக்கு ஏற்ப மத்திய அரசின் வாதத்துக்காக அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு, வழக்கு இன்று ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்றைய விசாரணையில், ஒரு சட்டத்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடை விதிப்பதென்பது அசாதாரணமான நடவடிக்கை என்றும் வெறும் சட்டத்தின் ஷரத்துக்களை மட்டுமே படித்துவிட்டு அவ்வாறு செய்ய முடியாது என்றும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
"லட்சக்கணக்கான கருத்துக்களின் அடிப்படையில் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராமங்கள் வக்ஃப் சொத்துக்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இது பெருவாரியான அப்பாவி மக்களை பாதித்துள்ளது." என்றும் தெரிவித்தார்.
மேலும், தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்க ஒருவார கால அவகாசம் வேண்டும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் கோரினார்.
நீதிபதி கூறியது என்ன?அப்போது தலைமை நீதிபதி, "நாங்கள் சில குறைகளை சுட்டிக்காட்டியுள்ளோம். சில நேர்மறையான விஷயங்களும் இருப்பதாகக் கூறியுள்ளோம். ஆனால், இன்று உள்ள சூழல் மாற வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. ஐந்து ஆண்டுகள் முஸ்லிமாக இருப்பவர்கள்தான் வக்ஃப் அமைப்புக்கு சொத்து வழங்க முடியும் என பிரிவு உள்ளது, அதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை.
நீங்கள் சொல்வது போல ஒரு சட்டத்துக்கு நீதிமன்றம் சாதாரணமாக தடை விதிக்காது என்பது ஒரு விதியாக உள்ளது. ஆனால் அதே சமயம், ஒரு விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதென்றால் தற்போதுள்ள சூழல் மாறக்கூடாது, அதன்மூலம் மற்றவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்" என தெரிவித்ததாக லைவ் லா செய்தி குறிப்பிடுகிறது.
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் முன்பு நேற்று (ஏப். 16) விசாரணைக்கு வந்தது.
மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ராஜீவ் தவன், ஏ.எம். சிங்வி, சி.யு. சிங் ஆகியோர் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகினர்.
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில் திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகளுக்குத் தடை விதிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பியதாக 'லைவ் லா' செய்தி கூறுகிறது.
அதன்படி,
1. பயன்பாட்டின் அடிப்படையிலான வக்ஃப் ( waqf-by-user) சொத்துக்கள், இனி வக்ஃபாக அங்கீகரிக்கப்படாதா?
2. சச்சரவு உள்ள பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற அதிகாரி விசாரணையை முடிக்கும் வரை அவை வக்ஃப் சொத்து அல்ல எனக்கூறுவது நியாயமா?
3. வக்ஃப் என நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டதை பிரிவு 2A எப்படி மீற முடியும்?
4. புதிய திருத்தங்களுக்குப் பிறகும் மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருப்பார்களா?
ஆகிய கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியதாக லைவ் லா செய்தி குறிப்பிடுகிறது.
மேலும் விசாரணையின் போது, கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் வாயிலாக நீண்ட காலத்துக்கு முன்பே வக்ஃப் சொத்துக்களாக இருப்பவை ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதை குறிக்கும் வகையில், திருத்தங்கள் வாயிலாக வரலாற்றை மாற்றி எழுத முடியாது என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.
"நீண்ட காலத்துக்கு முன்பே வக்ஃப் சொத்துக்களாக உள்ளதை அரசு எப்படி பதிவு செய்யும், அவர்களிடம் என்ன ஆவணங்கள் இருக்கும்? (வக்ஃப் சட்டம்) தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் நியாயமானவையும் உள்ளன." என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.
மேலும், "இந்து அறக்கட்டளைகள் என்று வரும்போது, அதை நிர்வகிப்பவர்கள் இந்துக்களாகவே உள்ளனர்," என நீதிபதி விஸ்வநாதன் தெரிவித்தார்.
அப்போது, "அவை இந்துக்கள் அல்லது இந்து அல்லாதவர்கள் அடங்கிய நிர்வாக குழுக்களால் நிர்வகிக்கப்படுவதாக" சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். அதற்கு, நீதிபதி சஞ்சய் குமார், "திருப்பதி கோவில் நிர்வாகக் குழுவில் இந்துக்கள் இல்லை என கூற முடியுமா?" என சொலிசிட்டர் ஜெனரலுக்கு கேள்வி எழுப்பினார்.
வக்ஃப் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியதையடுத்து சட்டமானது.
ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி எம்.பி. அசாதுதீன் ஓவைசி, காங்கிரஸ் எம்.பி முகமது ஜாவத், ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி மனோஜ் குமார் ஜா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சமஸ்தா கேரளா ஜாமியத் உலமா, டெல்லி எம்.எல்.ஏ அமனதுல்லா கான், சமாஜ்வாதி கட்சி எம்.பி ஸியா உர் ரெஹ்மான், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் என பல்வேறு தரப்பினரும் மனு தாக்கல் செய்தனர்.
வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி குறிப்பிடப்பட்டிருக்கும் 'நோக்கங்கள் மற்றும் காரணங்களின்படி, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தை பின்பற்றும் மற்றும் சம்பந்தப்பட்ட நிலத்தில் உரிமையுள்ள எந்தவொரு நபரும் வக்ஃபுக்கு தனது சொத்தை நன்கொடையாக அளிக்கலாம்.
மேலும், வக்ஃப் நிலத்தை அளவீடு செய்யும் கூடுதல் ஆணையரின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக இந்தப் பொறுப்பு தற்போது மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம், "அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் மத சுதந்திரம், சிறுபான்மையினர் நலனுக்கு எதிரானது" என்றும் எதிர்தரப்பினர் கூறுகின்றனர்.
அதேசமயம், இந்த திருத்தங்கள் மூலம், அரசு எந்தவொரு மதம் சார்ந்த நிறுவனம் மீதோ அல்லது மத செயல்பாடுகளின் மீதோ தலையிடாது என்றும் வக்ஃப் வாரியம் எந்தவொரு மத நிறுவனத்தின் நிர்வாகத்திலும் தலையிடாது என்றும் மத்திய அரசு தெரிவிக்கிறது.
வக்ஃப் வாரியத்தின் சொத்துக்களை சிறப்பாக நிர்வகிப்பதற்கான நடவடிக்கையே இது என்கிறது மத்திய அரசு.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.