“நீதிக்காக வெளியில் வந்த நீதிபதி”…. நடக்க முடியாத தம்பதிக்கு சாலையிலேயே நீதி வழங்கிய மனிதநேயம் சம்பவம்…!!
SeithiSolai Tamil May 03, 2025 10:48 PM

நிஜாமாபாத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி நடக்க முடியாத நிலைக்குள்ளான ஒரு வயதான தம்பதிக்கு சாலையிலேயே நேரில் வந்து நீதியை வழங்கிய சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மருமகளின் வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய அந்த தம்பதியர், நீதி பெற நீதிமன்றம் வந்தபோதும், உடல்நிலை சரியில்லாததால் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில், நீதிபதி எசம்பெல்லி சாய் சிவா அவர்களை நேரில் சென்று சந்தித்து வழக்கை விசாரித்து, அவர்கள் மீது குற்றமில்லை என்பதை உறுதி செய்தார். தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டம் போதன் நகரில் 70 வயதை கடந்த கந்தபு சாயம்மா மற்றும் கந்தபு நடபி கங்காரம் என்ற தம்பதிகள், 2021-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த வரதட்சணை துன்புறுத்தல் வழக்கில் ஆஜராக இருந்தனர்.

வயதான தம்பதியின் மருமகள் அவர்களுக்கு எதிரான புகார் கொடுத்துள்ளார். ஆனால், 30 முறை விசாரணைக்குப் பிறகு அந்த வழக்கின் உண்மை தன்மை வெளிவந்தது. அன்றைய விசாரணைக்காக ஏப்ரல் 22ஆம் தேதி நீதிமன்றத்தை நாடிய தம்பதிகள், உடல் நல குறைவால் உள்ளே வர முடியாமல் தவித்தனர்.

அவர்களது நிலையை உணர்ந்த நீதிபதி, நேரடியாக வெளியில் வந்து விசாரணை நடத்தி தம்பதிகள் மீது குற்றமில்லை என உத்தரவு பிறப்பித்தார். அவரது இந்த செயல் நீதித்துறையின் நல்லெண்ணத்தையும், சமூகத்தின் மனிதநேயத்தை உயிர்ப்பிக்கச் செய்கிறது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பெரும் பாராட்டுக்களையும், கலந்துரையாடல்களையும் பெற்றுவருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.