முடிவுக்கு வந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல்:முடியாத போலி தகவல்கள்
BBC Tamil May 11, 2025 06:48 AM
Getty Images/SOPA Images

சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் இந்தியா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து பெறப்பட்ட வீடியோக்கள் என்று கூறி தவறான, போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டன. அந்த தகவல்களை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.

இந்திய ராணுவப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறியும், பாகிஸ்தானில் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய போர் விமானம் என்று கூறியும் பகிரப்பட்ட வீடியோக்களின் உண்மைத் தன்மை என்ன என்பதை ஆய்வுக்குட்படுத்தியது பிபிசி வெரிஃபை.

எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அப்படியான ஒரு வீடியோவை மூன்று நாட்களுக்கு முன்பே 4 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். பாகிஸ்தான் தாக்குதலால் ஏற்பட்ட விளைவு என்று கூறப்படும் அந்த வீடியோ உண்மையாக 2020-ஆம் ஆண்டு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த குண்டு வெடிப்பின் போது எடுக்கப்பட்டதாகும்.

உச்சக்கட்ட பதற்றம் மற்றும் மோசமான நிகழ்வுகள் அரங்கேறும் போது வெறுப்பு மற்றும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று நிபுணர் ஒருவர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.

தாக்குதல் தொடர்பாக பகிரப்பட்ட வீடியோக்களின் உண்மைத் தன்மை என்ன?

பெலிங்காட் விசாரணை இணையத்தின் நிறுவர், எலியோட் ஹிகின்ஸ் இது குறித்து பேசும் போது, "தாக்குதல் மட்டுமின்றி, முக்கியமான நிகழ்வுகள் அரங்கேறும் போது பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் மீண்டும் பார்ப்பது என்பது பொதுவான ஒன்றாகும்," என்று கூறுகிறார்.

அல்காரிதம் அடிப்படையில் செயல்படும் சமூக வலைதளங்கள், ஈர்க்கவைக்கும் வகையில் உள்ளடக்கத்தை வெளியிடும் நபர்களுக்கு வெகுமதி அளிக்கிறது. உண்மைத் தன்மை எதுவாக இருந்தாலும், போலியான, மோதல் மற்றும் பேரழிவுகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக ஈர்க்கக்கூடியவையாக உள்ளன.

பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் இந்தியா நடத்திய தாக்குதல்கள் மூலம் ஏற்பட்ட விளைவுகள் என்று கூறி எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவை 30 லட்சம் பயனர்கள் பார்வையிட்டுள்ளனர். இது மிகவும் வைரலான வீடியோக்களில் ஒன்று.

அந்த வீடியோவில் இடம் பெற்ற ஒரு காட்சியை கூகுளில் செலுத்தி ஆய்வு செய்த போது, அந்த வீடியோ 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி அன்று காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது எடுத்த உண்மையான வீடியோவுக்கு இட்டுச் சென்றது.

இந்திய தாக்குதலைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களை கூறும் விதமாக பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்த போதும், பாகிஸ்தானின் எதிர்வினை உண்மை நிலையைக் காட்டிலும் மிகவும் கடுமையானதாக சித்தகரிக்கும் வகையில் சில உள்ளடக்கங்கள் இருந்ததை பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த சில காணொளிகள் உறுதிப்படுத்தின.

இந்திய ராணுவத்தின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் ராணுவம் தாக்கி அழித்தது என்று கூறி வெளியான வீடியோவை 6 லட்சம் பேர் பார்வையிட்டனர். இருளில் வெடிப்பு நிகழ்ந்ததைக் காட்டும் அந்த வீடியோ, கடந்த மாத துவக்கத்தில் யூடியூபில் பகிரப்பட்ட, முற்றிலும் சம்பந்தமற்ற வீடியோ என்று தெரிய வந்தது.

X/Sulaiman Ahmed பாகிஸ்தானின் எதிர்வினை உண்மை நிலையைக் காட்டிலும் மிகவும் கடுமையானதாக சித்தகரிக்கும் வகையில் சில உள்ளடக்கங்கள் போலியாக பகிரப்பட்டன புகைப்படங்களின் உண்மைத்தன்மை என்ன?

காணொளிகள் மட்டுமின்றி புகைப்படங்களும் அதிக அளவில் கடந்த சில நாட்களாக பகிரப்பட்டு வருகின்றன. இந்திய விமானப்படைத் தளங்களை பாகிஸ்தானின் விமானப்படை இலக்காக வைத்து மே 6, 2025 அதிகாலை முன்னேறி வருவது போன்ற புகைப்படங்களும் அதில் ஒன்று.

டிரோன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தோன்றும் அந்த புகைப்படம் உண்மையில் பேட்டில்ஃபீல்ட் 3 என்ற வீடியோ கேமில் இருந்து எடுக்கப்பட்ட 'ஸ்க்ரீன்கிராப்' ஆகும்.

உள்ளூர் நேரப்படி, புதன்கிழமை காலை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை தாக்கி அளித்ததாக கூறியது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சில பயனர்கள், முற்றிலும் சம்பந்தமற்ற சில காணொளிகளை வெளியிட்டு, அது சேதப்படுத்தப்பட்ட இந்திய போர் விமானங்கள் என்று குறிப்பிட்டனர். அதில் சில வீடியோக்கள் மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

அதிகமாக பகிரப்பட்ட புகைப்படங்களில் இரண்டு உண்மையாகவே இந்திய போர் விமானங்கள் விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்டவையாகும். ஒன்று 2024-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்ததாகும். மற்றொன்று பஞ்சாப் மாநிலத்தில் 2021 ஆண்டு நிகழ்ந்ததாகும். இந்த இரண்டு விபத்துகள் குறித்து அதிக அளவில் செய்திகள் அப்போது வெளியிடப்பட்டன.

X/Sulaiman Ahmed அதிகமாக பகிரப்பட்ட புகைப்படங்களில் இரண்டு உண்மையாகவே இந்திய போர் விமானங்கள் விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்டவையாகும்

யார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திரஜித் ராய் இது குறித்து பேசும் போது, "பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இத்தகைய புகைப்படங்கள் உருவாக்கப்பட்டன," என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட வீடியோ ஒன்றும் கூட, நிகழ்ந்த சம்பவத்திற்கு முற்றிலும் சம்பந்தமற்ற ஒன்று என தெரிய வந்த பிறகு, சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

"எல்லைக்கு இரண்டு பக்கமும் போரை விரும்பும் அதீத தேசப்பற்றுக் கொண்டவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எக்ஸ் போன்ற பெரிய தளம் ஒன்று இருக்கிறது. உண்மையான செய்திகளைப் போன்றே போலியான செய்திகளும் உடனடியாக அதிக அளவில் பகிரப்படுகிறது. மற்றொரு தரப்பினர் மீது வெறுப்பை, விரோதத்தை, பகைமையைத் தூண்டும் வகையில் திரிக்கப்பட்டு பகிரப்படுகிறது."

காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாகவும் அதிக அளவில் போலியான, தவறான செய்திகள் இணையத்தில் பகிரப்பட்டன. கடந்த மாதம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு ஏ.ஐ. புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டன. அது உண்மையான சம்பவத்திற்கு நாடகத் தன்மை தரும் முயற்சியாக இருந்தது.

ஃபிரான்ஸ் 24-ல் பணியாற்றி வரும் செய்தியாளர் வேதிகா பால், "மோதலைச் சுற்றியுள்ள இரு தரப்பினரிடமிருந்தும் தவறான தகவல்களைப் பெறுவதற்கு பஹல்காம் தாக்குதல்கள் வழிவகை செய்தது," என்று தெரிவித்தார்.

பல தவறான செய்திகள் எக்ஸ் தளத்தில் இருந்து துவங்குகின்றன என்று அவர் கூறினார். "இறுதியில், அவை எக்ஸ் தளத்தில் இருந்து, தெற்காசியாவில் தொலை தொடர்புக்காக அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் செயலிகளுக்கு பயணிக்கிறது," என்று கூறினார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.