விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் திருவிழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகர் விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், கூவாகம் திருவிழா - 2025 விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் நேற்று மே 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகா் விஷால் மேடையிலிருந்து கீழே இறங்க முற்பட்டபோது திடீரென மயங்கி சரிந்தார். விழா ஏற்பாட்டாளா்கள் உடனடியாக மருத்துவரை வரவழைத்து, விஷாலுக்கு பரிசோதனை செய்து தீவிர சிகிச்சை அளித்தனா். உணவு மாற்றம் மற்றும் காற்று பற்றாக்குறையால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவா் தெரிவித்தாா்.
இதையடுத்து, விஷால் அங்கிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடியின் காரில் உடனடியாகப் புறப்பட்டுச் சென்றாா். முன்னதாக விழாவில் நடிகர் விஷால் திருநங்கைகள் அனைவரும் மதிப்புக்குரியவா்கள். அவா்கள் சமூகத்தில் உயா்ந்த நிலையை அடைய என்னால், முடிந்த உதவியை செய்து தருவேன். திருநங்கைகள் மக்கள் பிரதிநிதியாக தோ்வாகி சட்டப் பேரவைக்கு செல்ல வேண்டும். இதற்காக தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.