இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் சம்பவத்திற்கு பிறகு மோதல் போக்கு என்பது அதிகரித்தது. அதாவது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
இதனால் பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக வான்வெளியில் வைத்தே தடுத்தது. அதாவது இந்தியாவின் வான் பாதுகாப்பு மையம் பாகிஸ்தான் அனுப்பிய டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வானில் வைத்து முறியடித்தது. அதோடு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதற்காக அவர்களின் விமான தளங்கள் மற்றும் ராணுவத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட மூன்று நாட்களாக நடந்த தாக்குதலுக்கு பிறகு போர் ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்திய நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் விரிவாக பேச இருக்கிறார்கள்.
இதன் காரணமாக தற்போது பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய இல்லத்தில் முப்படை தளபதிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், அஜித் தோவால் ஆகியோரும் உடன் இருக்கிறார்கள். மேலும் இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையின் போது பாகிஸ்தானுடன் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது என்று தகவல் வெளிவந்துள்ளது.