இன்று சட்டமன்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக உறுப்பினர் கேள்விக்கு திமுகவை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டம் விடுமுறைக்கு பிறகு இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகள், கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது அதிமுக உறுப்பினர் ஜெயசீலன், கூடலூரில் டைடல் பார்க் அமைத்து தர வேண்டும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கோரிக்கை வைத்தார்.
அதற்கு விளக்கம் அளித்த பழனிவேல் தியாகராஜன் “எனது துறைக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை போல அல்லாமல் தொழிற்பூங்காக்களில் சிறு பகுதி மட்டுமே எனது துறையின் வசம் உள்ளது. டைடல் பார்க், நியோ டைடல் பார்க் உள்ளிட்டவை தொழிற்துறையின் வசமே உள்ள அசாதாரணமான நிலை தொடர்ந்து வருகிறது. நீஇங்கள் நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதை கேட்டால் கிடைக்கும்” என பேசியுள்ளார்.
அதற்கு பழனிவேல் தியாகராஜனுக்கு அறிவுரை வழங்கிய சபாநாயகர் அப்பாவு “துரைசார்ந்த பிரச்சினைகளை முதல்வரிடம் பேசி தீர்வு காணுங்கள். உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் நேர்மறையான பதில்களை வழங்க வேண்டும்” என கூறியுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக திமுக ஆட்சியமைத்தபோது நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செயல்பட்ட நிலையில், நிதித்துறை பின்னர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டு, பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில் அவர் திமுக குறித்து அதிருப்தி தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K