பீகார் மாநிலம் கடிகார் மாவட்டத்தில், புர்கா அணிந்த பெண் ஒருவர் 9 லிட்டர் மதுவை தனது உடலில் ஒட்டி ரயிலில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டியா தேவி என்ற அந்த பெண் மேற்கு வங்காள மாநிலத்தின் குமேட்புர் பகுதியிலிருந்து ரயிலில் ஏறி, கடிகார் நோக்கி பயணித்துள்ளார். வெளியே பார்த்தால் சாதாரண பயணியாகத் தெரிந்தாலும், அவர் மதுவிலக்கு சட்டத்தை மீறி மதுபாக்கெட்டுகளை புர்காவுக்குள் மறைத்து கடத்தி சென்றது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தது.
மணியா ரயில் நிலையத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் தயாராக இருந்த மதுவிலக்கு துறை அதிகாரிகள், ஒரு பெண் காவலரை நியமித்து சண்டியா தேவியை சோதனை செய்தனர். அப்போது, அவரது உடலில் மது பாக்கெட்டுகளை ஒட்டி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கடிகார் மாவட்டத்தின் மஜேலி கிராமத்தை சேர்ந்த சண்டியா தேவி, இதற்கு முன்பும் பலமுறை மதுக் கடத்தலில் ஈடுபட்டிருந்ததாக ஒப்புக்கொண்டார்.
பொதுவாக பைகளிலும் வாகனங்களின் மறைமுக இடங்களிலும் மதுப் பாட்டில்கள் கடத்தப்படும் நிலையில், இந்த முறையில் புர்கா பயன்படுத்தப்பட்டது என்பது முற்றிலும் புதியதாகும். இது போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சண்டியா தேவி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம், மதுக் கடத்தலுக்காக சிலர் எவ்வளவு தூரம் செல்ல தயாராக இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் நிகழ்வாக திகழ்கிறது.