தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், பொறுப்புடன் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைதளமான ட்விட்டரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களையும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
"முக்கிய இணைய பாதுகாப்பு எச்சரிக்கை: எப்போதும் இணைய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவும். ஆன்லைனில் கவனமாக இருங்கள் - தவறான தகவல்களையோ அல்லது பொறிகளையோ நம்ப வேண்டாம். தேசபக்தியுடன் இருங்கள், விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். #Digitalindia #OperationSindoor" என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இணைய பயனர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பதை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
செய்ய வேண்டியவை:
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், உதவி எண்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட நிவாரண தகவல்களை மட்டும் பகிரவும்.
செய்திகளைப் பகிர்வதற்கு முன்பு அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் சரிபார்க்கவும்.
தவறான செய்திகள் குறித்து உடனடியாக புகாரளிக்கவும்.
செய்யக்கூடாதவை:
ராணுவ வீரர்களின் நகர்வுகளைப் பகிர வேண்டாம்.
சரிபார்க்கப்படாத தகவல்களை அனுப்ப வேண்டாம்.
வன்முறையைத் தூண்டும் அல்லது வகுப்புவாத பதற்றத்தை அதிகரிக்கும் பதிவுகளை தவிர்க்கவும்.
எவ்வாறு புகார் அளிப்பது?
தவறான தகவல்களைப் பற்றி புகார் அளிக்க விரும்பினால், WhatsApp மூலம் 8799711259 என்ற எண்ணுக்கோ அல்லது socialmedia@pib.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.