மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு 3 வயது சிறுமி ‘சந்தாரா’ எனப்படும் மதச் சடங்கில் பங்கேற்று உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாந்தாரா என்பது ஜைன் சமூகம் பின்பற்றும் ஒரு மதச் சடங்கு. இதில், ஒருவர் இறக்கும் நேரத்தில் சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் தியாக வாழ்க்கை வாழ்ந்து இறப்பது தான் நோக்கம்.
பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் சிகிச்சையளிக்க முடியாத நோயால் அவதிப்படும்வர்கள் மட்டுமே இதை பின்பற்றுவார்கள். ஆனால், தற்போது இந்த சடங்கில் பங்கேற்ற சிறுமி வியானா ஜெயின், தனது உயிரையே இழந்துள்ளார்.
இந்தூர் பகுதியைச் சேர்ந்த பியூஷ் மற்றும் வர்ஷா ஜெயின் தம்பதியின் மகளாக வியானா பிறந்தார். மூளையில் கட்டி காரணமாக 2024 டிசம்பரில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. முதலில் உடல்நிலை மேம்பட்டதுபோல் தெரிந்தாலும், பின்னர் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதில் தாயும், தந்தையும் சமண குரு ராஜேஷ் முனியிடம் ஆலோசனைக்குச் சென்றுள்ளனர். அப்போது, சிறுமி உயிரிழக்கப்போகிறார் எனத் தெரிவித்த குரு, சந்தாரா சடங்கை மேற்கொள்ள பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இதை ஏற்ற பெற்றோர், 30 நிமிட சடங்கில் சாந்தாரா நடைமுறை செய்துள்ளனர். பின்னர் மார்ச் 21 அன்று வியானா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பேசும் வியானாவின் தாய், “அவளுக்கு பசுக்களுக்கும், புறாக்களுக்கும் உணவளிப்பது மிகவும் பிடிக்கும். அதைப் போலவே, அவளது நினைவாக ஒரு மரம் நடுவது என் கனவு” என தெரிவித்துள்ளார். இது போன்ற மத சடங்குகளை குழந்தைகளுக்கு மேற்கொள்ளச்செய்வது ஏற்றதா? என்பது மீண்டும் விவாதமாகி வருகின்றது.
2015ல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் சந்தாராவை சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்தது. ஆனால், இந்திய உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பை நிறுத்தி வைத்ததால் சந்தாரா நடைமுறை இந்தியாவில் தொடரும் நிலையில் உள்ளது.