இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. லட்சக்கணக்கானோரிடம் இருந்து கிராமங்கள் வக்ப் சொத்தாக எடுத்துக் கொள்ளப்படுவதாக புகார் வந்தது. பல இடங்கள் வக்ப் சொத்தாக உரிமை கோரப்படுகின்றன. இந்த சட்டத்தை நிறுத்தி வைப்பது என்பது ஒரு கடுமையான நடவடிக்கையாக இருக்கும். இந்த வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: சட்டத்தில் சில நேர்மறையான விஷயங்கள் உள்ளன . சட்டத்திற்கு முழு தடை விதிக்க மாட்டோம். தற்போதைய சூழ்நிலை மாறுவதையும் நாங்கள் விரும்பவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, தற்போதுள்ள சூழ்நிலைக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.
தொடர்ந்து, சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கில் சில ஆவணங்கள் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறியதுடன், அதுவரை புதிய நியமனங்கள் இருக்காது எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், வக்ப் வாரியங்கள், மத்திய வக்ப் கவுன்சிலில் நியமனங்கள் இருக்காது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. வக்ப் வாரியங்கள், வக்ப் கவுன்சிலில் அலுவல் உறுப்பினர்கள் இருவரை தவிர அனைவரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். வக்ப் சொத்துகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வரும் விசாரணை முடிவுகளை செயல்படுத்தக்கூடாது.
புதிய சட்டப்படி வக்ப் வாரியத்தில் எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக்கூடாது. ஏற்கனவே வக்ப் என அறிவிக்கப்பட்ட சொத்துகளில் எந்த நடவடிக்கையும் கூடாது. நிலம் வகைப்படுத்துதல் உறுப்பினர் நியமனம் தொடர்பான அனைத்திலும் தற்போதைய நிலை தொடர வேண்டும். மத்திய, மாநில அரசுகள், வக்ப் வாரியம் ஏழு நாட்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.