"நிதியும், அதிகாரமும் இருப்பவரிடம் கேளுங்கள்; என் துறையில் இல்லை" - சட்டமன்றத்தில் PTR ஓப்பன் டாக்
Vikatan April 21, 2025 09:48 PM

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த கேள்விக்கு, எங்களிடம் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளிப்படையாகப் பதிலளித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், தனது தொகுதி மேம்பாடு குறித்து அதிமுக எம்.எல்.ஏ ஜெயசீலன், "எனது கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனங்களும் இல்லை. எனவே, எனது தொகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்காவினை அமைத்துத் தருவதற்கு அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்" என்று கேள்வியெழுப்பினார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதி குறைவு...

அதற்குப் பதிலளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இந்த கூட்டத் தொடரிலேயே என்னுடைய துறையில் இருக்கின்ற சிக்கல்களை நான் கூறியிருக்கிறேன். நிதியும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல எல்லா தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் தொழில்நுட்பத் துறையில் செயல்படுவதில்லை.

எனவே, யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். எங்களிடம் அது இல்லை" என்று வெளிப்படையாகப் பேசினார்.

அமைச்சரின் இந்தப் பதிலை சற்றும் எதிர்பாராத சபாநாயகர் அப்பாவு, மேலோட்டமாகக் கண்டடிக்கும் தொனியில், "இதை உள்ளுக்குள்ளே முதல்வரிடம் பேசி முடிவெடுக்க வேண்டியது. பாசிட்டிவாகப் பதில் சொன்னால் எம்.எல்.ஏ-க்களுக்கு நன்றாக இருக்கும்" என்றார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - அமைச்சர் தங்கம் தென்னரசு

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்ற பிறகு, ஸ்டாலின் அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றவர் .

இவ்வாறிருக்க, அவர் பேசுவதுபோன்ற ஆடியோ ஒன்று 2023-ல் சமூக வலைத்தளங்களில் கசிந்தது.

அதன்பின்னர், அந்த ஆடியோ முற்றிலும் போலியானது என்று பழனிவேல் தியாகராஜன் மறுத்தார். இருப்பினும், அடுத்த சில நாள்களிலேயே, நிதித்துறை இலாகா அவரிடமிருந்து தங்கம் தென்னரசுக்கு மாற்றப்பட்டு, தகவல் தொழில்நுட்பத்துறைக்கு இவர் அமைச்சராக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.