கேன்ஸ் பட விழா ஜூரியாக இயக்குநர் பாயல் கபாடியா தேர்வு!
Dinamaalai May 01, 2025 08:48 PM

கேன்ஸ் பட விழா ஜூரியாக மும்பையைச் சேர்ந்த இயக்குநர் பாயல் கபாடியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மும்பையை சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்தில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹிருது ஹாருன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்தப் படம் 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரி விருதைப் பெற்று சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து கோல்டன் குளோப் விருதுக்கு, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.

இந்திய இயக்குநர் ஒருவர், கோல்டன் குளோப் விருதின் சிறந்த இயக்குநர் பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கோல்டன் குளோப் விருது கிடைக்கவில்லை. 

இந்நிலையில் 2025ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவின் ஜூரி உறுப்பினராக பாயல் கபாடியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து ஜூரிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். பிரெஞ்சு மற்றும் ஆங்கில நடிகை ஜூலியட் பினோஜ் தலைமையில், அமெரிக்க நடிகை ஹாலே பெரி, நடிகர் ஜெர்மி ஸ்ட்ராங்க், தென் கொரிய இயக்குநர் ஹாங் சன்சூ உள்ளிட்டோர்களுடன் பாயல் கபாடியாவும் ஜுரியாக இடம்பெற்றுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.