தமிழ்நாடு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சங்கத்தினருடன் சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொள்வதற்கு கல் குவாரிகள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு கடந்த வாரம் முதல் அமலுக்கு வந்தது. யூனிட் ஜல்லி விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் எம்-சாண்டு பி சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது. சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், கல்குவாரி, கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஏப்ரல் 25ம் தேதி நாளிட்ட மனுவில் தெரிவித்துள்ள கோரிக்கைகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனுவில் குறிப்பிட்டுள்ள பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதன்படி, கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் எம்-சாண்டு பி சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்யப்படும் என சங்கத்தினரால் ஏற்கப்பட்டது. சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அரசாணை ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.