``தண்ணீர் பஞ்சத்தால் இளைஞர்களுக்கு திருமணம் நடப்பதில்லை.." - தண்ணீரை பூட்டி வைக்கும் கிராமத்தினர்
Vikatan April 21, 2025 09:48 PM

நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் தான் அதிக பட்ச வெயில் அடிக்கிறது. இதனால் மக்கள் கிலோ மீட்டர் கணக்கில் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு அமைத்துள்ள குடிநீர் பைப்களில் சில நேரங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருகிறது. இதையடுத்து மகாராஷ்டிரா மக்கள் தண்ணீருக்கு பணத்தை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

அகோலா மாவட்டத்தில் உள்ள உக்வா என்ற கிராமத்தில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் பைப்களில் தண்ணீர் வருகிறது. சில நேரங்களில் 45 முதல் 60 நாள் கழித்துதான் பைப்பில் தண்ணீர் வருகிறது. இதனால் உக்வா கிராம மக்கள் தண்ணீர் வரும் போது பெரிய தொட்டிகளில் சேமித்து வைத்துக்கொள்கின்றனர்.

அந்த தண்ணீர் ஒரு மாதத்திற்கு தேவை என்பதால் அதிகமான வீடுகளில் தண்ணீர் தொட்டிக்கு மக்கள் பூட்டுப்போட்டுள்ளனர். யாராவது தண்ணீரை திருடிச்சென்றுவிடக்கூடாது என்பதற்காக இது போன்ற முன்னேற்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த சந்தா என்ற பெண் கூறுகையில்,''எங்களுக்கு பணத்தை விட தண்ணீர் முக்கியமானதாக இருக்கிறது. யாராவது தண்ணீரை திருடிச்சென்றுவிட்டால் நாங்கள் தண்ணீருக்காக அடுத்த இரண்டு மாதம் காத்திருக்கவேண்டும். அல்லது ரூ.600 கொடுத்து டேங்கர் தண்ணீர் வாங்கவேண்டும்'' என்றார்.

இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் தண்ணீர் பிரச்னையால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி இக்கிராமத்திற்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த யாரும் திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர்.

தண்ணீர் தட்டுப்பாடு

உள்ளூர் பெண்களே உள்ளூர் ஆண்களை திருமணம் செய்ய மறுக்கின்றனர் என்று அக்கிராம ஆண்கள் குறைபட்டுக்கொண்டுள்ளனர்.

ஜூன் இறுதியில் மழை தொடங்கும். அதுவரை இந்த பிரச்னை இருக்கத்தான் செய்யும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் இந்த சித்ரவதையை அனுபவித்து வருவதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். நந்துர்பர் மாவட்டத்தில் உள்ள தன்காவ் பகுதி பழங்குடியின மக்கள் தண்ணீருக்காக 7 முதல் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து செல்கின்றனர்.

வழியில் சில நேரங்களில் பெண்களை பாம்பு கடித்துவிடுகிறது. இது குறித்து பஞ்சாயத்து தலைவர் விர் சிங் கூறுகையில்,''தண்ணீருக்காக பல முறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு தண்ணீர் கிடைக்குமா என்று தெரியவில்லை. மக்கள் அடிபம்பு மூலம் தண்ணீர் எடுக்கின்றனர். அதிலும் தண்ணீர் மிகவும் குறைவாக வருகிறது. இதனால் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கவேண்டிருக்கிறது'' என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.