பாகிஸ்தான் நேற்று இரவு குஜராத்தை குறி வைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தியாவின் 26 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா தொடர்ந்து முறியடித்து வருகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் எல்லையோரத்தில் அமைந்துள்ள ஐந்து மாவட்டங்களில் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் எஸ். ராஜ் குமார் தாப்பா உயிரிழந்ததாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறினார்.
இது தொடர்பாக உமர் அப்துல்லா தனது சமூல வலைதளப் பக்கத்தில், “ரஜௌரியிலிருந்து ஒரு துயரச் செய்தி. ஜம்மு-காஷ்மீர் நிர்வாக சேவைகளின் அர்ப்பணிப்புள்ள அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம். நேற்று அவர் துணை முதல்வருடன் சுற்றுப் பயணத்தில் இருந்தார். நான் தலைமை தாங்கிய ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டார். பாகிஸ்தான் ரஜொரி நகரத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில் அந்த அதிகாரியின் வீடு தாக்கப்பட்டது. எங்கள் கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் எஸ். ராஜ் குமார் தாப்பா கொல்லப்பட்டார். இந்த பயங்கரமான உயிரிழப்பு குறித்து எனது அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று கூறினார்.