முகர்ஜி, பானர்ஜி அல்லது சாட்டர்ஜி போல சுந்தர்ஜி பெங்காலியா அல்லது ஃபிரோஜி அல்லது ஜாம்ஷெட்ஜி போல பார்ஸியா என்று மக்கள் அடிக்கடி கேட்பார்கள். சிலர் அவரை ஒரு சிந்தி என்றும் கருதினர்.
ஜெனரல் சுந்தர்ஜியின் மனைவி வாணி சுந்தர்ஜி தனது 'எ மேன் கால்ட் சுந்தர்ஜி' என்ற கட்டுரையில், "உங்கள் பெற்றோர் இருவரும் தமிழர்கள். ஆனாலும் உங்களுக்கு சுந்தர்ஜி என்ற பெயர் எப்படி வந்தது என்று எங்கள் திருமணத்தின் ஆரம்ப நாட்களில் நான் அவரிடம் கேட்டேன்," என்று எழுதியுள்ளார்.
"எனக்கு மூன்று வயதாக இருந்தபோது என் பெற்றோர் காந்திஜியை பற்றி அடிக்கடி பேசுவதை நான் கேட்பேன். ஒரு நாள் நான் என் தந்தையிடம், நீங்கள் எந்த காந்திஜியை பற்றிப் பேசுகிறீர்கள் என்று கேட்டேன்.
மகாத்மா காந்தி ஒரு மிகச் சிறந்த மனிதர். அவரை கௌரவிக்கும் விதமாக நாம் அவரது பெயருடன் 'ஜி'யை சேர்க்கிறோம் என்று என் தந்தை பதிலளித்தார். அன்று முதல் என்னையும் சுந்தர்ஜி என்று அழைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். என் தந்தை இதற்கு ஒப்புக்கொண்டார் என்று அவர் பதில் சொன்னார்," என்று வாணி சுந்தர்ஜி குறிப்பிடுகிறார்.
மெட்ராஸில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட்டில்கூட அவரது பெயர் கிருஷ்ணசாமி சுந்தர்ஜி என்று பதிவு செய்யப்பட்டது. அவரது ஊழியர்களும் சகோதரர்களும் அவரது பெயருடன் 'ஜி'ஐ சேர்க்கத் தொடங்கினர். அவரது வாழ்நாள் முழுவதும் இந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
பெயரைப் போலவே மற்ற விஷயங்களிலும் சுந்தர்ஜி வித்தியாசமானவராக இருந்தார். ஒருமுறை டேராடூனில் உள்ள அதிகாரிகள் உணவகத்தில் ஒரு ராணுவ கேப்டன் அவரிடம் ஓடி வந்து, "சார், நாங்கள் உங்களுக்காக முழு சைவ உணவைத் தயார் செய்துள்ளோம்" என்றார்.
"என் இளம் நண்பரே, நான் மாட்டிறைச்சி உண்ணும் பிராமணன். எனக்கு சுவை பிடித்திருந்தால் நகரும், நீந்தும், ஊர்ந்து செல்லும் அனைத்தையும் நான் சாப்பிடுவேன்," என்று சுந்தர்ஜி பதிலளித்தார்.
தனது தந்தையின் வற்புறுத்தலின் பேரில் மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்துடன் உயிரியலில் ஹானர்ஸ் படிக்கத் தொடங்கினார். ஆனால் படிப்பின் பாதியிலேயே ராணுவத்தில் சேர முடிவு செய்தார். அப்போது அவருக்கு வயது 17 மட்டுமே.
அவர் தனது வாழ்க்கையில் ஐந்து போர்களில் பங்கு கொண்டுள்ளார். அவர் மேஜராக இருந்தபோது ஐ.நா படைகளின் சார்பாகப் போரிட காங்கோவுக்கு அனுப்பப்பட்டார். அங்கே கடுமையான சண்டை நடந்தது.
ஒருமுறை 72 மணிநேரம் தொடர்ந்து நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் சாப்பிடாமலும் தூங்காமலும் ஈடுபட்ட சுந்தர்ஜி மிகவும் சோர்வடைந்ததால் தாக்குதலின் நடுவே இருந்த இடத்திலேயே தூங்கிவிட்டார்.
"அவரது பிகாரி உதவியாளர் லட்சுமண் அவரைப் பதுங்கு குழிக்குள் இழுக்க முயன்றார். ஆனால் சுந்தர்ஜி அவரை நோக்கி கோபமாக 'F…off' (இங்கிருந்து செல்) என்று கத்தினார். 24 மணிநேரத்திற்குப் பிறகு கண்களைத் திறந்தபோதுதான் போர்க்களத்தில் இருப்பதையே அவர் உணர்ந்தார். அவரைச் சுற்றி 36 மோர்டார் குண்டுகள் கிடந்தன. அவர் அவற்றைக் கவனமாக எண்ணினார். ஆனால் இவ்வளவு பெரிய தாக்குதலுக்குப் பிறகும் அவருக்கு ஒரு கீறல்கூட ஏற்படவில்லை" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார்.
பல வருடங்களுக்குப் பிறகு அவர் ராணுவ தளபதியானபோது அதே லட்சுமண் அவருக்காக வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யைக் கொண்டு வந்தார். காங்கோ நாட்களை நினைவுகூர்ந்த சுந்தர்ஜி தனது முன்னாள் உதவியாளரிடம், "அன்று என்னைப் போர்க்களத்தில் தூங்க விட்டுவிட்டு ஏன் சென்றுவிட்டீர்கள்?" என்று நகைச்சுவையாகக் கேட்டார்.
"நீங்கள் என்னைத் திட்டினீர்கள். எனக்கு வருத்தமாக இருந்தது. நான் சென்றுவிட்டேன்" என்று லட்சுமண் பதில் அளித்தார்.
கடந்த 1928ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் பிறந்த கிருஷ்ணசாமி சுந்தர்ஜி, 1945ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது வடமேற்கு எல்லைப் பகுதியில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றார்.
கடந்த 1971 போரின்போது அவர் வங்கதேச போரின் முன்வரிசையில் இருந்தார். 1984ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் பொற்கோவிலில் இருந்த ஆயுதமேந்தியவர்களை விரட்டியடிக்க மேற்கொள்ளப்பட்ட, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு சுந்தர்ஜி தலைமை வகித்தார்.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின்போது ஜெனரல் சுந்தர்ஜி மேற்கு கமாண்டின் தலைவராக இருந்தார். 1984 ஜூன் 3ஆம் தேதியன்று இந்திரா காந்தி அவரை டெல்லிக்கு அழைத்தார். அன்றிரவு அவர் இந்திரா காந்தியுடன் தனியாக ஒரு மணிநேரம் பேசினார். இரவு 2 மணிக்கு வீடு திரும்பியபோது அவர் தனது மனைவியிடம், 'இது எனக்கான மிகப்பெரிய சோதனை' என்றார்.
ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு பிறகு அவர் முற்றிலும் மாறிவிட்டார். அவருடைய சிரிப்பு மறைந்துவிட்டது. இது குறித்து அவரது மனைவி தனது கவலையை வெளிப்படுத்தியபோது, 'நான் விரைவில் அதிலிருந்து மீண்டு விடுவேன்' என்று கூறினார். ஆனால் அவரால் அதிலிருந்து ஒருபோதும் மீள முடியவில்லை.
"எதிரியை எதிர்த்துப் போராடவே எனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. என் சொந்த மக்களை எதிர்ப்பதற்கு அல்ல என்று அவர் அடிக்கடி கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்," என்று வாணி சுந்தர்ஜி கூறுகிறார்.
மக்கள் உண்மையை அறியும் வகையில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் அனுபவங்களைப் பற்றி எழுதுமாறு பிரபல பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங் அவரைக் கேட்டுக் கொண்டார். தனது ஓய்வு நேரத்தில் அது பற்றி எழுதுவதாக அவர் கூறினார். ஆனால் அந்த நேரம் ஒருபோதும் வரவில்லை.
லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ். பிரார் தனது 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தி ட்ரூ ஸ்டோரி' என்ற புத்தகத்தில் "நாங்கள் பொற்கோவிலுக்குள் நுழைந்தது கோபத்துடன் அல்ல, சோகத்துடன். உள்ளே நுழையும்போது எங்கள் உதடுகளில் பிரார்த்தனையும், எங்கள் இதயங்களில் பணிவும் இருந்தது. அந்த நேரத்தில் வெற்றி, தோல்வி என்ற எண்ணமோ, வெகுமதிக்கான விருப்பமோ எங்களுக்கு இருக்கவில்லை. நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையாகவே அதை நாங்கள் கருதினோம்" என்று ஜெனரல் சுந்தர்ஜி கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார்.
ஜெனரல் சுந்தர்ஜியின் பெயருடன் தொடர்புடைய மற்றொரு நடவடிக்கை 'ஆபரேஷன் பிராஸ்டாக்ஸ்'. இந்தியாவின் போர் தயார்நிலையைச் சோதிப்பதற்காக இந்தப் பயிற்சி 1986 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ராஜஸ்தான் பாலைவனத்தில் தொடங்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியாக இது இருந்தது. இந்த அளவிலான ராணுவப் பயிற்சி இதற்கு முன்பு ஆசியாவில் நடத்தப்பட்டதில்லை. போர் சூழ்நிலையில் எல்லா ராணுவ உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் சோதிக்கப்பட வேண்டும் என்று சுந்தர்ஜி விரும்பினார்.
இந்தப் பயிற்சியில் ராணுவத்தின் பெரும் பகுதியினர் ஈடுபட்டனர். இந்தியா தன்னைத் தாக்க நினைக்கிறது என்று பாகிஸ்தான் தவறாகப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இந்தப் பயிற்சி மிகவும் தீவிரமாக இருந்தது.
பாகிஸ்தான் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்து அவர்களைப் பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டது. இந்தப் பயிற்சி காரணமாக பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அருண் சிங்கின் துறை மாற்றப்பட்டது.
"ஒருமுறை நாங்கள் ஆப்கானிஸ்தான் அதிபர் நஜிபுல்லாவை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றபோது ராஜீவ் காந்தி என்னிடம் 'நட்வர், நாம் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கப் போகிறோமா?" என்று கேட்டார்," என்று 'ஒன் லைஃப் இஸ் நாட் இனஃப்' என்ற தனது சுயசரிதையில் நட்வர் சிங் எழுதுகிறார்.
இந்தப் பயிற்சிக்கான ஒப்புதலை பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அருண் சிங் அளித்திருந்தார். இது குறித்து ராஜீவ் காந்திக்கு எதுவும் தெரியாது.
ஒருமுறை ராஜீவ் காந்தி நட்வர் சிங் மற்றும் நாராயண் தத் திவாரியிடம், 'பாதுகாப்புத் துறை இணை அமைச்சரை நான் என்ன செய்வது' என்று கேட்டார்.
"அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் தெளிவாகச் சொன்னேன். இதற்கு ராஜீவ் 'அருண் சிங் என் நண்பர்' என்று கூறினார். இதற்கு நான், 'நீங்கள் டூன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் அல்ல. நீங்கள் இந்தியாவின் பிரதமர். பிரதமர்களுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை என்று சொன்னேன்," என்று நட்வர் சிங் குறிப்பிட்டார்.
சில நாட்களுக்குப் பிறகு அருண் சிங் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து நீக்கப்பட்டு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டார்.
இந்த ஆபரேஷனின்போது ஒரு விஷயம் ஒருபோதும் நிற்கவில்லை. ஜெனரல் ஜியா, ஜெனரல் சுந்தர்ஜிக்கு மாம்பழங்கள் மற்றும் கின்னு டேஞ்சரின் பழங்கள் நிரம்பிய பெரிய கூடைகளைத் தொடர்ந்து அனுப்பி வந்தார்.
"அந்தப் பழக்கூடைகளில் 'ஜெனரல் சுந்தர்ஜிக்கு வாழ்த்துகள். நீங்கள் இவற்றை ரசித்து உண்பீர்கள் என்று நம்புகிறேன். ஜியா" என்று ஜெனரல் ஜியா எழுதிய குறிப்பு இருக்கும்," என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். ஜெனரல் ஜியா விமான விபத்தில் இறக்கும் வரை இந்த பழக் கூடைகள் சுந்தர்ஜிக்கு வந்து கொண்டிருந்தன.
இந்திய ராணுவத்திற்கு போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க பரிந்துரைத்ததற்காக ஜெனரல் சுந்தர்ஜி நினைவுகூரப்படுகிறார்.
ஜெனரல் சுந்தர்ஜியை 'ஸ்காலர் ஜெனரல்' என்றும் அழைப்பார்கள். அவர் 'அணுசக்திக் கோட்பாட்டை' வகுத்தார். அதைப் பின்பற்றி இந்தியா 1998 அணுஆயுத சோதனைக்குப் பிறகு 'முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை' என்று அறிவித்தது.
'தி பிரின்ட்' இதழில் வெளியான 'General Sundarji gave China strategy four decades ago' என்ற தனது கட்டுரையில் ஜெனரல் ஹெச்.எஸ். பனாக், "இந்திய ராணுவத்தில் வேறு எந்த ஜெனரலுக்கும் இவ்வளவு அறிவுசார் ஆழம், செயல் உத்திக் கண்ணோட்டம் மற்றும் அமைப்பை மாற்றியமைக்கும் திறன் இல்லை என்பதை அவரது மோசமான விமர்சகர்கள்கூட ஒப்புக்கொண்டனர். தனது இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாத கால பதவிக் காலத்தில் அவர் இந்திய ராணுவத்தை 21ஆம் நூற்றாண்டுக்குள் கொண்டு வந்தார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெனரல் சுந்தர்ஜி 'பகட்டானவர்' என்ற பிம்பத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அவரைப் பற்றிய இந்தக் கருத்து நியாயமானதல்ல என்று அவரது மனைவி கருதுகிறார். சுந்தர்ஜியிடம் குழந்தைத்தனமான எளிமையும் நேர்மையும் தெரிந்தன என்று அவர் குறிப்பிடுகிறார்.
"அவர் ஸ்டைலாக வாழ விரும்பினார். அவர் பெரும்பாலும் சீருடை அல்லாத உடைகளில் காணப்பட்டார். அவர் பைப் புகைப்பார். அதன் தண்டைப் பயன்படுத்தி சுவரில் உள்ள வரைபடங்களை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு விளக்குவார். இடையிடையே பைப்பில் இருந்து ஒரு பஃப் அல்லது இரண்டு பஃப் உள்ளிழுப்பார். அவரது மனதில் புதிய யோசனைகள் எப்போதும் பிறந்து கொண்டே இருக்கும்" என்று வாணி சுந்தர்ஜி கூறுகிறார்.
அந்த நேரத்தில் அவர் மனதளவில் 21ஆம் நூற்றாண்டை ஏற்கனவே அடைந்திருந்தார். 21ஆம் நூற்றாண்டுக்கான இந்திய ராணுவத்தின் உத்தி மிக விரிவாக விளக்கப்பட்ட 'விஷன் 2000' என்ற வரைவை அவர் தயாரித்தார்.
அணுசக்தி விவகாரங்கள் குறித்த அவரது கருத்துகள் நன்கு அறியப்பட்டவை. அதைப் பற்றியும் அவர் நிறைய எழுதியிருந்தார். அவரது தனிப்பட்ட நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தன.
"லியோனார்டோ டா வின்சி மற்றும் செங்கிஸ் கானை சுந்தர்ஜிக்கு மிகவும் பிடிக்கும். அவர் இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்திய, மேற்கத்திய, பாரம்பரிய, நாட்டுப்புற இசை என அனைத்து வகையான இசையையும் அவர் விரும்பினார். இரவு முதல் விடியல் வரை ரவிசங்கரின் இசை நிகழ்ச்சிகளில் நாங்கள் அமர்ந்திருப்போம். அவர் எங்கள் நாற்பது ஆண்டுக்கால நண்பர்" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார்.
சுந்தர்ஜியின் வேண்டுகோளின் பேரில் மெக்கனைஸ்ட் இன்ஃபான்ட்ரி படைப் பிரிவுக்காக ரவிசங்கர் ஒரு பாடலை இயற்றினார். அவர் அடிக்கடி பிரபல விஞ்ஞானி ராஜா ராமண்ணாவின் வீட்டிற்குச் சென்று அவர் பியானோ வாசிப்பதைக் கேட்டு ரசிப்பார்.
வேலை செய்யும்போது சுந்தர்ஜி அடிக்கடி பிஸ்மில்லா கான், யெஹுதி மெனுஹின், எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரின் இசையைக் கேட்பார்.
சுந்தர்ஜி எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஒவ்வொரு விஷயம் பற்றிய அவரது அறிவு மேலோட்டமாக இல்லாமல் ஆழமானதாக இருந்தது.
ஓய்வு பெற்ற பிறகு ஒருமுறை அவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது சீன மொழியைக் கற்றுக்கொள்ள இரண்டு புத்தகங்களை அவர் வாங்கினார். 60 வயதைக் கடந்த அவர் சீன மொழியை சரளமாகப் பேசத் தொடங்கினார்.
"அவர் என்னிடமிருந்து இரண்டு விஷயங்களை கற்றுக்கொண்டார். அவற்றில் ஒன்று வானியலில் ஆர்வம். என் தந்தை ஆறு வயதில் இருந்தே கோள்கள் மற்றும் நட்சத்திரங்களைக் காட்ட என்னை ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்வார். சுந்தர்ஜி எனக்காக வானியல் பற்றிய சில புத்தகங்களைக் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அவருக்கும் இந்தத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார்.
"இரண்டாவது விஷயம் பறவைகள் மீதான ஆர்வம். என்னைப் பார்த்து உத்வேகம் பெற்ற அவர் இந்த விஷயத்தில் சாலிம் அலி மற்றும் டிலான் ரிப்லி எழுதிய பல புத்தகங்களை வாங்கினார். பறவைகளைப் பார்த்து ரசிக்க இரண்டு சக்திவாய்ந்த தொலைநோக்கிகளையும் வாங்கினார்.
மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடுவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. அவரது மீன்பிடிக் கருவியும், 12 Bore துப்பாக்கியும் இன்னும் என்னிடம் உள்ளன" என்று வாணி சுந்தர்ஜி குறிப்பிடுகிறார்.
சுந்தர்ஜியின் ஒவ்வொரு வேலையிலும் வேகம் இருந்தது. அவர் மிக வேகமாக நடப்பார். உடன் நடப்பவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுவிடும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை அவர் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வேலை செய்தார்.
சுந்தர்ஜிக்கு வாகனங்களை ஓட்டுவது மிகவும் பிடிக்கும். பீரங்கிகள், ஏபிசிகள் (Armored personnel carrier) மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வரை அனைத்தையும் அவரால் ஓட்ட முடியும்.
அவர் மேற்கு கமாண்ட் தலைவராக இருந்தபோது ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளன்று அவரது முன்னாள் ADC ஒரு மோட்டார் சைக்கிளில் அவரைச் சந்திக்க வந்தார்.
"அப்போது டெல்லியில் உள்ள இன்ஸ்பெக்ஷன் பங்களாவின் வராண்டாவில் நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். சுந்தர்ஜி மோட்டார் சைக்கிளைப் பார்த்தவுடன் "என்னுடன் வா" என்றார். நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தோம். அந்த நேரத்தில் சுந்தர்ஜி குர்தா பைஜாமா அணிந்திருந்தார், நான் இரவு உடையில் இருந்தேன். அடுத்த அரை மணிநேரத்திற்கு அவர் மோட்டார் சைக்கிளில் கன்டோன்மென்ட் முழுவதும் சுற்றினார்" என்று வாணி சுந்தர்ஜி நினைவு கூர்ந்தார்.
ஒருமுறை அவர் பாலைவனத்தின் 44 டிகிரி வெப்பத்தில் APCஐ ஓட்டினார். சிறிது நேரத்திற்குள் அவரது தோழர்கள் பலர் வெப்பத்தால் துவண்டு போனார்கள். ஆனால் 51 வயதான லெப்டினன்ட் ஜெனரல் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு வாகனத்தை தொடர்ந்து ஓட்டினார்.
"சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ராணுவ தளபதியானபோது நாங்கள் ஒன்றாக பபீனா என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கு பல பீரங்கிகள் வரிசையாக நிற்பதை அவர் கண்டார். உடனடியாக அருகிலுள்ள ஒரு டாங்கின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த அவர் உடன் அமரும்படி என்னையும் அழைத்தார். அதன் பிறகு அவர் அந்தக் கரடுமுரடான நிலப்பரப்பில் முழு வேகத்தில் பீரங்கியை ஓட்டினார்" என்று வாணி நினைவு கூர்ந்தார்.
அவர் பாகிஸ்தானுக்கு சென்றபோது, அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி ஆசிப் நவாஸ் ஜன்ஜுவாவின் விருந்தினராக இருந்தார். இஸ்லாமாபாத், பெஷாவர், கைபர் கணவாய் ஆகிய இடங்களுக்கு சுந்தர்ஜி சென்றார். பாகிஸ்தான் ராணுவத் தலைவரின் வேண்டுகோளின் பேரில் அவர் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் 50 மீட்டர் உள்ளே சென்றார். இதன் பிறகு அவர் ஹெலிகாப்டர் மூலம் தக்ஷசீலா, மொஹஞ்சதாரோ மற்றும் லாகூருக்கும் பயணம் மேற்கொண்டார்.
ஜெனரல் சுந்தர்ஜி 'மோட்டார் நியூரான் நோயால்' பாதிக்கப்பட்டிருப்பதை 1998 ஜனவரி 10ஆம் தேதி மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இது மூளை மற்றும் முதுகுத் தண்டில் உள்ள மோட்டார் நியூரான்களை பாதிக்கும் ஒரு நரம்பியல் நோய். இது தசை பலவீனத்தையும் இறுதியில் பக்கவாதத்தையும் ஏற்படுத்தும்.
இந்த நோயைப் பற்றி ஜெனரல் சுந்தர்ஜியிடம் சொல்வதற்கு மருத்துவர்கள் சிறிது தயங்கினர். ஆனால் விரைவில் அவர் இந்த நோயைப் பற்றிய அனைத்தையும் இணையம் மூலம் கண்டுபிடித்தார்.
உயிர் காக்கும் கருவிகளைப் பயன்படுத்தி உயிர்வாழ அவர் விரும்பவில்லை. அவர் தனது மருத்துவர்களிடம் கருணைக் கொலை பற்றிய கேள்விகளைக் கேட்டார்.
மார்ச் 28ஆம் தேதிக்குள் அவர் உயிர்காக்கும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குச் சென்றுவிட்டார். அந்த நிலையிலும்கூட அவர் தனது மனைவிக்கு 'ப்ளீஸ் லெட் மீ கோ' (அதாவது தயவுசெய்து என்னைப் போக விடு) என்று நான்கு வார்த்தைகள் கொண்ட ஒரு குறிப்பை எழுதினார்.
"வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை அவர் முழு சுயநினைவுடன் இருந்தார். தனது கண்கள் மூலம் என்னிடமும், மருத்துவர்களிடமும் பேசிக் கொண்டிருந்தார். நான் அவருக்கு போக்ரான் அணு ஆயுத சோதனை பற்றிச் சொன்னேன். அந்த நிலையிலும் அவர் தினமும் மூன்று நாளிதழ்களைப் படிப்பார். பெரிய தொலைக்காட்சித் திரையில் கிரிக்கெட் பார்ப்பார்," என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார்.
நோய் கண்டறியப்பட்ட பிறகு 'ஒரு வருடம் மற்றும் ஒரு வாரம்' அவர் உயிருடன் இருந்தார். கடந்த 1999 பிப்ரவரி 8ஆம் தேதி ஜெனரல் சுந்தர்ஜி இந்த உலகத்தில் இருந்து விடைபெற்றார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு