இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பக்கா சிஷ்டி என்ற கிராமத்தில் மாலை வேளையில் ஆழ்ந்த அமைதி நிலவுகிறது.
அந்த கிராம குருத்வாராவின் (சீக்கியர் கோவில்) ஒலிபெருக்கியில் ஒலிபரப்பப்பட்ட ரெஹ்ராஸ் சாஹிப் எனும் சீக்கிய மாலைப் பிரார்த்தனையின் ஒலி அந்த அமைதியை உடைத்தது.
ஒருவித உதவியற்ற சூழல் அந்த பகுதியைச் சுற்றிலும் காணப்படுகின்றது.
கிராமத்தின் வெறிச்சோடிய தெருக்களிலும், காலியான வீடுகளிலும் அமர்ந்திருந்த முதியவர்களின் முகங்களில் 'போர், இடப்பெயர்வு மற்றும் இழப்பு' பற்றிய பதற்றம் தெளிவாகத் தெரிந்தது.
வளைந்து செல்லும் சாலையின் அமைதியை அவ்வப்போது அங்கு கடந்து செல்லும் வாகனங்கள் குலைத்தன.
அந்த மாலைப்பொழுதில், கிராம மக்கள் குழந்தைகள் மற்றும் பெண்களை வாகனங்களின் மூலமாக அந்த எல்லையோர கிராமத்தில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள 'பாதுகாப்பான' கிராமங்களுக்கோ, இடங்களுக்கோ அழைத்துச் சென்றுகொண்டு, அல்லது அங்கிருந்து அவர்களை அழைத்து வந்துகொண்டிருந்தனர்.
ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கும், அதற்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கும் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
பஞ்சாபின் ஃபாசில்கா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் 3 பக்கங்களிலும் பாகிஸ்தான் எல்லை அமைந்திருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான 'போர் போன்ற சூழ்நிலையின்' காரணமாக பக்கா சிஷ்டி கிராம மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
கிராமத் தலைவர் சுக்தீப் சிங்கின் கூற்றுப்படி, கிராமத்தில் 1,425 வாக்காளர்கள் உள்ளனர்.
'நான் இங்கே தனியாக வசிக்கிறேன்'சூழ்நிலை மேலும் மோசமடையலாம் என்ற அச்சத்தால், கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குத் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அந்தக் கிராமத்தில் வசிக்கும் 75 வயதான சுர்ஜித் சிங், தனது வீட்டில் தனியாக இருந்தார்.
குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை எல்லையிலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் வசிக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பிவிட்டதாகவும், வீட்டையும் செல்லப்பிராணிகளையும் பாதுகாப்பதற்காக அவர் இங்கேயே தங்கியிருப்பதாகவும் கூறினார்.
"நான் இங்கே தனியாக வசிக்கிறேன். என் குடும்பத்தில் மூன்று பேரக்குழந்தைகள், ஒரு மகன், ஒரு மருமகள் மற்றும் எனது மனைவி உள்ளனர். அவர்கள் பயத்தின் காரணமாக தஹ்லி என்ற கிராமத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். அவசர காலங்களில் குழந்தைகள் இரவில் வெளியே செல்ல முடியாது என்ற பயம் உள்ளது. நாங்கள் குடும்பத்தை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது நான் தனியாக சமைத்து சாப்பிடுகிறேன்" என்று அவர் கூறுகிறார்.
இந்த மாலைப் பொழுது, சுர்ஜித் சிங்கின் தோளில் பேரக்குழந்தைகள் சிரித்துக் கொண்டே விளையாடும் வழக்கமான நாட்களைப் போல இல்லை.
வீட்டில் எப்போதும் இருந்த மகிழ்ச்சி இன்று இல்லை.
சுர்ஜித் சிங் தனது பேரக்குழந்தைகளின் நினைவில் மூழ்கியுள்ளார்.
"எனக்கு 70–80 வயதாகிவிட்டது. நான் இறந்தாலும் பரவாயில்லை. என் பேரக் குழந்தைகள் நன்கு வாழட்டும். நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். அவர்கள் , இன்னும் உலகைக் காண வேண்டியுள்ளது."என்கிறார் சுர்ஜித் சிங்.
1965 மற்றும் 1971-ஆம் ஆண்டு நடந்த போர்களையும் தான் பார்த்திருப்பதாக சுர்ஜித் சிங் கூறினார்.
அப்போதும் கூட, அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
அந்தப் போர் காலங்கள் குறித்து தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். "71-ஆம் ஆண்டு போரின் போது, நாங்கள் ஒன்றரை மாதங்கள் கிராமத்திலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினோம். வெளியில் தங்குவது கடினமாகிவிட்டதால், நாங்கள் திரும்பி வந்தோம். நாங்கள் வந்தவுடன், இரண்டாவது அல்லது மூன்றாவது நாளிலேயே போர் தொடங்கியது" என்றார்.
"1965 போரின் போது எனக்கு 13 வயது. கிராமத்தில் ஒரு குழாயில் குளித்துக் கொண்டிருந்தபோது ஒரு குண்டு வெடித்தது. நான் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தேன். அப்படியே நான் ஓடிவிட்டேன். பக்கத்து வீடுகளில் வசித்த கிராம மக்கள் எனக்கு துணிகளைக் கொடுத்தார்கள்" என்றும் அவர் விவரிக்கிறார்.
இதேபோல், கிராமத்தில் வசிக்கும் மற்றொருவரான பிரேம் சிங்கின் வீட்டுக்குச் சென்றபோது, அவரது மனைவி ஜீதோ பாயும் அவர்களது மகனும் அவருடன் இருந்தனர்.
பிரேம் சிங்கின் மருமகள் மற்றும் இரண்டு பேத்திகள் உட்பட குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், கிராமத்தை விட்டு வெளியே உள்ள மற்றொரு உறவினருடன் வசித்து வருகின்றனர்.
ஜீதோ பாய் தந்தைக்கும் மகனுக்கும் உணவு சமைத்து கொடுக்கிறார். ஒவ்வொரு இரவும் எல்லைக்குப் பின்னால் உள்ள ஒரு கிராமத்தில் இரவைக் கழித்துவிட்டு, காலையில் வீட்டு வேலைகளைச் செய்ய அவர் திரும்பி வருகிறார்.
"எங்கள் ஆண்கள் வீடுகளில் தங்குகிறார்கள். பெண்களாகிய நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்கிறோம், நாங்கள் குலாப் சிங் ஜுக்கா அல்லது ஆசா வாலா கிராமத்திற்குச் செல்கிறோம். இங்கே தூரத்து உறவினர்களும் இருக்கிறார்கள், நாங்கள் மற்றவர்களின் வீடுகளில் இரவைக் கழிக்கிறோம். காலையில் வீடு திரும்புகிறோம். நாங்கள் திரும்பி வரும்போது, இங்கு வசிக்கும் மக்களுக்கு உணவு சமைத்து எங்களுடன் எடுத்துச் செல்கிறோம்" என்று ஜீதோ பாய் கூறினார்.
பிரேம் சிங் இந்த சூழ்நிலையைக் கண்டு பயப்படுவதாகக் கூறுகிறார்.
"இந்த நேரத்தில் எல்லாரும் சமைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள்," என்று கூறும் அவர், "வீட்டை முழுவதுமாக காலியாகச் செய்ய முடியாது. உள்ளிருக்கும் பொருட்களை எங்கே வைத்துப் பாதுகாப்பது? சொந்தங்கள் வீட்டிலும் கூட போதுமான இடமில்லை."என்கிறார்.
'திரும்பி வருவதற்காகக் காத்திருக்கிறேன்'காஷ்மீர் சிங், அந்த கிராமத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
இப்போது நாள் முழுவதும் கடையில் ஆளே வராமல் வெறுமனே அமர்ந்திருக்கும் காஷ்மீர் சிங், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் திரும்பி வருவதற்காகக் காத்திருக்கிறார்.
முழு கிராமமும் காலியாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை என்றாலும், கடையையும் பொருட்களையும் விட்டு வெளியேற முடியாது என்று அவர் கூறுகிறார்.
இந்த கிராம மக்களின் உடமைகளை சேமித்து வைக்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்று அம்மக்கள் அரசாங்கத்திடம் புகார் கூறுகின்றனர்.
காஷ்மீர் சிங் 1971 போருக்கும் சாட்சியாக இருந்துள்ளார்.
அப்போதும், மாலையில் போர் வெடித்ததாகவும், அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
இரவில் குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது கடினமாக இருக்கும் என்றும், கிராமத்தில் உள்ள பெரியவர்கள் வீடுகளைக் காத்துக்கொள்ள அங்கேயே தங்குவதாகவும் அவர் கூறினார்.
நிலைமை மோசமடைந்தால், தாங்களும் வீடுகளைப் பூட்டிக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிடுவோம் என்றும், தேவைப்பட்டால், வீரர்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் தண்ணீர் கிடைக்க உதவுவோம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
"எங்கள் கிராமம் எல்லைக்கு மிக அருகில் உள்ளது. இது தான் கடைசி கிராமம். எனது கிராமத்தில் எனக்கு ஒரு கடை உள்ளது. இப்போது பொருட்களை எங்கே கொண்டு செல்வது? வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை. கிராமத்தில் யாராவது இருந்தால் தான், வாடிக்கையாளர்கள் வருவார்கள்" என்கிறார் காஷ்மீர் சிங்.
"குழந்தைகளும் இங்கிருந்து சென்றுவிட்டார்கள்.பெண்களும் வெளியேறிவிட்டார்கள். அந்த வீட்டில் ஒரே ஒரு முதியவர் மட்டுமே வசிக்கிறார்."
"யாராவது காலையில் வந்தாலும், மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்குப் பிறகு, அவர்கள் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கோ, அல்லது வேறு எங்காவதோ திரும்பிச் செல்கிறார்கள்."
"போர் நடக்கும் போதெல்லாம், நாங்கள் நிறைய கஷ்டப்படுகிறோம். பொருளாதார ரீதியாக ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் பின்தங்கி விடுகிறோம்" என்று அந்த கிராம மக்கள் கூறுகிறார்கள்.
பலமுறை அழிவைக் கண்ட இந்தக் கிராமம், இப்போது போர் தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறது.
இதுவரை நடந்தவை-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு