நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் 30 வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. லக்னோவில் நடந்த இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 63 ரன்கள் எடுத்திருந்தார்.
தொடர்ந்து, 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணி 20 ஓவரில் 3 பந்துகளை மீதம் வைத்து இலக்கை எட்டிப்பிடித்தது. சென்னை அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தாலும், மிடில் ஆடரில் களமாடிய பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறி அவுட் ஆகினர். களத்தில் இருந்த தோனி - துபே தோனி லக்னோ பவுலிங்கை சமாளித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதன்மூலம் சென்னை வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. தோனி அணியின் வெற்றியை உறுதி செய்ய 11 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சரை பறக்கவிட்டு 26 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், ஆயுஷ் பதோனியை ஸ்டெம்பிங் செய்து, விக்கெட் கீப்பராக 200வது ஆட்டமிழப்பை பதிவு செய்தார். அத்துடன் அப்துல் சமத் விக்கெட்டை மிரட்டலான ரன் அவுட் மூலம் கைப்பற்றி அசத்தினார்.
தோனிக்கு இந்த ஆட்டத்தின் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஐ.பி.எல் வரலாற்றில் ஆட்ட நாயகன் (பி.ஓ.டி.எம்) விருதை வென்ற மிக வயதான வீரர் எம்எஸ் தோனி (43) என்கிற சாதனையை படைத்துள்ளார். இந்த விருதை பெற்றுக் கொண்ட தோனி, "அவங்க ஏன் எனக்கு விருது கொடுக்குறாங்கன்னு தெரியல?, நூர் (அகமது) ரொம்பவே நல்லா பந்து வீசியிருந்தார். அவருக்கு கொடுத்திருக்கலாம்" எனக் கூறியிருந்தார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை மிகச் சிறப்பாக வீசிய நூர் அகமது ஒரு ஓவருக்கு 3.20 ரன் என்கிற எக்கனாமியில் வெறும் 13 ரன்கள் தான் விட்டுக் கொடுத்திருந்தார். அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.