பாகிஸ்தானில் எந்தெந்த ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது? இந்தியா தகவல் - நேரலை
BBC Tamil May 11, 2025 01:48 AM
Defence Ministry of India இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட புகைப்படங்கள்

இந்தியாவின் சிர்சா மற்றும் சூரத்கர் ஆகிய விமானப்படை தளங்களை தாக்கியதாக பாகிஸ்தான் அரசு கூறியதை இந்தியா மறுத்துள்ளது. அந்த தளங்கள் எவ்வித சேதமும் இன்றி பயன்படுத்த ஏதுவான நிலையில் இருப்பதை தேதி, நேரம் குறிப்பிட்ட புகைப்படங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவர் மீது மற்றொருவர் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

பாகிஸ்தான் அதிவேக ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், அவை அனைத்தையும் முறியடித்து விட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியதாகவும் இந்தியா கூறியுள்ளது.

இந்தியாவின் மேற்கு எல்லையோரப் பகுதிகளை பாகிஸ்தான் தாக்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இந்திய ராணுவத்தின் கூடுதல் பொதுத் தகவல் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அது வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று அதிகாலை 5 மணியளவில் அமிர்தசரஸில் உள்ள காசா கான்ட் மீது பல ஆயுதமேந்திய ட்ரோன்கள் பறந்து செல்வது காணப்பட்டது. எங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை முறியடித்தது," என்று கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மிக அருகேயுள்ள விமானப்படைத் தளத்தை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

தனது 3 விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. அதற்குப் பதிலடியாக ராணுவ தாக்குதலை தொடங்கிவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

'பாகிஸ்தானின் அதிவேக ஏவுகணைகளை இந்தியா முறியடித்தது' – கர்னல் சோபியா குரேஷி

இன்று (மே 10) நடந்த செய்தியாளர் சந்திப்பில், கர்னல் சோபியா குரேஷி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா மேற்கொண்ட பதில் தாக்குதல் குறித்து விளக்கினார்.

அப்போது, பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மேற்கு எல்லை நெடுகிலும் தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் டிரோன் ஊருவல்கள் மற்றும் கனரக ஆயுதத் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறினார்.

ANI கர்னல் சோபியா குரேஷி

அவரது கூற்றுப்படி, ஸ்ரீநகரில் இருந்து நலியா வரை 26 இடங்களில் வான் வழியாக ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன மற்றும் அவற்றில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டன.

பஞ்சாபில் உள்ள ராணுவ தளத்தில் அதிகாலை 1:40 மணிக்கு அதிவேக ஏவுகணை ஏவப்பட்டதாகவும் அதை இந்தியா செயலிழக்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல்கள் குறித்த தகவல்களையும் கர்னல் சோபியா குரேஷி பகிர்ந்து கொண்டார்.

"பாகிஸ்தான் வேண்டுமென்றே இந்திய இராணுவ நிலைகளை குறிவைத்த பிறகு, இந்திய ஆயுதப்படைகள் திட்டமிட்ட முறையில் பதிலடி தாக்குதல்களை நடத்தின. பாகிஸ்தானின் தொழில்நுட்ப கட்டமைப்புகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையங்கள், ரேடார் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் குறிவைக்கப்பட்டன."

"ரஃபிகி, முரித், சக்லாலா, ரஹிம்யார் கான், சுக்கூர் மற்றும் சுனியாவில் உள்ள பாகிஸ்தான் இராணுவ தளங்கள் துல்லியமான ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களால் தாக்கப்பட்டன." என்றார் அவர்.

பாகிஸ்தானின் பஸ்ரூரில் அமைந்துள்ள ரேடார் தளத்தையும் சியால்கோட்டில் உள்ள விமானப் போக்குவரத்து தளத்தையும் இந்தியா குறிவைத்ததாக கர்னல் குரேஷி கூறினார்.

பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்த அனைத்து பதிலடி நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டு, அது உறுதி செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நான்காவது நாளாக நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில், இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷி, இந்திய விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோருடன் இணைந்து இந்தச் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தானின் நடவடிக்கைகள் தொடர்ந்து ஆத்திரமூட்டும் வகையில் உள்ளன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது," என்று கூறினார்.

இந்தியாவின் இந்தத் தகவல்கள் குறித்து பாகிஸ்தான் இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதலா? Getty Images பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி (கோப்புப் படம்)

பாகிஸ்தானின் 3 விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

தனது 3 ராணுவ விமான தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்தக் கூற்றுகள் குறித்து இந்தியா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சியில் பேசும்போது, இதற்கு பாகிஸ்தான் ராணுவம் உரிய வகையில் "பதிலளிக்கும்" என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவின் பெரும்பாலான ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறினார். நாட்டின் படைகள் 'முழுமையாக தயாராக' இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் கூறும் விமானப்படைத் தளங்களில் ஒன்று, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் ஆகும்.

பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியா இதுவரை ஏதும் கூறவில்லை.

Getty Images பதிலடி தாக்குதலை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் தகவல்

இந்தியா மீது பதிலடி நடவடிக்கையை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது

பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை ஆகியவை இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையான ஐஎஸ்பிஆரின் கூற்றுப்படி, பாகிஸ்தான் இந்த பதிலடி நடவடிக்கையை 'ஆபரேஷன் பன்யன் மார்ஸ்' என்று பெயரிட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்தக் கூற்றுகள் குறித்து இந்தியா இதுவரை எதுவும் கூறவில்லை.

BBC ஜம்மு நகரத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்முவின் ரெஹாரி காலனியில் தாக்குதல்

ஜம்மு நகரத்தின் ரெஹாரி காலனி மீது நேற்றிரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்ததாகவும், பல வாகனங்களின் ஜன்னல்கள் உடைந்து போனதாகவும் உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை என்று மக்கள் கூறினர்.

உள்ளூர்வாசி ராகேஷ் குப்தா கூறுகையில், "ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது. அந்தப் பகுதி முழுவதும் புகையால் நிரம்பியிருந்தது. எங்கும் பயம் மற்றும் பீதி நிறைந்த சூழல் நிலவியது. பாகிஸ்தான் ஏன் சாதாரண மக்களைத் தாக்குகிறது?" என்றார்.

BBC பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் ரெஹாரி காலனியில் வாகனங்கள் சேதமடைந்தன.

பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி, சிலர் காயமடைந்துள்ளனர், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிபிசி குழு அங்கு இருந்தபோது ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் சம்பவ இடத்திற்கு வந்தார். ஆனால் போர் விமானங்கள் மேலே பறக்கத் தொடங்கிய போது அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது.

வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டதால், மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Getty Images ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பாக். தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அதிகாரி ஒருவர் பலி - உமர் அப்துல்லா

பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் ஒரு அதிகாரி உயிரிழந்ததாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "ராஜௌரியில் இருந்து சோகமான செய்தி. ஜம்மு-காஷ்மீர் நிர்வாக சேவையின் அர்ப்பணிப்புள்ள அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம். நேற்று அவர் துணை முதல்வருடன் மாவட்டத்தில் இருந்தார். எனது தலைமையில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்," என்று பதிவிட்டுள்ளார்.

ராஜௌரி மீது பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதாக உமர் அப்துல்லா கூறினார்.

"இன்று பாகிஸ்தான் ராஜௌரி நகரத்தை குறிவைத்து ஷெல் தாக்குதல் நடத்தியது. இதன் போது, கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாபாவின் வீடு குறிவைக்கப்பட்டு, தாக்குதலில் அவர் இறந்தார்." என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.