சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை பரப்பிக் கொண்டே இருந்தால் இங்கே எப்படி இந்தியர் என்கிற ஒருமைப்பாடு உருவாகும்? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசப்பற்றோ தேசிய உணர்வோ இங்கே வளர முடியாத அளவுக்கு இங்கே சமூகப் பிளவினவாதத்தை செய்யக்கூடியவர்கள் பாஜககாரர்கள் தான். சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை பரப்பிக் கொண்டே இருந்தால் இங்கே எப்படி இந்தியர் என்கிற ஒருமைப்பாடு உருவாகும்? இது போன்ற தாக்குதல் நடக்கும் போது எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற பாஜகவினர் மதநல்லிணக்கத்தை சமூகநல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இதைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகிறது. அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று சொன்னதும் இவர்களுக்கு ஆத்திரம் வருகிறது. அரசமைப்புச் சட்ட குறிப்பு 370ஐ நீக்கிவிட்டால் காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்து விட முடியும் என்று பரப்புரை செய்தார்கள். அதேபோல நீக்கிவிட்டார்கள். ஜம்மு காஷ்மீரை இரண்டாக உடைத்து விட்டார்கள். சனநாயகம் தலைத்தோங்கி இருக்கிறது அமைதி பூத்துக்கிடக்கிறது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் என்ன நடந்திருக்கிறது?
பயங்கரவாதத்தை இவர்களால் ஒழிக்க முடிந்ததா? 1,80,000 ராணுவத் துருப்புகளை வேலையிலிருந்து வெளியேற்றி இருக்கிறார்கள் என்று மேஜர் ஜெனரல் ஒருவரே கூறியிருக்கிறார். அதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள். எதற்காக இந்த ஆட்குறைப்பை அவர்கள் செய்ய வேண்டும்? இந்த கேள்விகள் எல்லாம் எழுகிறது. பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள் பயங்கரவாதத்திற்கு இடம் கொடுத்துவிட்டது. அது தோல்வியடைந்துவிட்டது என்பதை நான் மட்டுமல்ல பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியே சொல்லியிருக்கிறார். முதலில் அவர்கள் சுப்பிரமணிய சாமிக்கு பதில் சொல்லட்டும் பிறகு அவர்கள் திருமாவளவனிடம் வரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.