`ஏற்கெனவே அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறோம் என்கிறார்கள்; இதில் இது வேறா?' - உச்ச நீதிமன்ற நீதிபதி
Vikatan April 21, 2025 09:48 PM

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பி வைத்த பத்துக்கும் அதிகமான மசோதாக்களை நிலுவையில் போட்டு வைத்ததும், அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததும் மசோதாக்களை அவசர அவசரமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

ஆளுநர் ரவி | RN Ravi | supreme Court `எந்த தனி அதிகாரமும் இல்லை’

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் வழங்கிய விரிவான தீர்ப்பில், `ஆளுநர் என்பவர் அந்தந்த மாநில அரசின் அமைச்சரவை குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைக்கு உட்பட்டு செயல்படக் கூடியவர் தான் என்றும் மசோதாக்களின் மீது சட்டத்தில் சொல்லாத நடவடிக்கைகளில் ஈடுபட அவருக்கு எந்த தனி அதிகாரமும் இல்லை என தெரிவித்ததோடு மசோதாக்கள் மீது அதிகபட்சம் மூன்று மாத காலத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்’ என்று கால வரம்பும் நிர்ணயித்திருந்தது. அத்துடன் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவரும் அதிகபட்சம் மூன்று மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் மீது விமர்சனம்

இது மாநில சுயாட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பல்வேறு தரப்பும் கொண்டாடி வந்த நிலையில் இந்த தீர்ப்பை உடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க, நேரடியாக உச்ச நீதிமன்றத்தின் மீது அக்கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்யத் தொடங்கி இருந்தார்கள்.

துணை குடியரசு தலைவரான ஜெகதீப் தன்கர் உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அரசியல் சாசன பிரிவான 142 ஆவது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் நீதித்துறை நேரடியாக நாடாளுமன்ற விவகாரங்களில் தலையிட நினைப்பதாகவும் இது ஆபத்தான போக்கு என்றும் எச்சரிக்கும் வகையில் பேசி இருந்தார்.

உச்ச நீதிமன்றம்

பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரான நிஷிகாந்த் துபே, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நேரடியான விமர்சனங்களை முன் வைத்திருந்தார் . இவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், இவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

`குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி கொண்டு இருக்கிறோம்’

இதற்கிடையில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வில், வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகி, `வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தில் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அம்மாநில அரசு தவறிவிட்டது. எனவே அங்கு உடனடியாக துணை இராணுவ படையை அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பிப்பதோடு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி தான் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

உச்ச நீதிமன்றம்

அப்போது பேசிய நீதிபதி, ``ஏற்கனவே நாங்கள் அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறோம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி கொண்டு இருக்கிறோம். இதில் இது வேறு? இந்த சூழலில் நாங்கள் குடியரசு தலைவருக்கு இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என சலிப்புடன் கூறினார் மேலும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நீதிபதி பி.ஆர் கவாய் தான் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்னும் சில வாரங்களில் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.