ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் எல்லை பகுதிகளுக்கு அருகே வசித்து வரும் மக்கள் பாதுகாப்பாக வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் இந்தியாவிலுள்ள சில பகுதிகளை குறி வைத்து அனுப்பிய ஏவுகணையை இந்திய ராணுவம் வீழ்த்தியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் நேற்றிரவு ஜம்மு, பூ ஞ்ச், ரஜோரி ஆகிய பகுதிகளில் ஷெல் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு அரசு அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய அரசு பஞ்சாபில் அமைந்துள்ள ஜலந்தல், அமிர்தசரஸ், பதிண்டா ஆகிய 3 பகுதிகளுக்கு ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
அதோடு பஞ்சாபின் 3 மாவட்ட நிர்வாகம் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதித்துள்ளது. மேலும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.