கோவா மாநிலம் தனது இயற்கை அழகு மற்றும் கடற்கரையால் சுற்றுலா பயணிகளுக்கு புகழ்பெற்ற இடமாக கருதப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ஒரு குழு இளைஞர்கள் இந்த இயற்கை அழகை கெடுக்கக்கூடிய செயல்களில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதாவது இளைஞர்கள் சிலர் தங்களுடைய காரில் கோவாவிற்கு சுற்றுலாவிற்காக சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து திரும்பிய நிலையில் சாலையின் அருகே மது அருந்திவிட்டு பாட்டில்களை சாலையில் அடித்து நொறுக்கி வீடியோவாக பதிவு செய்தனர்.
இதனைக் அங்கிருந்த உள்ளூர்வாசிகள் சிலர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களின் செயல்களை கண்டித்தனர். ஆனால் அந்த இளைஞர்கள் அவர்களின் பேச்சை கண்டுக்காமல் அங்கிருந்து சென்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்மணி அவர்கள் சென்ற வாகனத்தை நிறுத்தும்படி கூறி வீடியோ பதிவு செய்து கொண்டே அவர்களிடம் “பாட்டில்கள் உடைத்த இடத்திற்கு சென்று சுத்தம் செய்யுங்கள்” என்று கூறினார். அதற்கு அந்த இளைஞர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சாலை ஓரத்தில் வீசிய பாட்டில்களின் துண்டுகளை எடுக்கும்படி இளைஞர்களை கட்டாயப்படுத்திய போது, இளைஞர்கள் அந்த இடத்திற்கு சென்று பாட்டில் துண்டுகளை சுத்தம் செய்தனர்.
இதனை வீடியோவாக பதிவு செய்த அந்தப் பெண் இணையத்தில் பதிவிட்ட நிலையில் “இவர்கள் வீதியில் பாட்டில்கள் உடைத்துக் கொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது பொதுமக்கள் இந்த செயலை கண்டித்ததோடு பாட்டில்களின் துண்டுகளை அவர்களையே எடுக்க சொல்லி ஒழுங்கு கற்றுக் கொடுத்தார்கள்” என்று கூறினார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் “இப்படி பாடம் கற்றுத் தர வேண்டும்” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.