மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் நவிமும்பை உல்வே பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் பாண்டே (44). இவர் அப்பகுதியில் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாததால் தனியே வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் ரியா சர்கன்யா சிங் (19) என்ற பெண் சஞ்சயின் காரில் பயணித்தபோது, தான் வேலை தேடி வந்துள்ளதாகவும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என சஞ்சயிடம் உதவி கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சஞ்சய் அவரது வீட்டில் ரியாவை தங்க வைத்து வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து தந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாத காலம் சஞ்சய் வீட்டில் தங்கியிருந்த ரியா சமூக வலைதளம் மூலமாக நாஷிக் பகுதியை சேர்ந்த விஷால் ஷிந்தே(21) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
அதன் பின் ரியா நாஷிற்கு சென்று விஷாலை சந்தித்துள்ளார். இவர்களது காதல் சஞ்சய்க்கு பிடிக்காததால் ரியாவை மீண்டும் தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மேலும் அவரது காதலை தடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று சஞ்சய் ரியா மற்றும் விஷாலை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அதன் பின் மறுநாள் இரவு சஞ்சய் பாண்டே ரியா மற்றும் விஷால் நெருக்கமாக இருந்த வீடியோக்களை தனது மொபைலில் பதிவு செய்துள்ளதாகவும், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளார். மேலும் ரியாவிடம் தவறான கோரிக்கையை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் காதலர்கள் இருவரும் சஞ்சையை கொலை செய்ய முடிவு செய்து ஒரு கை சுத்தியலால் அவரின் தலையில் அடித்தும் அவரது கண்களை குத்தியும் கொலை செய்துள்ளனர். அதன்பின் இருவரும் தப்பி ஓடி உள்ளனர். ஆனால் விஷாலுக்கு கார் ஓட்ட தெரியாததால் புனை மற்றும் நாஷிக் பகுதிகளில் பல சாலைகளில் விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரித்த போது கொலை சம்பவத்திற்கான காரணம் வெளிவந்தது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.