மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் ஷா கே கோல்ஹுபுரா பகுதியிலிருந்து தொடங்கிய நிலையில் இரவு 8 மணி அளவில் கொலனல்கன்ச் மசூதிக்கு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஊர்வலத்தை முன்னாள் நகர விடாமல் வார்டு கவுன்சிலருக்கும், பொதுமக்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த சமயத்தில் திடீரென ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது கற்கள் வீசப்பட்டன.
இதனால் அங்கிருந்த மக்கள் பீதி அடைந்து ஓடிய நிலையில் சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் சிறிது நேரத்தில் தாக்குதலை கட்டுப்படுத்தினர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, கற்கள் வீசியவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர் அந்த இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் கிஷோர் குமார் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து செல்லுமாறு சமாதானப்படுத்திய நிலையில் அவர்கள் அங்கிருந்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.