#featured_image %name%
பதற்றத்தைத் தணிக்க நடந்த பேச்சுவார்த்தை அடிப்படையில், அமைதியைப் பேண இந்தியா முன் வந்ததாகவும், அதன் படி, இன்று மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் இரு தரப்பிலும் நிறுத்தப்படும் என்றும் முடிவு செய்துள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.
இந்திய பாகிஸ்தான் இரு தரப்பு ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் நிலவியது. இந்தியாவின் எல்லைப் பகுதியில் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதே நேரம் பாகிஸ்தானின் ராணுவத் தளங்களைக் குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதை அடுத்து நிலை குலைந்த பாகிஸ்தான், இரண்டு நாட்களாகவே இந்தியா தாக்குதலை நிறுத்த வேண்டும், அதற்கு உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும், இந்தியாவை தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்று கெஞ்சத் தொடங்கியது.
இந்நிலையில், இரு தரப்பும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரி ஜி7 நாடுகள் கூட்டறிக்கை வெளியானது. மேலும் அமெரிக்க மற்றும் சீன வெளியுறவு துறை செயலர், செய்தித் தொடர்பாளர்கள் பேச்சுவார்த்தைக்கு உதவுவதாகக் கூறினர். தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா பேசியதாகவும் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள ஒப்புக்கொண்டதாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூகத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி அளிப்பது தொடர்பாக பிரதமர் மோடி முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய அரசுஅதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், உளவுப்பிரிவு தலைவர்கள் அனைவருடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். மேலும், தற்போது எழுந்துள்ள சூழல்கள் குறித்தும், இதனை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், வருங்காலத்தில் இந்தியாவில் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் அனைத்தும் போராகவே கருதப்பட்டு, அதற்கு ஏற்ப பதிலடி கொடுக்கப்படும் என அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அப்போதே, இந்தத் தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்திக் கொள்ளப்படலாம் என்று அனுமானிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை பாரத வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், இரு தரப்பு தாக்குதல்கள் நிறுத்தம் பற்றி அறிவித்தார்.
அதன்படி, பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) நமது நாட்டு டிஜிஎம்ஓ., வை இன்று மாலை 3: 35 மணிக்கு அழைத்துப் பேசினார். அப்போது, இன்று மாலை 5:00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், துப்பாக்கிச்சூட்டையும் நிறுத்திக் கொள்வது என இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இது குறித்து இரு தரப்பும் உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இருநாட்டு டிஜிஎம்ஓ.,க்களும் வரும் 12ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பேசுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
News First Appeared in