#featured_image %name%
பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை இன்று இந்திய அரசு உறுதிப் படுத்தியது. இன்று அதிகாலை போர் விமானங்களில் இருந்து ஏவப்பட்ட துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் விமானப்படைத் தளமான நூர் கான், ரஹாமி யார் கான், ரஃபிகி, முரித், சியால்கோட் மற்றும் இரண்டு ரேடார் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத ஒழிப்புப் போரில் இந்தியா இறங்கியுள்ளது. கட்நத ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ம் தேதி இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து துல்லிய தாக்குதலை மேற்கொண்டது. தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியப் பகுதிகளில் உள்ள பொதுமக்களையும் ராணுவ நிலைகளையும் நோக்கி தாக்குதல் தொடுக்க இப்போது இது போராக மாறியுள்ளது.
இந்நிலையில், இரு தரப்பு ராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி மற்றும் ராணுவத்தின் சார்பில் விங் கமாண்டர் ஆகியோர் தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
அவ்வாறு மே.10 இன்று காலை வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தபோது குறிப்பிட்டதாவது…
”பாகிஸ்தான் ராணுவம் தரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். அவர்கள் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். போர்ப் பதற்றத்தை சிக்கலாக்கும் நடவடிக்கைகளைத் தான் பாகிஸ்தான் எடுத்து வருகிறது; பொறுப்பான முறையில் இந்தியா பதிலடி கொடுக்கிறது.
பாகிஸ்தான் ராணுவம் தரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்!எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவல் தவறானது. இந்தியாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தான் வதந்திகளைப் பரப்புகிறது. எல்லைப் பகுதியில் ராணுவத்தை பாகிஸ்தான் அதிக அளவில் குவித்து வருகிறது.
பொதுமக்களைத் தாக்குவதே பாகிஸ்தானின் முக்கிய நோக்கம்!இந்திய ஆயுதப்படைகள் அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளன. பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை சிதைப்பதுதான் பாகிஸ்தானின் பிரதான நோக்கம். பாகிஸ்தான் இன்று அதிகாலை அதிவேக ஏவுகணைகளைக் கொண்டு பஞ்சாப் விமானப்படை தளத்தை தாக்க முயன்றது. மதத் தலத்தில் இந்தியா ஏவுகணைகள் வீசியதாக பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது – என்றுஅவர் கூறினார்.
மிகுந்த கவனத்துடன் பதிலடி!தொடர்ந்து கர்னல் சோபியா குரேஷி விளக்கம் அளித்த போது, “பாகிஸ்தான், அதிவேக ஏவுகணையைப் பயன்படுத்தி விமானப்படைத் தளத்தைத் தகர்க்க முயற்சி மேற்கொண்டது. மருத்துவமனை, பள்ளிகளிலும் தாக்குதல் நடத்தியது. பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை சிதைப்பது அவர்களது நோக்கம். ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. மிகுந்த கவனத்துடன் பதிலடி கொடுத்து வருகிறோம். எஸ்-400 பாதுகாப்பு கவசம் தாக்கப்படவில்லை. பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா முறியடித்துள்ளது.
பாகிஸ்தான் தனது வான் பரப்பை தவறாகப் பயன்படுத்துகிறது. எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. சியால்கோட்டில் உள்ள ராணுவத் தளம் மீது இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ரேடார் அமைப்புகள் தாக்கப்பட்டன. பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை சீண்டுகிறது. பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர் – என்று சோபியா குரேஷி கூறினார்.
நம் விமானத் தளம் பாதுகாப்பாக உள்ளது!விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் அளித்தபோது, “இந்திய விமானத் தளங்கள் உள்ள உதம்பூர், பதான்கோட் பகுதிகளில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராணுவத் தளவாடங்கள் இருக்கும் பகுதிகளை மட்டுமே குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
நம் விமான தளம் அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் பொய் கூறுகிறது. ஆனால் நம் விமானத் தளம் பாதுகாப்பாக உள்ளது” என்று வியோமிகா சிங் குறிப்பிட்டபோது, இந்தியாவின் சூரத்கர் விமானப்படைத் தளம் பாதுகாப்பாக இருப்பதை நிரூபிக்கும் வகையில், ‘டைம்ஸ்டாம்ப்’ உடன் கூடிய படங்களை, வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டார்.
பாகிஸ்தானின் நடவடிக்கைகள்தான் ஆத்திரமூட்டல் மற்றும் தீவிரப்படுத்தலை உருவாக்கியுள்ளன என்று நான் ஏற்கெனவே பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளேன். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா பொறுப்பான மற்றும் அளவிடப்பட்ட முறையில் பாதுகாத்து எதிர்வினையாற்றியுள்ளது. – என்று, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர் சந்திப்பின் போது விளக்கம் அளித்தார்.
News First Appeared in