அமெரிக்காவில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் இந்திய வம்சாவளி பிரபல டாக்டர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பலியாகி உள்ளனர். கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் அடிக்கடி விமான விபத்து என்ற செய்திகள் வந்தவாறு உள்ளது. சிறிய தனியார் விமானங்கள் முதல் பெரும் விமான நிறுவனங்களின் விமானங்களும் தப்பவில்லை.
பஞ்சாபிலிருந்து பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த சைனி பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்தார். அங்கே டாக்டர் மைக்கேல் க்ரோஃப் ஐ சந்தித்து காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு கரினா க்ரோஃப் என்ற மகளும் ஜெராட் க்ரோஃப் என்ற மகனும் உண்டு. கரினா க்ரோஃப் மருத்துவக் கல்லூரியிலும் ஜெராட் சட்டக்கல்லூரியிலும் பயின்று வந்தனர்.
சம்பவத்தன்று டாக்டர் சைனி, டாக்டர் மைக்கேல் க்ரோஃப், மகள் கரினா க்ரோஃப் அவருடைய நீண்டநாள் காதலர் ஜேம்ஸ் சண்டோரோ, மகன் ஜெராட் க்ரோஃப் அவருடைய நீண்ட நாள் காதலி அலெக்சியா கவுட்டஸ் ஆகிய 6 பேரும் மிசுபிஷி எம்.யு 2பி ரக இரட்டை எஞ்சின் விமானத்தில் பிறந்தநாள் கொண்ட்டாட்டத்திற்காக சென்றனர்.
விமானத்தை டாக்டர் சைனியின் கணவர் டாக்டர் மைக்கேல் க்ரோஃப் ஓட்டினார். கொலம்பிய கவுண்டி விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பாக வழி தவறிய விமானம் வயல் வெளியில் இறங்கி விபத்துக்குள்ளாகியது. சம்பவ இடத்திலேயே விமானத்தில் பயணித்த 6 பேரும் பலியாகியுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒரே விமானத்தில் பயணம் செய்த ஒட்டு மொத்த குடும்பமும் பலியாகியுள்ளது பாஸ்டன் நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்டன் நகரில் டாக்டர் சைனியும் டாக்டர் மைக்கேல் க்ரோஃப் ம் மிகவும் பிரபலமான மருத்துவர்கள் ஆவார்கள்.