கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குருவாக 12 ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்றுக் கொண்ட போப் பிரான்சிஸ், கிறித்தவ மக்களையும் கடந்து உலகில் அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்ட மனிதராக திகழ்ந்தார். அண்மையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவம் பெற்று வந்த போது, அவர் நலம் பெற வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் வேண்டினர். சமயத்தைக் கடந்து நல்லிணக்கம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றுக்காகவும் பாடுபட்ட போப் பிரான்சிஸ், இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில், “ கத்தோலிக்க திருச்சபை தலைவர் புனித போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவு அமைதியை விரும்புவோருக்கு ஒரு பெரிய இழப்பாகும். அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இரங்கல்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.