டைட்டானிக் கப்பல் குறித்து முழுமையான டிஜிட்டல் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விரிவான பகுப்பாய்வு, அழிந்த அக்கப்பலின் இறுதி மணித்துளிகள் பற்றி புதிய விவரங்களை அளித்துள்ளது.
1912 ஆம் ஆண்டில் பனிப்பாறையில் மோதிய பின்னர் டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது, அந்த கப்பல் எவ்வாறு இரண்டாகக் உடைந்தது என்பதைக் காட்டும் முப்பரிமாண படம், அந்த பேரழிவில் 1,500 பயணிகள் உயிரிழந்ததை வெளிப்படுத்துகின்றது.
டைட்டானிக் கப்பலில் இருந்த கொதிகலன் அறையின் புதிய காட்சி ஒன்றையும் இந்த ஸ்கேன் வெளிப்படுத்துகிறது.
கப்பலின் விளக்குகளை தொடர்ந்து எரிய வைக்க, பொறியாளர்கள் இறுதிவரை வேலை செய்ததாக, அதனை நேரில் கண்ட சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களை இது உறுதிப்படுத்துகிறது.
கப்பலின் மேல் பகுதியில், ஏ4 பேப்பரின் அளவில் இருந்த சிறிய துளைகள், கப்பல் மூழ்குவதற்கு காரணமாக அமைந்தன என்பதை கணினி மூலம் உருவாக்கப்பட்ட படம் காட்டுகிறது.
"பேரழிவை கடைசியாக நேரில் கண்ட சாட்சி டைட்டானிக். அதனிடம் சொல்வதற்கு இன்னும் பல கதைகள் உள்ளன," என்கிறார் டைட்டானிக் ஆய்வாளரான பார்க்ஸ் ஸ்டீபன்சன்.
டிஜிட்டல் இரட்டையை உருவாக்க 7 லட்சம் புகைப்படங்கள்நேஷனல் ஜியோகிராஃபிக் மற்றும் அட்லாண்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள டைட்டானிக்: தி டிஜிட்டல் ரெசரெக்ஷன் என்ற புதிய ஆவணப்படத்திற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலின் பனிப்பாறைகள் சூழ்ந்த நீரில் 3,800 மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் உள்ளன.
இந்த பாகங்கள், நீருக்கடியில் செயல்படும் ரோபோக்கள் மூலம் விரிவாக படமாக்கப்பட்டது.
ஒவ்வொரு கோணத்திலிருந்தும் எடுக்கப்பட்ட 7 லட்சத்திற்கும் மேற்பட்ட படங்கள் இந்த சிதைந்த கப்பலின் "டிஜிட்டல் இரட்டையை" உருவாக்க பயன்படுத்தப்பட்டன.
இது 2023 ஆம் ஆண்டில் இந்த டிஜிட்டல் இரட்டை பிபிசி மூலம் பிரத்யேகமாக உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது .
பெரிய அளவில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள், ஆழமான, இருண்ட கடல் பகுதியில் உள்ளன.
அதனை நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் ஆராய்ந்தால் குறைந்த காட்சிகளையே பெற முடிகிறது.
ஆனால் இந்த ஸ்கேன், டைட்டானிக்கின் முழுமையான காட்சியை முதன்முறையாக வழங்கியுள்ளது.
இன்னும் தனது பயணத்தைத் தொடர முயல்வது போல, டைட்டானிக் கப்பலின் முன்புறம் கடற்பரப்பில் நேராக உள்ளது.
ஆனால், 600 மீட்டர் தொலைவில் உள்ள டைட்டானிக் கப்பலின் பின்பகுதி (ஸ்டெர்ன்) முற்றிலும் சிதைந்த உலோகங்களின் குவியலாகவே உள்ளது.
கப்பல் பாதியாய் உடைந்து கடல் பரப்பில் மோதி நொறுங்கும் போது இந்த சேதம் ஏற்பட்டுள்ளது.
புதிய வரைபடத் தொழில்நுட்பத்தின் மூலம், டைட்டானிக் கப்பலை ஆராய புதியதொரு வழி கிடைத்துள்ளது.
"இது ஒரு குற்றச் சம்பவம் நடந்த இடத்தைப் போல் தான். அந்த ஆதாரம் என்ன என்பதையும், அது எந்த இடத்தில் உள்ளது என்பதையும் நீங்கள் பார்ப்பது அவசியம்," என்கிறார் பார்க்ஸ் ஸ்டீபன்சன்.
"மேலும் சிதைந்த இடத்தின் முழுமையான பார்வையைக் கொண்டிருப்பது, இங்கே என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது," என்றும் அவர் கூறினார்.
பனிப்பாறையால் உடைக்கப்பட்ட ஒரு ஜன்னல் போன்ற அமைப்பு உள்ளிட்ட, புதிய நுணுக்கமான விவரங்களை இந்த ஸ்கேன் வெளிப்படுத்துகின்றது.
இச்சம்பவம் நடந்த போது சிலரின் அறைகளுக்குள் பனிக்கட்டிகள் நுழைந்ததை, நேரில் கண்டதாக உயிர் பிழைத்தவர்கள் அளித்த சாட்சியங்களுடன் இது ஒத்துப்போகிறது.
டைட்டானிக்கின் மிகப்பெரிய கொதிகலன் அறைகளில் ஒன்றைக் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கப்பல் இரண்டாக உடைந்த இடத்தில், கப்பலுடைய முன்பகுதியின் கடைசியில் அந்த கொதிகலன் அறை அமைந்துள்ளது, எனவே ஸ்கேன் மூலம் அதை எளிதாகக் காணமுடிகிறது.
அலைகளின் கீழ் கப்பல் மூழ்கும் போதும், விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது என்று விபத்தில் தப்பித்த பயணிகள் தெரிவித்தனர்.
சில கொதிகலன்கள் அடிப்பகுதியில் இருந்தன என்பதையும், அவை தண்ணீரில் மூழ்கியபோதும் செயல்பட்டன என்பதையும் இப்படங்கள் வெளிக்காட்டுகின்றன.
கப்பலின் பின்பகுதியில், திறந்த நிலையில் ஒரு மூடி போன்ற அமைப்பு (வால்வு) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அமைப்பிற்கு, நீராவி பாய்ந்து கொண்டிருந்ததை வெளிப்படுத்துகிறது.
இதற்காக ஜோசப் பெல் தலைமையிலான பொறியாளர்களின் குழுவிற்கு நன்றி கூற வேண்டும்.
விளக்குகள் அணையாமல் இருக்க, உலைகளில் நிலக்கரியை இட்டு நிரப்புவதற்காக அவர்கள் கப்பலின் பின்புறத்தில் இருந்தனர்.
பேரழிவுகரமான இச்சம்பவத்தில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தாலும், அவர்களின் வீரதீர செயல்கள் பலர் உயிர் பிழைப்பதற்கு வழிவகுத்தன என்று பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறினார்.
"முழுமையான இருட்டில் மூழ்கிவிடாமல், குறைந்தபட்ச வெளிச்சம் இருக்கும்படி, உயிர் காக்கும் படகுகளை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதற்கு தேவையான நேரத்தை குழுவினருக்கு வழங்க, அவர்கள் இறுதி வரை விளக்குகளையும் மின்சக்தியையும் இயங்க வைத்தனர்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"அவர்கள் குழப்பத்தை முடிந்தவரை கட்டுப்படுத்தி வைத்தனர். அதற்கான ஒரு அடையாளமாக அந்த திறந்த நிலை நீராவி வால்வு கப்பலின் பின்புறம் அமைந்திருந்தது," என்று அவர் கூறினார்.
கணினியின் மூலம் உருவகப்படுத்தப்பட்ட ஒரு புதிய படம், டைட்டானிக் மூழ்கிய விதத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளது.
இது டைட்டானிக்கின் வரைபடத்திலிருந்து உருவாக்கப்பட்ட கப்பலின் விரிவான கட்டமைப்பு மாதிரியையும், அதன் வேகம், திசை மற்றும் நிலை பற்றிய தகவல்களை பயன்படுத்தி, பனிப்பாறையை கப்பல் தாக்கியபோது ஏற்பட்ட சேதத்தை கணிக்க உதவுகிறது.
"டைட்டானிக் மூழ்கியதை மீண்டும் உருவாக்க, மேம்பட்ட எண்ணியல் வழிமுறைகள், கணக்கீட்டு மாதிரிகள் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டிங் திறன்களைப் பயன்படுத்தினோம்," என்று ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜியோம்-கீ பைக் கூறினார்.
கப்பல் பனிப்பாறையில் மோதியபோது, ஒரு மெல்லிய தாக்கத்தை மட்டும் ஏற்படுத்தியதால், கப்பலில் ஒரு குறுகிய பகுதியில், வரிசையாக சிறிய துளைகள் உருவாகின என்பதை கணினி மூலம் உருவாக்கப்பட்ட படம் காட்டுகிறது.
டைட்டானிக்கின் நான்கு நீர்ப்புகா பெட்டிகளில் வெள்ளம் புகுந்தாலும், அது மிதந்து கொண்டே இருக்கும் வகையில், டைட்டானிக் மூழ்காமல் இருக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் கணினி மூலம் உருவகப்படுத்தப்பட்ட படம், பனிப்பாறையின் சேதம் ஆறு பெட்டிகளில் பரவியிருப்பதை கணிக்கின்றது.
"டைட்டானிக்கின் மேல்பகுதியில், ஒரு காகிதத்தின் அளவில் இருந்த சிறிய துளைகள் தான் டைட்டானிக் மூழ்கியதின் காரணம் " என்கிறார் நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் கடற்படைக் கட்டிடக்கலையின் இணை விரிவுரையாளர் சைமன் பென்சன்.
"அந்த சிறிய துளைகள் கப்பலின் நீளமான பகுதி முழுவதும் உள்ளன. அதனால் கடல் நீர் மெதுவாக, ஆனால் நிச்சயமாக அதன் எல்லா துளைகளுக்குள்ளும் நுழைந்து, பின்னர் பெட்டிகளுக்குள் புகுந்து, டைட்டானிக் மூழ்கியது தான் பிரச்னை"
துரதிஷ்டவசமாக, கப்பலின் கீழ் பகுதி, மண்ணுக்கு அடியில் மறைந்திருப்பதால், ஸ்கேனில் அந்த சேதத்தை காண முடியவில்லை.
அதேபோல், டைட்டானிக் கப்பலுக்கு ஏற்பட்ட விபத்தால் மக்களுக்கு ஏற்பட்ட தாக்கம் இன்னும் பெரிது.
அக்கப்பலில் பயணித்த பயணிகளின் பொருட்கள் கடல் பரப்பில் சிதறிக் கிடக்கின்றன.
இந்த புதிய ஸ்கேன் 1912 ஆம் ஆண்டின், ஒரு குளிர்கால இரவில் நடந்த சம்பவத்தைப் பற்றிய புதிய சான்றுகளை வழங்குகிறது.
ஆனால் முப்பரிணாம படத்தின் ஒவ்வொரு விவரத்தையும் முழுமையாக ஆராய்ந்திட நிபுணர்களுக்கு பல ஆண்டுகள் தேவை.
பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறுகையில், "டைட்டானிக், தனது கதையை சிறிது சிறிதாக எங்களுக்குத் தருகிறது"
"ஒவ்வொரு முறையும், இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது" என்கிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு