மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் இரண்டு பெண்கள் நடுரோட்டில் மற்றொரு பெண்ணை கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், 2 இளம் பெண்கள் நடு ரோட்டில் மற்றொரு பெண்ணை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் அழுது கொண்டே தனது இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார் ஆனால் மற்ற இரண்டு பெண்களும் அந்தப் பெண்ணை அடிப்பதை நிறுத்தாமல் அவரது கைகளை தடுத்து தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கின்றனர்.
மேலும் அந்தப் பெண்ணை அடிப்பதை ரசித்துக் கொண்டே அடிக்கின்றனர். அந்த சண்டையை யாரும் தடுக்கவோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவவோ முன் வரவில்லை. அதற்கு மாறாக பின்னணியில் இசை ஒன்றை வைத்து இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் முழுவதும் இந்தூரில் உள்ள எம்.ஐ.ஜி காவல் நிலையத்திற்கு பின்னால் அமைந்துள்ள சாய் மந்திர் அருகே நடைபெற்று உள்ளது. இதுவரை இச்சம்பம் குறித்து காவல்துறை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. அந்தப் பெண்கள் யார்? ஏன் சண்டை நடந்தது? என்பது குறித்த எந்த ஒரு தெளிவான விவரமும் தெரியவில்லை.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் பாதிக்கப்பட்ட பெண்ணை அடித்து துன்புறுத்திய இரண்டு பெண்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தாக்கப்பட்ட பெண்ணிற்கு உதவுவதற்கு பதிலாக அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிடுவது வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.