'அமெரிக்கா மத்தியஸ்தம்': டிரம்ப் பேச்சுக்கு இந்தியா மௌனம் காப்பது ஏன்?
BBC Tamil May 13, 2025 12:48 PM
Getty Images இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தத்தில் தன்னுடைய பங்கு பற்றி பெருமிதப்படும் டொனால்ட் டிரம்ப்

பாகிஸ்தானின் விமானத் தளங்களைத் தாக்கி சேதப்படுத்தியதாகக் இந்தியா கூறினால், நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என பாகிஸ்தானும் இந்திய விமானத் தளங்களை தாக்கியதாக சனிக்கிழமையன்று (2025 மே 10) தெரிவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தில் இருந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவும், துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் தீவிரமாகச் செயல்பட்டனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று பிற்பகலில் முப்படைகளின் தலைவர்களை சந்தித்து கலந்தாலோசித்தார். அதனைத் தொடர்ந்து, 'எதிர்காலத்தில் எந்தவொரு தீவிரவாத சம்பவம் நடைபெற்றால் அது போர் நடவடிக்கையாக கருதப்படும்' என்று இந்தியா தெரிவித்தது.

பாகிஸ்தானுடனான தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் முதல் அறிகுறியாகவே இது பார்க்கப்பட்டது.

அன்று மதியம் 3:30 மணியளவில், பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ (ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்) இந்தியாவின் டிஜிஎம்ஓவுடன் தொலைபேசியில் பேசினார்.

அந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் நிலம், வான் மற்றும் நீர் பகுதிகளில் பரஸ்பரம் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டன.

ANI இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து ஞாயிற்றுக்கிழமை மாலை முப்படைகளின் சார்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு

இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைக்களுக்கான இயக்குநர் ஜெனரல்களின் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதையும், சண்டை நிறுத்த புரிந்துணர்வு உருவானது என்ற தகவலையும் உலகிற்கு முதலில் அறிவித்தது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்பது பலருக்கும் வியப்பாக இருந்தது.

சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான "சண்டை நிறுத்தத்தை" அறிவித்தார், "இரவு முழுவதும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு" அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 'சண்டை நிறுத்தம்' குறித்து வெளியான அறிவிப்பை முதலில் வெளியிட்டது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்பதும், இது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியாவதற்கு முன்பு வெளியிடப்பட்டது என்பதும் சர்வதேச அளவில் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியது.

டிரம்பின் பதிவுக்குப் பிறகு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் சமூக ஊடக தளமான எக்ஸில் 'சண்டை நிறுத்தத்தை' உறுதிப்படுத்தினார். அமெரிக்கா, செளதி அரேபியா, பிரிட்டன் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகள் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

இந்நிலையில் திங்கள் கிழமையன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்படவிருந்த அணு ஆயுதப் போரை தான் நிறுத்திவிட்டதாகக் கூறினார்.

அமெரிக்காவைப் பற்றி குறிப்பிடாத இந்தியா Getty Images இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி

இந்தியா-பாகிஸ்தான் மோதல் தொடர்பாக, இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அரசு தரப்பு நிலைப்பாடுகளை ஊடகங்களிடம் தெரிவித்து வருகிறார்.

விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை மாலை 5:45 மணிக்கு ஊடகங்களை சந்தித்துப் பேசினார். சண்டையை நிறுத்த இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவல்களை அவர் வழங்கினார்.

இந்திய டிஜிஎம்ஓவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ பேசியதாக கூறிய விக்ரம் மிஸ்ரி, அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது அவர், அமெரிக்காவையோ அல்லது வேறு எந்த நாட்டின் பெயரையோ குறிப்பிடவில்லை.

இதற்குப் பிறகு, பாகிஸ்தானுடனான மேலதிக பேச்சுவார்த்தைகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்தது.

அதற்குப் பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் 'சண்டை நிறுத்தத்தை' உறுதிப்படுத்தினார், 'தீவிரவாதம்' குறித்த இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒருமித்த கருத்து பற்றியும் குறிப்பிட்டார்.

மோதலை நிறுத்த அமெரிக்கா முன்வந்தது ஏன்?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் மேலும் அதிகரித்தால், பாகிஸ்தான் தீவிரமான சில நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்றும், அது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் அமெரிக்கா கருதியிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் சர்வதேச விவகாரங்களில் நிபுணருமான பேராசிரியர் சிந்தாமணி மகாபத்ரா கூறுகையில், "மோதல் அதிகரித்து பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைமை மோசமானால், அந்நாடு எந்த எல்லைக்கும் செல்லும் என்று அமெரிக்கா கவலைப்பட்டது. எனவே, டிஜிஎம்ஓ மூலம் இந்தியாவுடன் பேச பாகிஸ்தான் ராணுவத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருப்பதாகத் தோன்றுகிறது."

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் அதிகரித்ததால் கவலைப்பட்ட அமெரிக்கா, அதனால்தான் நிலைமை மோசமானதும், உடனடியாக அதில் தலையிட்டதாக இந்தியாவின் முன்னாள் தூதர் மற்றும் சர்வதேச விவகார நிபுணர் ராஜீவ் பாட்டியா நம்புகிறார்.

"இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாங்களும் தாக்குதலை நிறுத்திவிடுவோம் என்று இந்தியா பல்வேறு சமயங்களிலும் தெரிவித்துவந்தது கவனிக்கத்தக்கது. ஆனால் நிலைமை மேம்படாமல், மோசமாகிக் கொண்டே செல்வது தெளிவானது. இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை, எனவே இரு நாடுகளும் தாங்களாகவே தீர்வை எட்டவேண்டும் என்று அமெரிக்கா வெளியில் சொல்லிக் கொண்டாலும், திரைக்குப் பின்னால் மோதலைத் தடுக்க தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்காவின் இந்த தொடர் முயற்சிகளால்தான் சண்டை நிறுத்தம் புரிந்துணர்வு ஏற்பட்டது" என்று ராஜீவ் பாட்டியா கருதுகிறார்.

Getty Images இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய் (இடது) மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அகமது ஷெரீப் சவுத்ரி (வலது)

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அமெரிக்காவிற்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்தார். ஆனால், இந்தியா அமெரிக்கா குறித்து எதுவும் கூறவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.

இது குறித்து பேசும் பேராசிரியர் மகாபத்ரா, "இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும், சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் விரும்பினார். அதற்கு யாராவது தலையிட வேண்டும் என்று விரும்பியதால், அந்த முயற்சியை எடுத்த அமெரிக்காவுக்கு அவர் நன்றி தெரிவித்தார் என்பது தெளிவாகிறது. ஆனால் இந்தியா யாரிடமும் சண்டையை நிறுத்த தலையிடுங்கள் என கேட்கவில்லை" என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறார்.

"பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியது. இந்த நடவடிக்கை பாகிஸ்தான் ராணுவத்திற்கோ அல்லது பொது மக்களுக்கோ எதிரானது அல்ல, மாறாக தீவிரவாதத்திற்கு எதிரானது. எனவே, இந்தியா அமெரிக்காவிடம் மத்தியஸ்தம் செய்ய கேட்கவில்லை என்பதால், டிரம்புக்கு நன்றி தெரிவிக்கவில்லை" என்று அவர் கூறுகிறார்.

Getty Images இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது, விக்ரம் மிஸ்ரி தொடர்ந்து அரசாங்கத்தின் தரப்பை ஊடகங்களுக்கு முன் முன்வைத்து வருகிறார் காஷ்மீர் விவகாரத்தில் உள்நுழையும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மே 11 அன்று ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சண்டையை நிறுத்திக் கொண்டதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தானின் 'வலுவான தலைமைகளை' மீண்டும் ஒருமுறை பாராட்டினார்.

"ஆயிரம் ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய விஷயமாக தொடர்ந்து வரும் காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க இந்த இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன். இந்த பிரச்னை தீர்ந்தால் பிராந்தியத்தில் அமைதியும் செழிப்பும் நிலவும். இதனால் அமெரிக்கா மற்றும் உலகின் பிற நாடுகளுடன் வர்த்தகம் அதிகரிக்கும்!" என்று அந்தப் பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சண்டை நிறுத்தம் குறித்து தனது முதல் பதிவில் குறிப்பிட்டிருந்த டிரம்ப், இரண்டாவது பதிவில் காஷ்மீர் பிரச்னைக்கான தீர்வு குறித்து பேசியிருந்தார். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தத்தையும் ஏற்காது என்ற நிலையில் டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயாராக இருப்பதாக தானாகவே முன்வந்து சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'சண்டை நிறுத்தம்' தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்தார் என்றால், இந்தியா வெளியிட்ட எந்தவொரு பொது அறிக்கையிலும் அமெரிக்கா அல்லது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மத்தியஸ்தம் பற்றி குறிப்பிடவில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு முன்னுரிமை அளிப்பதை இந்தியா தவிர்த்து வருவதாக நம்பப்படுகிறது. அதே நேரத்தில், இந்த மோதலை நிறுத்தியதற்காக டொனால்ட் டிரம்ப் பெருமிதம் கொள்வது, இந்தியாவுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்துவதாக மாறிவிடக்கூடாது என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது பற்றி பேசும் ராஜீவ் பாட்டியா, "மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தற்போது அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவில்லை, மாறாக பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்துள்ளது, அதாவது பேச்சுவார்த்தைகளை எளிதாக்கியுள்ளது" என்று சொல்கிறார்.

ANI ஷாபாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்தார், இந்தியா அமெரிக்காவின் மத்தியஸ்தம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை மோதல் நிறுத்தத்தை டொனால்ட் டிரம்ப் முதலில் அறிவித்தது ஏன்?

தனது இரண்டாவது சமூக ஊடகப் பதிவில், காஷ்மீர் பிரச்னையை டிரம்ப் கோடிட்டுக் காட்டியுள்ளார். உண்மையில் இந்த பிரச்னை சர்வதேசமயமாக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் முடிவு குறித்த தகவல்களை முந்திக் கொண்டு தானே வழங்கும் டிரம்ப், காஷ்மீர் குறித்து கருத்து தெரிவிப்பதை எப்படி பார்ப்பது? அவர் இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுகிறாரா அல்லது அத்துமீறுகிறாரா என்ற கேள்வி எழுகிறது

டிரம்ப் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவரது வார்த்தைகளுக்கு இந்தியா எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதுதான் முக்கியமான விஷயம் என்று ராஜீவ் பாட்டியா கூறுகிறார்.

"சண்டை நிறுத்தம் பற்றிய தகவலை இரு நாடுகளுக்கும் முன்னதாக, டிரம்ப் முதலில் அறிவித்தது ஒரு வகையான அத்துமீறல்தான். ஆனால் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் அமெரிக்க ஊடகங்களை முந்திக் கொண்டு தகவல்களைப் பகிர்ந்து கொண்டு பெயரைத் தட்டிச் செல்ல டிரம்ப் முயற்சித்திருக்கலாம்" என்று ராஜீவ் பாட்டியா கூறுகிறார்.

"எதிர்காலத்தில் அனைத்துப் பிரச்னைகளும் விவாதிக்கப்படும் என்று கூறும் டிரம்ப், காஷ்மீர் குறித்தும் பேசப்படும் என்றும் கூறியுள்ளார், ஆனால் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று நினைக்கிறேன். டிரம்ப் ஒரு பெரிய மற்றும் முக்கியமான நாட்டை வழிநடத்துவதால், அவர் தனது தரப்பிலிருந்து இப்படி கூறியிருக்கலாம். இருந்தாலும், என்ன செய்ய வேண்டுமோ அதனை தனது விருப்பப்படியே இந்தியா செய்யும்" என்று பாட்டியா கருதுகிறார்.

Getty Images காஷ்மீர் குறித்த டிரம்பின் கருத்து இந்திய விவகாரங்களில் தலையிடுவதாக இருப்பதாக கருதப்படுகிறது

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் சர்வதேச விவகாரங்களில் நிபுணருமான பேராசிரியர் சிந்தாமணி மகாபத்ராவின் கருத்து இது: "காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாடு தலையிட விரும்பினால், அதற்கு இந்தியா மறுப்பு தெரிவிக்கும். ஆனால் தற்போதைய மோதல் காஷ்மீர் பற்றியது அல்ல, தீவிரவாதம் பற்றியது."

"சண்டை நிறுத்தம் தொடர்பான தகவலை டொனால்ட் டிரம்ப் முதலில் அறிவித்திருந்தாலும், அதனால் இந்தியாவிற்கு எவ்விதத் தீங்கும் ஏற்படவில்லை. டிரம்பின் தலையீடு அல்லது அவரது அத்துமீறல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் அரசியல் சார்ந்தவை என்பதால், டிரம்ப் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானின் எதிர்வினைகளை ஒப்பிட முடியாது" என்று பேராசிரியர் சிந்தாமணி மகாபத்ரா கூறுகிறார்.

அப்படியானால், அமெரிக்காவின் முயற்சிகளை இந்தியா புறக்கணிக்கிறதா அல்லது குறைத்து மதிப்பிடுகிறதா? என்ற கேள்விக்கு அப்படி ஏதுமில்லை என்று அரசியல் நிபுணர்கள் பதிலளிக்கின்றனர்.

இது குறித்து தனது கருத்தைத் தெரிவிக்கும் சர்வதேச விவகார நிபுணர் ஸ்துதி பானர்ஜி, "அமெரிக்காவின் முயற்சிகளை இந்தியா குறைத்து மதிப்பிடுவதாக தோன்றவில்லை. பேச்சுவார்த்தைக்கான உதவியை நாம் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மட்டுமே பேச்சுவார்த்தைகள் இருக்கும் என்பதை இந்தியா தெளிவுபடுத்துகிறது. அதனால்தான் அமெரிக்காவின் அறிக்கைகள் குறித்து எந்த பொதுக் கருத்தையும் இந்தியா தெரிவிக்கவில்லை" என்று கூறுகிறார்.

டொனால்ட் டிரம்ப் ஏன் காஷ்மீர் பற்றி குறிப்பிட்டார்?

காஷ்மீர் பிரச்னையைக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதைத் தீர்ப்பதில் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். இந்த முயற்சியை இந்தியா வரவேற்கலாம் என்றாலும், காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் தரப்பின் தலையீட்டை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா என்று சொல்லிவிடமுடியாது என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச விவகார நிபுணர் ஸ்துதி பானர்ஜி கூறுகையில், "அமெரிக்க அதிபர், ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாகவும், மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவது பற்றியும் ஏற்கனவே பேசியுள்ளார். இப்போது அவர் காஷ்மீர் பற்றிப் பேசியுள்ளார், இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னை. எந்தவொரு மூன்றாவது நாட்டின் தலையீட்டையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது" என்று அவர் சொல்கிறார்.

இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்க அதிபர் ஒருவர் தலையிடுவது இது முதல் முறை அல்ல.

Getty Images காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நாட்டின் தலையீட்டையும் இந்தியா ஏற்பதில்லை

கார்கில் போரின் போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமெரிக்கா அதிபர் பில் கிளிண்டனை சந்தித்து இந்தியாவுடனான போர் நிறுத்தத்தைக் கோரினார். இந்த விவகாரத்தில் தலையிட்ட பின் கிளிண்டன், போரை நிறுத்த வேண்டும் என்று அடல் பிஹாரி வாஜ்பாயை கேட்டுக் கொண்டார். இதன் பின்னர், கார்கில் போரில் இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.

டொனால்ட் டிரம்பிற்கு முன்பே அமெரிக்க அதிபர்கள் பலர் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட முயன்றபோதிலும், இந்தியா அத்தகைய முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பேராசிரியர் சிந்தாமணி மகாபத்ரா, "டொனால்ட் டிரம்பிற்கு முன்பே, பல அமெரிக்க அதிபர்கள் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட முயன்றுள்ளனர். காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து வற்புறுத்தி வரும் நிலையில், இந்தியா அதை ஏற்கவில்லை. காஷ்மீர் பிரச்சினையில் எந்த வெளிப்புற தலையீட்டையும் இந்தியா இப்போது ஏற்றுக்கொள்ளாது" என்று கூறுகிறார்.

காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சியின் அறிகுறியாகவே அமெரிக்க அதிபரின் கருத்தை புரிந்துக் கொள்ளலாம் என்று நிபுணர்கள் நினைக்கின்றனர்.

"காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்குவது பாகிஸ்தானின் விருப்பம். அந்த விருப்பம் நிறைவேறுவதற்கான உதவியை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா செய்வதன் அறிகுறியாக டிரம்பின் கருத்தை கருதலாம்" என்று மஹாபத்ரா கூறுகிறார்.

"காஷ்மீர் விஷயத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும். எனவே, காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச விரும்புவதாக உலகுக்குக் காட்ட பாகிஸ்தான் முயற்சிக்கிறது, ஆனால் அதை இந்தியா விரும்பவில்லை" என்று மகாபத்ரா கருதுகிறார்.

மத்தியஸ்தம் செய்வதில் டிரம்ப் தீவிரமாக இருக்கிறாரா?

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் பேராசிரியர் மகாபத்ரா, "காஷ்மீர் குறித்த டிரம்பின் இந்த கருத்து தீவிரமானது அல்ல. டொனால்ட் டிரம்பின் நோக்கங்கள் தவறல்ல. அவர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது பற்றிப் பேசுகிறார். அவரது நோக்கம் சரியானது என்றாலும், அதிக தீவிரம் இல்லாதது" என்று சொல்கிறார்.

பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவுகளுக்கும், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவுகளுக்கும் வித்தியாசம் உள்ளதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இரு நாடுகளுடனும் தனது உறவுகளைப் பேணுவதில் அமெரிக்காவிற்கும் பல சவால்கள் உள்ளன.

"பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவுகளில் இந்தியாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு சில பிரச்னைகள் உள்ளன, பாகிஸ்தானில் இருந்துவரும் தீவிரவாதச் செயல்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இதில் அமெரிக்கா எவ்வாறு உதவ முடியும் என்பதுதான் முக்கியமானது" என்று ஸ்துதி பானர்ஜி கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.