முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே அடங்கிய குழு நாளை விண்வெளிக்கு பயணம் - 6 பேரும் என்ன செய்வார்கள்?
BBC Tamil April 13, 2025 10:48 PM
Getty Images கார்மன் கோட்டை அடைந்ததும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்ற கேப்சூல் (சித்தரிப்புப் படம்)

பாப் பாடகி, பத்திரிகையாளர், விஞ்ஞானி, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் அடங்கிய ஒரு குழு ஏப்ரல் 14ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள்.

முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே உள்ளடக்கிய இந்த குழு விண்வெளிக்குச் செல்லப் போகிறது. ஆறு பெண்கள் உள்ள இந்தக் குழுவை, ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், அதன் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு, பெண்கள் மட்டுமே விண்வெளிப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. இந்தப் பயணத்தை .

இந்தக் குழுவில், பாப் பாடகியான கேட்டி பெர்ரி, செய்தியாளர் கேல் கிங், சிவில் உரிமைகள் வழக்கறிஞர் அமாண்டா நுயென், நாசாவின் முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் ஆறாவது பெண்ணாக, இந்தக் குழுவை வழிநடத்தப் போகிறவரும் ஜெஃப் பெசோஸின் காதலியுமான லாரன் சான்செஸ் பயணிக்கவுள்ளார்.

இவர்கள் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு கற்பனை எல்லைக்கோடான கார்மன் கோட்டைக் கடந்து செல்வார்கள்.

விண்வெளிக்கு ஒரு சிறு பயணம் Blue Origin ஏப்ரல் 14ஆம் தேதி ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லப்போகும் பெண்கள்

நியூ ஷெப்பர்ட்-31 என இந்தப் பயணத் திட்டத்தில், ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் இந்த ஆறு பெண்களும் பயணிக்கப் போகிறார்கள்.

அதனுள் இருக்கும் விண்கலம் முற்றிலுமாக தானியங்கி முறையில் செயல்படக்கூடியது. அதாவது, விண்கலத்தை இயக்குவதற்கென அதனுள்ளே யாரும் இருக்க மாட்டார்கள்.

இந்த விண்கலம், ஆறு பெண்களையும் பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் இருக்கும் கார்மன் எல்லைக் கோடு வரை அழைத்துச் செல்லும்.

இந்த பயணம் தோராயமாக 11 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். கார்மன் எல்லைக் கோடு பகுதியில் சில நிமிடங்களுக்கு ஈர்ப்பு விசையின்மை மற்றும் எடையின்மையை உணர்ந்த அவர்கள், விண்வெளியில் இருந்து பூமியின் அற்புதமான காட்சியைக் கண்டு களித்த பிறகு பூமியை நோக்கிய பயணத்தை தொடங்குவார்கள்.

பாப் பாடகி கேட்டி பெர்ரியின் இசை சுற்றுப்பயணம் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக ஏப்ரல் 14ஆம் தேதியன்றே இதைச் செய்து முடிக்க ப்ளூ ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இவர்களை ஏற்றிச் செல்லப்போகும் நியூ ஷெப்பர்ட் ராக்கெட், ஏப்ரல் 14ஆம் தேதியன்று அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் உள்ள அந்த நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும்.

Blue Origin

லாரன் சான்செஸ் கடந்த 2023ஆம் ஆண்டு வோக் பத்திரிகை நேர்காணலில், முழுமையாகப் பெண்கள் மட்டுமே விண்வெளிக்குப் பயணிக்கும் இத்தகைய கனவுப் பயணம் குறித்து விவரித்திருந்தார்.

"இது வெறுமனே ஒரு விண்வெளிப் பயணம் மட்டுமல்ல. இது மக்களின் மனநிலையை மாற்றுவது, எதிர்கால சந்ததிகளை ஊக்குவிப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய பயணம்," என்று ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கார்மன் எல்லைக்கோடு என்றால் என்ன?

கார்மன் கோடு என்பது ஒரு . இது பூமியின் கடல் மட்டத்தில் இருந்து 100 கி.மீ உயரத்தில் இருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவே, பூமியில் இருந்து பயணித்தால் விண்வெளியை அடைந்துவிட்டதாகக் கருதப்படும் இடம் எனப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, புவி வளிமண்டலத்தின் முடிவாகவும், விண்வெளியின் தொடக்கமாகவும் இந்தப் புள்ளி கருதப்படுகிறது.

கார்மன் கோடு, விமானவியல் மற்றும் வானியலுக்கு இடையே ஒரு வேறுபாட்டைக் குறிப்பதற்காக, ஃபெடரேஷன் ஏரோநாடிக் இன்டர்நேஷனல் என்ற அமைப்பால் தீர்மானிக்கப்பட்டது. இந்த உயரத்தை அடைவது, விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

"சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின்படி, இதுதான் விண்வெளி என்று ஒரு வரையறை உருவாக்கப்பட்டுள்ளது. அதுவே இந்த கார்மன் எல்லைக்கோடு," என்கிறார் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் முன்னாள் விஞ்ஞானியுமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

Blue Origin ஆறு பெண்களும் விண்வெளியில் வரையறுக்கப்பட்டுள்ள கார்மன் எல்லைக் கோட்டுக்கு சற்று மேலே சென்றுவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள்.

அவரது கூற்றுப்படி, கார்மன் எல்லைக்கோடு எனத் தீர்மானிக்கப்பட்டு இருக்கும் 100 கி.மீ என்ற உயரத்துக்குக் கீழேதான் 99.9% வரையிலான வளிமண்டலம் உள்ளது. ஆகையால்தான் அதற்கு மேலே இருக்கும் பகுதி விண்வெளி என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த எல்லைக் கோட்டைத் தாண்டிப் பயணிப்பவர்கள் "விண்வெளிக்குச் சென்றவர்கள்" என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள். அதனால்தான் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்வெளிப் பயணங்களும் இந்தக் கோட்டுக்கு மேலே சென்று, அதன் பயணிகளுக்கு உண்மையான விண்வெளி அனுபவத்தை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

'விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே நோக்கம்'

விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

"இத்தகைய விண்வெளிச் சுற்றுலா பயணங்களை இந்த நிறுவனம் பலமுறை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பயணம் குறித்துக் கேள்விப்பட்டதும், சுனிதா வில்லியம்ஸ் சென்றதைப் போன்றதொரு பயணமோ எனக் கருதிவிடக்கூடாது," என்கிறார் அவர்.

சுனிதா வில்லியம்ஸ் சுமார் 400 கி.மீ உயரத்தில் இருக்கக்கூடிய விண்வெளிப் பகுதிக்குச் சென்றிருந்தார். ஆனால், இது அப்படியான பயணமல்ல என்கிறார் வெங்கடேஸ்வரன்.

Getty Images விண்வெளி சுற்றுலா துறையை பிரபலப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்

பல்வேறு துறைகளைச் சேர்ந்த மகளிர் மட்டுமே செல்லும் இந்த விண்வெளிப் பயணம் குறித்து விளக்கிய அவர், "விண்வெளி தொடங்கும் இடமான கார்மன் எல்லைக் கோட்டுக்குச் சற்று மேலே சென்றுவிட்டு, ஒரு சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி விடுவார்கள்," என்றார்.

அதுகுறித்து விரிவாக விளக்கிய வெங்கடேஸ்வரன், "இந்தப் பயணத்தின் மொத்த நேரமே சுமார் 11 நிமிடங்கள்தான் இருக்கும். ஏழு நிமிடங்களுக்கு ராக்கெட்டில் பயணிப்பார்கள். சுமார் 48 கி.மீ வரை அதில் பயணித்த பிறகு, அங்கிருந்து ஒரு கல் மேல்நோக்கி வீசப்படுவதைப் போல, ராக்கெட்டில் இருந்து பயணிகள் இருக்கும் விண்கலம் விண்வெளி நோக்கி வீசப்படும்.

ராக்கெட்டில் இருந்து வீசப்படும் விண்கலம், கார்மன் கோட்டுக்குச் சற்று மேலே வரை சென்றுவிட்டு பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்பிவிடும்," என்று விவரித்தார்.

விண்வெளி சுற்றுலாத் துறைக்கு மக்களை ஈர்க்க வேண்டும் என்பதும் இதன்மூலம் ஒரு புதிய தொழிலை உருவாக்கலாம் என்பதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கூறுகிறார் அவர். அதே நேரத்தில், இத்தகைய முயற்சி "பெண்கள் முன்னேற்றம் மீதான கவனத்தையும் எதிர்கால சந்ததிகளுக்கு ஓர் உத்வேகத்தையும்" ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விண்வெளிக்குச் செல்லப்போகும் பெண்களின் பின்னணி என்ன?

இந்தப் பயணத்தில் விண்வெளி எல்லைக் கோடான கார்மன் கோட்டுக்குச் செல்லப் போகும் ஆறு பெண்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன?

லாரன் சான்செஸ் Lauren Sánchez/IG லாரன் சான்செஸ்

எம்மி விருது பெற்ற பத்திரிகையாளரான இவர், நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையான படைப்புகளைக் கொண்ட எழுத்தாளர், விமானி, பெசோஸ் எர்த் ஃபண்ட் அமைப்பின் துணைத் தலைவர் எனப் பன்முகம் கொண்டவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான, உரிமம் பெற்ற ஹெலிகாப்டர் விமானியான சான்செஸ் கடந்த 2016ஆம் ஆண்டில் ப்ளாக் ஆப்ஸ் ஏவியேஷன் என்ற நிறுவனத்தை நிறுவினார். இது, முழுவதும் பெண்களால் நிறுவப்பட்டு, நிர்வகிக்கப்படும் முதல் வான் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும்.

ஹெலிகாப்டர் விமானியாகவும் விமானப் பணி சார்ந்த தொழிலதிபராகவும் அவர் செய்த பணிக்காக, 2024இல் எல்லிங் ஹால்வர்சன் வெர்டிகல் ஃப்ளைட் ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருதைப் பெற்றார்.

ஆயிஷா போவே Aisha Bowe/IG ஆயிஷா போவே

ஆயிஷா போவே பஹாமாவை பூர்வீகமாகக் கொண்டவர். நாசாவின் முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி மற்றும் தொழில்முனைவோரான ஆயிஷா, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் ஆகியவற்றை ஊக்குவிப்பவராகவும் இருக்கிறார்.

அமெரிக்காவின் வேகமாக வளர்ந்து வரும் தனியார் நிறுவனங்களின் பட்டியலான இங்க் 5000-இல் இரண்டு முறை இடம்பிடித்த பொறியியல் நிறுவனமான ஸ்டெம்போர்டின் (STEMBoard) தலைமை செயல் அதிகாரியாகவும் ஆயிஷா இருக்கிறார். மேலும், பத்து லட்சம் மாணவர்களுக்கு அத்தியாவசிய தொழில்நுட்ப திறன்களைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்ட லிங்கோ (LINGO) என்ற நிறுவனத்தையும் இவர் நிறுவியுள்ளார்.

அமாண்டா இங்குயென் Amanda Nguyễn/IG அமாண்டா இங்குயென்

அமாண்டா, ஓர் உயிரி விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி. அவர் ஹார்வர்டில் பட்டம் பெற்றார். மேலும், ஹார்வர்ட் வான் இயற்பியல் மையம், எம்ஐடி, நாசா, சர்வதேச வானியல் அறிவியல் நிறுவனம் ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 1981 முதல் 2011 வரை நாசா முன்னெடுத்த மறுபயன்பாட்டு விண்கலத் திட்டத்தின் கடைசி விண்வெளிப் பயணத் திட்டத்தில் அமாண்டா பணியாற்றியுள்ளார். அவர் கெப்லர் புறக்கோள் திட்டத்திலும் பணியாற்றியுள்ளார்.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர்களுக்காகக் குரல் கொடுத்து வருவதால் அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். கடந்த 2022ஆம் ஆண்டில் டைம் இதழின், ஆண்டின் சிறந்த பெண் என்ற விருதையும் அவர் பெற்றுள்ளார்.

கேல் கிங் Gayle King/IG கேல் கிங்

கேல் கிங் ஒரு விருது பெற்ற பத்திரிகையாளர். சிபிஎஸ் மார்னிங்ஸின் இணை தொகுப்பாளராகவும் ஓப்ரா டெய்லியின் ஆசிரியராகவும் இருக்கும் இவர் சிரியஸ்எக்ஸ்எம் வானொலியில் கேல் கிங் இன் தி ஹவுஸ் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் உள்ளார்.

தனது பல்லாண்டுக்கால பத்திரிகை அனுபவத்தில் நேர்காணலில் அர்த்தமுள்ள உரையாடல்களை உருவாக்குவதில் திறமை படைத்தவராக கேல் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

கேட்டி பெர்ரி Getty Images கேட்டி பெர்ரி

கேபிடல் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் அதிகம் விற்பனையாகும் பெண் கலைஞராக கேட்டி பெர்ரி அறியப்படுகிறார். பாப் பாடகியான இவர், 115 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட, அனைத்து காலகட்டத்திலும் அதிகமாக விற்பனையாகும் இசைக் கலைஞர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

உலகளாவிய பாப் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் கேட்டி, பல மனிதநேய நோக்கங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அதில், யுனிசெஃப் நல்லெண்ண தூதராக, ஒவ்வொரு குழந்தையின் சுகாதாரம், கல்வி, சமத்துவம், பாதுகாப்புக்கான உரிமையை உறுதி செய்வதற்காக அவர் குரல் கொடுத்து வருகிறார்.

கேரியன் ஃப்ளின் Kerianne Flynn/IG கேரியன் ஃப்ளின்

ஃபேஷன் மற்றும் மனித வளத்துறையில் சிறந்து விளங்கிய பிறகு, கேரியன் ஃப்ளின், கடந்த பத்து ஆண்டுகளாக தி ஆலன்-ஸ்டீவன்சன் பள்ளி, தி ஹை லைன், ஹட்சன் ரிவர் பார்க் ஆகியவற்றுடன் இணைந்து லாப நோக்கமற்ற தன்னார்வப் பணிகளைச் செய்து வருகிறார்.

கதை சொல்லலுக்கு இருக்கும் ஆற்றலின் மீது அதீத ஆர்வமுள்ள கேரியன், ஹாலிவுட்டில் பெண்களின் வரலாற்றை ஆராயும் திஸ் சேஞ்சஸ் எவ்ரிதிங்(2018), லில்லி லெட்பெட்டர் என்ற வழக்கறிஞர் குறித்தான லில்லி(2024) போன்ற சிந்தனையைத் தூண்டும் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.