மூடநம்பிக்கையின் உச்சம்..!காய்ச்சல் பாதித்த குழந்தைகளுக்கு சூடு..!
Newstm Tamil April 15, 2025 12:48 PM

கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம், கனககிரி தாலுகாவின் விட்டலாபுரா கிராமத்தில் மூட நம்பிக்கை அதிகரித்துள்ளது.

சிறு குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், மருத்துவமனைக்கு அழைத்து செல்வது இல்லை. ஊதுவத்தியால் சூடு வைத்தால் குணமாகும் என்பது இவர்களின் நம்பிக்கை.

கிராமத்தில் எந்த குழந்தைக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டாலும், ஊதுவத்தியில் சூடு வைக்கின்றனர்.

கடந்த 2024 டிசம்பரில், பெண் ஒருவரின் ஏழு மாத ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பல நாட்களாக குணமாகவில்லை. எனவே குழந்தையின் தாய், உடலில் ஊதுவத்தியால் பல இடங்களில் சூடு வைத்தார்.

இதில் தீக்காயமடைந்த குழந்தை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி டிசம்பர் 4ம் தேதி உயிரிழந்தது.

குழந்தைகளின் இறப்பை தடுப்பது குறித்து, நடப்பாண்டு பிப்ரவரி 2ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. அப்போது கொப்பாலின், விட்டலபுரா கிராமத்தில் சூடு வைத்து, குழந்தை இறந்த சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதை தீவிரமாக கருதிய கலெக்டர் நளின் அதுல், குழந்தையின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யும்படி உத்தரவிட்டார். அதன்பின் கனககிரி போலீஸ் நிலையத்தில், எப்.ஐ.ஆர்., பதிவானது. அதன்பின்னரே இவ்விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த கிராமத்தில் குழந்தைகளுக்கு ஊதுவத்தியால் சூடு வைத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, சுகாதாரத்துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பின் விசாரணை நடத்திய அதிகாரிகள், 18 வழக்குகள் பதிவு செய்தனர்.

குழந்தைகளுக்கு சூடு வைப்பது தெரிய வந்தால், குழந்தைகள் சஹாயவாணிக்கு தகவல் தெரிவிக்கும்படி, சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.